மணமகன், மணமகள் தேர்வு செய்யும் போது ஜாதகத்தில் கவனம் கொள்ள வேண்டியவை

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்
0Shares
0Shares
lankasri.com

பெற்றோர்கள் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ வாழ்க்கை துணையை ஜாதக ரீதியாக தேர்ந்தெடுக்கும் பொழுது, நட்சத்திர பொருத்தம் எனும் ஒரு அமைப்பையும், செவ்வாய், ராகு கேது என்ற அமைப்பை மட்டுமே கருத்தில் கொண்டு வரனையோ அல்லது வதுவையோ தேர்ந்தெடுக்கின்றனர்.

ஆனால் இவற்றையும் தாண்டி ஜாதக ரீதியாக சில விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

மணமகன் தேர்வு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

ஜாதகனுக்கு லக்கினம் எனும் முதல் வீடு எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது, அதாவது லக்கினம் 6,8,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது லக்கினம் நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகன் மிகச்சிறந்த நல்ல குணங்களை பெற்று இருப்பான், மேலும் உடல் நிலை எப்பொழுதும் நன்றாக இருக்கும், தீய பழக்க வழக்கங்கள் அற்றவனாக இருப்பான், ஜாதகனுக்கு வாழ்க்கையில் சுயமாக முன்னேற்றம் பெரும் அமைப்பை தரும்.

ஜாதகனுக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க படக் கூடாது, அதாவது லக்கினம் 6,8,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகனுக்கு நிலையான வருமானம், இனிமையாக பேசும் தன்மை, மனைவியை உயிருக்கு உயிராக நேசிக்கும் தன்மை, நல்ல பாரம்பரிய குடும்பத்தை சார்ந்த அமைப்பு, மனைவியிடம் இறுதிவரை அன்பு மற்றும் பாசம் வைக்கும் தன்மை என ஜாதகர் பல சிறப்பு அம்சங்களை கொண்டு இருப்பார்.

ஜாதகனுக்கு பூர்வ புண்ணியம் ஸ்தானம் எனும் ஐந்தாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்கப்படக் கூடாது, பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகனுக்கு தன் குலம் விளங்க புத்திரன் கிடைப்பான். மேலும் ஜாதகனுக்கு பரதேஷ ஜீவனம் அமையாது . சிறு துன்பம் வந்தாலும் பல பேர் உதவி செய்வார்கள்.

(சில பேர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு கேது அமர்ந்தால் புத்திரன் இல்லை என்று சொல்வார்கள், இது தவறான கருத்து ரிஷபம் , மிதுனம் ,கடகம்,கன்னி, துலாம்,தனுசு,மீனம் ஆகிய ராசிகள் பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்து இங்கு ராகு கேது அமர்ந்தால் பூர்வ புண்ணிய ஸ்தானம் 100 சதவிகிதம் நன்றாக இருக்கும் என்பதை நினைவில் கொள்க .

ஜாதகனுக்கு சத்துரு ஸ்தானம் எனும் ஆறாம் வீடு நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்படி நல்ல நிலையில் இருக்கு அமைப்பை பெற்ற ஜாதகன் தனது மனைவியை எந்த நிலையிலும் கைவிட மாட்டான், மேலும் வாழ்க்கையின் இறுதிவரை தம்பதியினர் இருவரும் இணை பிரியாத நிலை தரும்.

களத்திர பாவகம் எனும் ஏழாம் வீடு எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது , அதாவது லக்கினம் 6,8,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, இந்த களத்திர பாவகம் நன்றாக இருந்தால் ஜாதகருக்கு தனது மனைவி தன் உடலில் ஒரு பாதி என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும், மற்ற பெண்களை தனது தாயாகவும், சகோதரியாகவும் பாவிக்கும் தன்மை உள்ளவராக காணப்படுவார்.

தனது வாழ்க்கை துணைக்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் கொண்டவராக இருப்பார், கணவனும் மனைவியும் அன்யோன்யமாக குடும்பம் நடத்தும் தன்மை அமையும், இல்லற வாழ்க்கை எப்பொழுதும் மகிழ்ச்சி பொங்கும்.

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீடு மிகவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் தனது மனைவியின், அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் திறன் ஜாதகருக்கு ஏற்படும், திருமணத்திற்கு பிறகு விரைவான முன்னேற்றம் பெற இந்த ஜீவன ஸ்தானம் மிக நன்றாக இருப்பது முக்கியம், மேலும் நிரந்தர தொழில் அமையும் நல்ல குண இயல்பை ஜாதகர் கொண்டிருப்பார்.

மேற்கண்ட ஸ்தானங்கள் ஒரு ஜாதகனுக்கு நன்றாக இருக்கும் பட்சத்தில் , ஜாதகனை 100 சதவிகிதம் நம்பி தனது மகளை பெற்றோர்கள் கன்னிகா தானம் செய்து வைக்கலாம்.

அப்படி செய்தால் நிச்சயம் திருமணத்திற்கு பிறகு இருவரும் வாழையடி வாழையாக வளமுடன் வாழ்ந்திருப்பார்கள்.

வதுவை (மணமகளை) தேர்ந்தெடுக்கும் பொழுது பிள்ளையின் பெற்றோர்கள், மணமகளின் ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

ஜாதகிக்கு லக்கினம் எனும் முதல் வீடு எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது, அதாவது லக்கினம் 6,8,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது லக்கினம் நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகி மிகச்சிறந்த நல்ல குணங்களை பெற்று இருப்பாள்.

மேலும் உடல் நிலை எப்பொழுதும் நன்றாக இருக்கும் , மற்றவர்களை அனுசரித்து செல்லும் தன்மை ஏற்ப்படும். கணவனின் குறிப்பறிந்து செயல்படும் தன்மை ஜாதகிக்கு இயற்கையிலே அமைந்திருக்கும், கணவனின் சொல்படி அடங்கி நடக்கும் தன்மையும் , கணவனிடம் நல்ல பாசமும் பற்றும் கொண்டவளாக இருப்பாள்.

வருமுன் உணரும் தன்மை ஜாதகிக்கு இயற்கையிலே அமைந்திருக்கும். சமயோசித புத்திசாலித்தனம் கொண்டவளாகவும், சரியான நேரத்தில் கணவனுக்கு நல்ல யோசனை சொல்லும் புத்திசாலியாகவும் இருப்பாள்.

ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்கப்படக் கூடாது, அதாவது லக்கினம் 6,8,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகி கணவனின் மனம் அறிந்து செயல்படும் தன்மை வாய்க்கும், தன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக பிரயோகிக்கும் தன்மை ஏற்ப்படும்.

இனிமையாக பேசி கணவனை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்திருக்கும் தன்மை ஏற்படும், பொருளாதார ரீதியாக கணவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கூட ஜாதகி தீர்த்து வைக்கும் ஆற்றல் பெற்றவளாக காணப்படுவாள், சேமிக்கும் பழக்கம் சிறு வயது முதலே ஜாதகிக்கு அமைந்திருக்கும், தனது கணவனின் வருமானம் அறிந்து சிக்கனமாக செலவு செய்பவளாக இருப்பாள், குடும்பத்தை அனுசரித்து செல்லும் தன்மை கொண்டவளாகவும், எவ்வித சூழ்நிலையிலும் தனது கணவனை விட்டு பிரியாத குணம் கொண்டவளாக இருப்பாள் இதுவே இவர்களின் சிறப்பு அம்சம்.

ஜாதகிக்கு சுக ஸ்தானம் எனும் நான்காம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது, சுக ஸ்தானம் எனும் நான்காம் வீடு நல்ல நிலையில் இருந்தால் ஜாதகி பெரியவர்கள் போற்றும் குணம் கொண்டவளாகவும், கற்பு நெறியில் சிறந்து விளங்குபவளாகவும், சகல வசதிகளையும், நிறைவான மனமும் , மற்றவர்க்கு உதவும் மனப்பான்மையும் , சொத்து சுக சேர்க்கை கொண்டவளாகவும் இருப்பாள்.

தன் கணவனின் மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் இழுக்கு வராத செய்கையை கொண்டவளாக இருப்பாள், குழந்தைகளை பேணி பாதுகாக்கும் தன்மை கொண்டவளாகவும் அன்பால் குழந்தைகளை ஆதரிக்கும் தன்மை கொண்டவளாக காணப்படுவாள், அன்பை மட்டுமே மூலதனமாக கொண்ட பண்புடைய சிறந்த பெண்ணாக காணப்படுவாள் .

ஜாதகிக்கு பூர்வ புண்ணியம் ஸ்தானம் எனும் ஐந்தாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்கப்படக் கூடாது, பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே, பிறக்கும் குழந்தை நிறைந்த யோக சாலியாக இருக்கும், தனக்கு பிறக்கும் குழந்தை பல உயரிய பண்புகளையும், இறைநிலை அருளை எப்பொழுதும் தன்னகத்தே கொண்ட குழந்தையாகவும் இருக்கும் , ஜாதகிக்கு உதவி செய்ய உறவினர்கள் பலர் எப்பொழுதும் தயாராக இருப்பார்கள், நல்ல குடும்பத்தை சார்ந்தவராக ஜாதகி இருப்பார் .

களத்திர பாவகம் எனும் ஏழாம் வீடு எந்த விதத்திலும் பாதிக்கப் படக் கூடாது, அதாவது லக்கினம் 6,8,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, இந்த களத்திர பாவகம் நன்றாக இருந்தால் மட்டுமே கணவனுடன் எப்பொழுதும் சேர்ந்திருக்கும் தன்மை ஏற்ப்படும்.

கணவன் செய்யும் தொழில் அதிக பங்களிப்பை செய்யும் குணமும் , கணவனுக்கு எப்பொழுதும் உறுதுணையாகவும், தன்னம்பிக்கை அளிப்பவளாகவும் ஜாதகி இருப்பார், குடும்ப வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கும் மனப்பான்மை உள்ளவராக இருப்பார், கணவனின் ஒரு பாதியாக உணரும் தன்மை ஜாதகிக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.

கணவனின் முன்னேற்றத்தில் அதிக பங்கு வகிக்கும் பேரு பெற்றவர்கள், களிமண்ணையும் சிலையாக மாற்றும் சக்தி படைத்தவர்கள். சமுதாயத்தில் தனது கணவனை மிகசிரந்தவனாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்கள்.

ஜாதகிக்கு 8 ம் வீடு தனது கணவனின் உடல்நிலையையும், மன நிலையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மை இந்த பாவக வழியில் இருந்தே செயல்படும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இந்த 8 ம் வீடு 100 சதவிகிதம் நன்றாக இருப்பது மிக முக்கியம் கணவனுக்கு நீண்ட ஆயுளை தருவதே இந்த பாவகம் தான், ஆண்கள் எவ்வளவு பாவம் செய்தாலும் அவர்களின் உயிரை காப்பாற்றி வைப்பதே இந்த பாவகம் தான் என்பதை, பெண்களுக்கு துன்பம் விளைவிக்கும் ஆண்கள் அனைவரும் உணர வேண்டும்.

ஜாதகிக்கு 12 ம் வீடு 100 சதவிகிதம் நன்றாக இருப்பது மிக முக்கியம் கணவனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சந்தோஷங்களை தரும் அமைப்பு இந்த பாவக வழியில் இருந்தே செயல்படும் தன் கணவனுக்கு நல்ல மன நிம்மதியை எந்த சூழ்நிலையிலும் தரும் அமைப்பை பெற்றவளாக இருப்பாள்.

மேற்கண்ட ஸ்தானங்கள் ஒரு ஜாதகிக்கு நன்றாக இருக்கும் பட்சத்தில், ஜாதகியை தனது மருமகளாக நிச்சயம் ஏற்றுகொள்ளலாம். திருமணத்திற்கு பிறகு இருவரும் வாழையடி வாழையாக வளமுடன் வாழ்ந்திருப்பார்கள்.

ஜாதகி காலடி எடுத்து வைக்கும் இடத்தில் அனைத்து செல்வ வளங்களும் நிறைந்து நிலைத்து நிற்கும்.

குறிப்பு

ஆண்பெண் இருவரது ஜாதகத்தில் நட்சத்திர பொருத்தம் 10 க்கு 10 அமைந்தாலும், மேற்கண்ட அமைப்புகள் நன்றாக இருந்தால் மட்டுமே திருமண வாழ்க்கை 100 சதவிகிதம் வெற்றி பெரும், மேலும் மேற்கண்ட பாவகங்கள் நன்றாக இருந்து நட்சத்திர பொருத்தம் (ரஜ்ஜு பொருத்தம் உட்பட) இல்லை என்றாலும் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் வாழ்க்கை 100 சதவீதம் நன்றாக இருக்கும்.

ராகு கேது, செவ்வாய் தோஷங்கள் என்பதெல்லாம் நடைமுறையில் வாழ்க்கையில் எவ்வித பாதிப்பையும் தருவதில்லை என்பதே உண்மை.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments