மற்றவர்களுக்கு மரியாதை தரும் மிதுன ராசியினரே! குருபெயர்ச்சி பலன்கள்

Report Print Fathima Fathima in ஜோதிடம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கருதும் நீங்கள், வெறுப்பு விருப்பு இன்றி அனைவரிடமும் அன்பாக பழகி அரவணைத்துச் செல்லக் கூடியவர்கள். மலர்ந்த முகத்துடன், வசீகரப் பேச்சால் எல்லோரையும் கவருபவர்கள்.

இதுவரை உங்களின் சுகவீடான 4ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எதிர்பார்ப்புகளில் தடைகளையும், தாயாருடன் மனஸ்தாபங்களையும், அவருக்கு ஆரோக்ய குறைவையும் ஏற்படுத்தி வந்த குருபகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்களது ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் வீட்டில் அமர்ந்து அருளாட்சி செய்யப் போகிறார்.

எனவே, உங்களுடைய அடிப்படை வசதிகள் பெருகும். மாறுபட்ட யோசனையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும்.

குருபகவானின் பார்வை

குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் 9ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய வியூகங்களை அமைத்து வாழ்வில் முன்னேறுவீர்கள். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.

தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். அயல்நாட்டுப் பயணம் உண்டு. வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள்.

உங்களின் லாப வீடான 11ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். மூத்த சகோதர, சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். ஷேர் லாபம் தரும்.

குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தோற்றப் பொலிவுக் கூடும். ஆரோக்யம் சீராகும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடன் பிரச்னையிலிருந்து விடுபடுவீர்கள். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் சஷ்டம லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குருபகவான் செல்வதால் கொஞ்சம் எதிர்ப்புகளும், ஏமாற்றங்களும் இருக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படப்பாருங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். சகோதரங்களுடன் மனத்தாங்கல் வரும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம்.

06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சின்ன சின்ன மனசஞ்சலங்கள், வீண் டென்ஷன், பிறர் மீது நம்பிக்கையின்மை, உடல் அசதி, சோர்வு வந்து செல்லும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை வெடிக்கும். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என நினைப்பீர்கள்.

உங்கள் இளமைக் காலத்துடன் அவர்களை ஒப்பிட்டுப் பார்த்து கொஞ்சம் பெருமூச்சு விடுவீர்கள். உறவினர்களுடன் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. உங்களின் சப்தமஜுவனாதிபதியான குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் எதையும் திட்டமிட்டு செய்வீர்கள்.

மனைவி உங்களுடைய புது முயற்சியை ஆதரிப்பார். கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். உத்யோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்

14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் குருபகவான் சென்று மறைவதால் பெரிய நோய் இருப்பதாக அவ்வப்போது யூகிப்பீர்கள். சாதாரணமாக நெஞ்சு வலிக்கும். ஹார்ட் அட்டாக் வந்துவிடுமோ என்ற அச்சம் வந்து போகும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.

குடும்பத்தில், கணவன் மனைவிக்குள் வீண் விவாதங்கள், ஈகோ பிரச்னைகள் வந்துபோகும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். முக்கிய பொறுப்புகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.

சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. அரசு காரியங்கள் தாமதமாகும். சின்னச் சின்ன கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். அவ்வப்போது தூக்கம் கெடும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்

07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் புதிய முயற்சிகள் வெற்றியடையும். ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சிலர் வாஸ்துப்படி வீட்டை சரி செய்வீர்கள்.

வியாபாரிகளே! இதுவரை எதைச் செய்தாலும் நஷ்டங்கள் தானே மிஞ்சியது, இனி மாறுபட்ட அணுகுமுறையால் அவற்றை யெல்லாம் சரி செய்வீர்கள். கடையை விசாலமாக்குவீர்கள். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளை கையாண்டு தேங்கிக் கிடந்த சரக்குகளையெல்லாம் விற்றுத் தீர்ப்பீர்கள்.

உத்யோகஸ்தர்களே! இனி உங்கள் கை ஓங்கும். உயரதிகாரிகள் உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களுடனான பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். கேட்ட இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வருவீர்கள். வேறு சில வாய்ப்புகளும் வரும். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு, வீண் பழிகளிலிருந்து விடுபடுவீர்கள்.

கன்னிப்பெண்களே! காதல் வேறு, நட்பு வேறு என்பதைப் புரிந்து கொள்வீர்கள். போலிக் காதலை உண்மையென நினைத்து ஏமாந்தீர்களே! அந்த மன உளைச்சலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். உயர்கல்வியில் தோல்வியுற்ற பாடத்தில் வெற்றி பெறுவீர்கள். தாமதமான திருமணம் கூடி வரும். கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார்.

மாணவ மாணவிகளே! கடினமான பாடங்களிலும் இனி அதிக மதிப்பெண் பெறுவீர்கள். விளையாட்டு, கலை, கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு, பாராட்டைப் பெறுவீர்கள். வகுப்பாசிரியர் உறுதுணையாக இருப்பார்.

கலைத்துறையினரே! வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள்.

அரசியல்வாதிகளே! உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் திருந்தி வந்து மன்னிப்பு கேட்பார்கள். மாவட்ட அளவில் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தலைமை உங்களை நம்பி சில ரகசிய பொறுப்புகளையெல்லாம் ஒப்படைக்கும்.

விவசாயிகளே! வருமானம் உயரும். மகசூலை அதிகப்படுத்த நவீன ரக உரங்களை கையாளுவீர்கள். பூச்சித்தொல்லை நீங்கும். கரும்பு, வாழையால் லாபம் வரும். இந்த குருப்பெயர்ச்சி விரக்தியின் விளிம்பிலிருந்த உங்களை புதிய பாதையில் பயணித்து சாதனையாளராக மாற்றும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்