உலகின் மிகப் பிரம்மாண்டமான கலைப் பெட்டகம் "பிரிட்டிஷ் அருங்காட்சியகம்"

Report Print Maru Maru in கலை
உலகின் மிகப் பிரம்மாண்டமான கலைப் பெட்டகம்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

உலக வரலாற்றின் 80 லட்சத்திற்கும் மேலான சேகரிப்பை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு பிரம்மாண்டமான கலைப் பெட்டகம் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.

மனிதன் உருவான காலத்திலிருந்து இப்போது வரையிலான வரலாறு, கலை, கலாச்சாரம் தொடர்பான ஆதாரங்களையும், வேலைப்பாடமைந்த வினோத பொருள்களையும், கதை ஆவணங்களையும் அதிக அளவிலும் விரிவான முறையிலும் விளக்கும் உலக வரலாற்றின் ஒரு வாழ்விடம் என்றே இந்த அருங்காட்சியத்தை சொல்லலாம்.

advertisement

ரோம், எகிப்து, ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா என அனைத்துக் கண்டங்களிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களை அதன் கடந்தகால எச்சங்களோடு விளக்கும் வகையில், தனிதனி காலரிகள் தனிதனி பெயரோடு இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

உலகில் இப்போது இருக்கும் அருங்காட்சியங்களில் பெரியதாக இதுவே கருதப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் 1753ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. முதன்முதலாக பார்வையாளர்களுக்கு 1759 ஜனவரி 15 ல் திறந்துவிடப்பட்டது.

தளகர்த்தா ஹான்ஸ் ஸ்லோன்

அருங்காட்சியத்தில் உள்ள 71 ஆயிரம் சேகரிப்புகள், இயற்பியலாளரும் அறிவியலாளருமான சர் ஹான்ஸ் ஸ்லோன்(1660- 1753) ஆர்வம், செயல் மற்றும் திட்டத்தால் திரட்டப்பட்டது.

அதில் 40 ஆயிரம் அச்சிட்ட புத்தகங்கள், 7 ஆயிரம் கையெழுத்துப் பிரதிகள், 337 தொகுதி உலர்ந்த தாவரங்கள், இயற்கை வரலாற்று படிமங்கள்(Specimen), ஆல்பிரெக்ட் டியுரே உட்பட்ட பலரது ஓவியங்கள், தொல்பொருள்கள் என சூடான், எகிப்து, கிரீஸ், ரோம், அண்மை மற்றும் தூர கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்தும் அவரால் பெறமுடிந்தது.

அதனால், இவரே அருங்காட்சியகத்தின் அடிப்படை கர்த்தாவாக போற்றப்படுகிறார். ஆனால், அருங்காட்சியகம் முழுவடிவம் பெறும்போது அதைப்பார்க்க அவர் உயிருடன் இல்லை.

உலக அருங்காட்சியகமாக உருவெடுப்பு

ப்ளூம்ஸ்பரியில் உள்ள மாண்டேகு மாளிகையில்தான் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு கட்டடத்தில் மட்டும் சாதாரணமாகவே கருவானது. பிறகு, பிரிட்டிஷின் காலனி ஆட்சியில் பல நாடுகளின் அரிதான வரலாற்று பொக்கிஷங்கள் அவர்களுக்கு எளிதாக பேரளவில் கிடைக்க, திருவானது. அதனால், பல கிளைக்கட்டடங்களை அருகிலும் வெளியிலும் உருவாக்கினர்.

இங்கிலாந்து மியூசியம் என்ற வட்டத்தை தாண்டி, உலகப்பெரும் மியூசியமாக உருவெடுத்தது. இதில் 1881 ல் இயற்கை வரலாற்று மியூஸியமாக தென் கென்ஸிங்டனில் ஏற்படுத்தப்பட்ட முதல் கிளை முக்கியமானது.

1895 ல் மியூஸிய கட்டடத்தைச் சுற்றிலும் இருந்த 5 தெருக்களில் (கிரேட் ரூசல் தெரு, மாண்டேகு தெரு, மாண்டேகு இடம், பெட்ஃபோர்ட் சதுக்கம், ப்லூம்ஸ்பரி தெரு) அருகிலிருந்த 69 கட்டடங்களை விலைக்கு வாங்க மியூஸியம் டிரஸ்டுக்கு, பாராளுமன்றம் 2 லட்சம் டாலர் கடனாக கொடுத்தது.

அதன்பிறகே, மியூஸியம் பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த அருங்காட்சியகம் பழைய கட்டடங்களை இடித்து முன்பு இருந்ததைவிட சிறப்பாகவும், சிறிய பகுதிகளை விசாலமாகவும் காலத்திற்கு ஏற்ப இப்போதுவரை நவீனப்படுத்துகிறார்கள்.

நிர்வாகம்

25 உறுப்பினர்கள் கொண்ட ட்ரஸ்ட் இதை நிர்வகிக்கிறது. அரசுடன் அந்த அமைப்பே மியூஸியம் பற்றி தொடர்புகொள்கிறது. ட்ரஸ்ட் உறுப்பினர்கள் அரசால் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பிரம்மாண்ட நூலகம்

அருங்காட்சியகத்தில் நூலகம் முக்கிய அங்கம். பாரிஸ் நேஷனல் நூலகத்துக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய நூலகம் இதுதான். 1857 ல் கட்டடகலை நிபுணர் சிட்னி ஸ்மிர்க் 40 மீட்டர் பரப்பளவில் ஒரு வட்டமான படிப்பறையை இங்கு உருவாக்கினார். இது அருங்காட்சியத்தின் பிரம்மாண்டங்களில் ஒன்று.

ரோமில் உள்ள பாந்தியன் குவிமாடத்துக்கு அடுத்து இதுவே உலகின் இரண்டாவது பெரிதாகும்.அருங்காட்சியத்தின் மத்திய பகுதி 2001 ல் மறுபெரிதாக்கம் செய்யப்பட்டது. அதற்கு பெரிய முற்றம்(The Great Court) என பெயரிடப்பட்டது. அது ஒரிஜினல் படிப்பறையை மையாமாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது.

advertisement

அரிதான சேகரிப்புகள்

கி.மு.1000 க்கும் முற்பட்ட எகிப்து மம்மிகள் இங்கு இன்னும் பாதுகாக்கப்படுகின்றன. வினோதமான விலங்குகளின் படிமங்கள், ஆதிகால மனிதர்களின் படிமங்கள், உயிரோட்டமான சிற்பங்கள், வியப்பான ஓவியங்கள்,

கற்கால மற்றும் உலோக கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், சில ஆச்சரியப்பட வைக்கும் அதிக உயரமுள்ள மனிதர்களின் தடயங்கள், அவர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், உடைகள், பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய போர்சலின் பாத்திரங்கள்,

நாணயங்கள், ஆட்சிமுறை குறிப்புகள், போர், விளையாட்டு, இலக்கியம், வணிகம், கலை, கலாச்சாரம், திருவிழா தொடர்பான பொருள்கள் என அனைத்து கண்டங்களின் வரலாற்று தடங்களும் இங்கு வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. அவைகளை முற்றிலும் பார்த்து ரசிப்பது ஓரிருநாளில் முடிவதல்ல.

வரலாற்றின் வாழ்விடம்

லண்டனின் மத்தியில் உள்ள ப்லூம்ஸ்பரி பகுதியில் ஒரு பெரிய அரண்மனை போல கம்பீரமாக இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

இதற்கு கலைநுட்ப வேலை கொடுத்தவர்கள் ரொசெட்டா ஸ்டோன், இஸபெல்லா ப்ராண்ட் ஆகியோர். வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 10 மணியிலிருந்து மாலை 5.30 வரையிலும் பார்வையாளர்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

கவர்ந்த சாதனை

பிரிட்டிஷ் அருங்காட்சியக இணையதளத்தை 2013 ல் மட்டும் 1.95 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள், அது முந்தைய ஆண்டைவிட 47 சதவீதம் அதிகரிப்பாகும். அதே ஆண்டில் 67 லட்சம் பார்வையாளர்கள் நேரில் வந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 20 சதவீதம் அதிகமாகும்.

உலகை ஆண்ட புத்திசாலித்தனம் அதன் வரலாற்றுப் புதையல்களை பொக்கிஷமாக்கி வைத்திருப்பதிலும் தெரிகிறது.

மேலும் கலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments