ஜனவரி மாத ராசிபலன்கள்: உங்களுக்கு எப்படி?

Report Print Fathima Fathima in ஜோதிடம்
0Shares
0Shares
lankasri.com
மேஷம்

எடுத்த கொள்கையில் மாறாதவராகவும் தன்மானத்திற்கு முக்கியம் அளிப்பவராகவும் இருக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் சப்தம ராசியில் குருவுடன் இணைந்து சஞ்சரிப்பது நன்மை அளிக்கும் அமைப்பாகும். எதையும் உடனடியாக நம்பாமல் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். பாக்கியஸ்தானத்தில் இருக்கும் சனிபகவான் ரணருணரோக ஸ்தானத்தை பத்தாம் பார்வையால் பார்ப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். ராசியை குருபகவான் பார்ப்பதால் சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அனைத்தும் அகலும். மற்றவர்களுக்காக நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும்.

தொழில் ஸ்தானாதிபதி சனி பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிப்பது அதிர்ஷ்டகரமானது. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளிடம் கருத்துகளைத் தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம். குடும்பாதிபதி சுக்கிரன் சுயசாரம் பெற்று பாக்கியஸ்தான நிலையில் இருப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன்மனைவியிடையே இருந்த மந்தநிலை மாறும். பிள்ளைகள் விஷயத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகும். உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

பெண்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். மற்றவர்களால் அனுகூலம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடிவரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமை அன்று பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனத்துயரம் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.

ரிஷபம்

உயிரினை விட கொடுத்த வாக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும் ரிஷப ராசியினரே, நீங்கள் நடையில் மிடுக்கு கொண்டவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில். சுகாதிபதி சூரியன், தனபஞ்சமாதிபதி புதன் மற்றும் தர்ம கர்மாதிபதி சனியுடன் இணைந்திருக்கிறார். ராசிநாதன் சுக்கிரன் ராசிக்குள் மறைந்திருந்தாலும் அவர் சுயசாரம் பெற்று சஞ்சரிப்பதால் அதிகளவு நன்மைகளைப் பெறுவீர்கள். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கலக்கம் நீங்கும். காரணமே இல்லாமல் வீண்பழி சுமக்க நேரிடும். கவனமாக இருப்பது நல்லது. கண் கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம்.

தொழில் ஸ்தானத்தை குருவும், அதன் அதிபதி சனியும் பார்க்கிறார்கள். தொழில் ஸ்தானாதிபதி தனஸ்தான ராசியைப் பார்க்கிறார். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் அதிகப் பணியால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேலதிகாரிகளிடமும் வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும். குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்னை தலை தூக்கலாம். உறவினர்கள், நண்பர்கள், பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது.

தாய்வழி உறவினர்களுடன் சஞ்சலம் ஏற்படலாம். சொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலம் தரும். பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாகச் செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறை அன்பர்களுக்கு புகழ் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் உணர்த்துவதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்துசேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்: மல்லிகை சமர்ப்பித்து ஆண்டாளை வழிபட கடன் பிரச்னை தீரும். செல்வநிலை உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வெள்ளி.

மிதுனம்

வாய் சாமர்த்தியமும் புத்தித் தெளிவும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே, அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நீங்கள். பொறுமையுடன் இருந்து காரியங்களை சாதிப்பதில் வல்லவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் சப்தம ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், சனியுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியை ஐந்து கிரகங்கள் பார்க்கிறார்கள். ராசிநாதன் புதனின் சாரபலத்தின் மூலம் நல்ல பலன்களைப் பெற இயலும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். தொழில் ஸ்தானாதிபதி குரு, ராசியை ஒன்பதாம் பார்வையால் பார்ப்பதன் மூலம் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

பல தடைகளைத் தாண்டி செயல்படுவீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்துசேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். மேலிடத்திலிருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். குடும்பத்தில் இருந்த பிரச்னை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து திருப்தியடைவீர்கள். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்னைகள் அகலும். பெண்கள் வழக்கத்தைவிட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள்வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம்.

கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். அரசியல் துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனக்கவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மிக நாட்டமும், மனதைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய சூழ்நிலை காணப்படும். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற தடைகளைத் தாண்டி படிக்க வேண்டியிருக்கும். பெரியோரின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது.

பரிகாரம்: பெருமாளை பூஜித்து வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்.

கடகம்

எவரையும் பார்த்தவுடன் கவர்ந்திழுக்கும் யுக்தி தெரிந்த கடக ராசி அன்பர்களே, நீங்கள் மற்றவர்களுடைய உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பவர். இந்த காலகட்டத்தில் ராசியில் ராகு இருக்கிறார். செவ்வாயும் குருவும் சுகஸ்தானத்தில் இருக்கிறார்கள். மற்ற கிரகங்கள் ராசிக்குள் மறைந்திருந்தாலும் அனைத்து கிரகங்களின் சாரமும் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளித்தரும் வகையில் இருக்கிறது. எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். நீண்டநாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் சுகஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்தை தனது ஏழாம் பார்வையால் பார்க்கிறார். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். . மேலதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். விரய ஸ்தானத்தை ஐந்து கிரகங்கள் பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள், கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கப் பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு இருக்கும்.

பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அரசியல் துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.

பரிகாரம்: அம்மனுக்கு ஐந்து முக தீபம் ஏற்றி பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.

சிம்மம்

சமூகத்தில் முக்கிய நபர்களின் தொடர்பு இருந்தாலும் அதை தவறான வழியில் பயன்படுத்தாத சிம்ம ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி சூரியனின் சஞ்சாரம் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், சனியுடன் இணைந்திருக்கிறது. மிக அற்புதமான பலன்களைப் பெறக்கூடிய வகையில் இருக்கிறீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தை செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் பார்த்து அருள் செய்கிறார். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்கும்.

குடும்பாதிபதி புதன் ராசிநாதனுடன் இணைந்திருக்கிறார். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமுகமாக நடந்து முடியும். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும்.

கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள். அரசியல் துறையினர் அதீத கவனத்துடன் செயல்படுவதால் பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்துசேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை. மாணவர்கள் கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் பைரவரை வணங்க எல்லா பிரச்னைகளும் சுமுகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி.

கன்னி

உழைப்பின் மூலம் வாழ்க்கையை இனிதாக நடத்தும் வித்தை தெரிந்த கன்னி ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் சுகஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், சனியுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். ராசியை சனி தனது பத்தாம் பார்வையால் பார்த்தாலும் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். பணவரத்து அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் ஸ்தானத்தை சூரியன், ராசிநாதன் புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியோர் பார்ப்பது மிக நல்ல அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.

எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி செய்து முடிக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. கொடுத்த வேலைகளை நேரத்தில் செய்வது உகந்தது. சுக்கிரனின் சுகஸ்தான சஞ்சாரமும், குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய், குரு சஞ்சாரமும் குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையை தரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். பெண்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்குபலமுறை யோசிப்பது நல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.

அரசியல் துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்னை குறையும். வீண் அலைச்சல், வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுக்கிரன் தனது சஞ்சாரத்தால் வீண் செலவை உண்டாக்குவார். வேலை காரணமாக வீட்டைவிட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மிக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.

பரிகாரம்: ஐயப்பனை வணங்கி வர எல்லா பிரச்னைகளும் தீரும். மன நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி.

துலாம்

அனைவரையும் சரிசமமாக பாவிக்கும் எண்ணம் கொண்ட துலா ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு வீட்டில் அமர்ந்திருக்கிறார். குரு உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறார். பரிவர்த்தனை யோகம் பெறுகிறீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். செவ்வாய் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில், ஸ்தானத்தை ராகு அலங்கரிக்கிறார். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பாதிபதி செவ்வாய் ராசியில் குரு சாரம் பெற்றிருக்கிறார். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை அகலும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை செவிமடுத்து கேட்பார்கள். அவர்களுக்காக நீங்கள் எடுக்கக் கூடிய முயற்சிகள் பலிதமாகும். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பெண்கள் அனுபவ பூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால் தொழில் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசியல் துறையினர் நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். சூரியன் சஞ்சாரம் பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.

விருச்சிகம்

கொடுத்த வேலையை கனகச்சிதமாக செய்யும் திறன் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, நீங்கள் வாதாடுவதில் திறமையானவர். இந்த காலகட்டத்தில் நன்மைகள் கிடைக்கும். காரியத்தடை தாமதம் நீங்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் குருவுடன் இணைந்திருப்பதால் எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.

தொழில் ஸ்தானாதிபதி சூரியன் தனஸ்தானத்தில் இருக்கிறார். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் - மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மையைத் தரும் பெண்கள் எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும். பணவரத்து திருப்திதரும். கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.

தனுசு

சுய ஒழுக்கத்துடன் வாழ்க்கையை நடத்தும் தனுசு ராசி அன்பர்களே, நீங்கள் சுய நம்பிக்கை அதிகம் கொண்டவர். இந்த காலகட்டத்தில் பலவகைகளிலும் நன்மை உண்டாகும். ராசிநாதன் குரு லாப ஸ்தானத்தில் சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். ஆனாலும் ராசியில் சனி சஞ்சாரம் இருப்பதால் எடுத்து வைக்கக்கூடிய அடிகளில் கவனம் தேவை. தொழில் ஸ்தானாதிபதி புதன் ராசியில் இருக்கிறார். தொழில் ஸ்தானம் பலம் பெறுகிறது.

மேலும் ராசிநாதன் குரு லாபஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகளைக்கூட எளிமையாக செய்ய முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த பணத் தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்ப ஸ்தானத்தை செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். கலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

அரசியல்துறையினருக்கு எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதேநேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். சனி சஞ்சாரத்தால் காரியத் தடை, தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

பரிகாரம்: சித்தர்களை வணங்கிவர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

மகரம்

எந்த கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் கொண்ட மகர ராசியினரே, நேரத்தை சரியான முறையில் கையாள்வது உங்கள் பலம். இந்த காலகட்டத்தில் ராசிநாதனான சனி விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன் உடன் சஞ்சரிக்கிறார். எடுத்துக் கொண்ட காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் சனியுடன் இணைந்து விரயஸ்தானத்தில் இருக்கிறார்.

தொழில், வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும்போதும் பாதுகாத்து வைக்கும்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தைத் தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை. பெண்கள் தங்களது பொருட்களை கவனமாகப் பாதுகாத்துக்கொள்வது நல்லது.

வீண்பிரச்னைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மை தரும். கலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். அடுத்தவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைப்பளு நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

கும்பம்

எடுக்கும் முயற்சிகள் தோற்றாலும் மீண்டும் மீண்டும் முயற்சி எடுக்கும் கும்பராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசியை குரு, ராசிநாதன் சனி பார்ப்பது சிறப்பான அமைப்பு. விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பயணங்கள் பல இருந்தாலும் அதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். சுபச்செலவு அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பும் அதன் மூலம் ஆதாயமும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கப்பெறுவார்கள். குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். பெண்கள் அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோதைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினர் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கஷ்டம் தீரும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். சுக்கிரன் சஞ்சாரம் சுப பலன்களை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது. பணிகள் நிறைவடைய அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால், எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்: பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.

மீனம்

சுயநலமில்லாத பொது நலத்துடன் வாழும் மீன ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாயுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வரும். தொழில் ஸ்தானத்தை சூரியன், புதன், சுக்கிரன், சனி ஆகியோர் அலங்கரிக்கிறார்கள். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். பிடித்தமான இடத்திற்கு வேலைமாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். குடும்ப ஸ்தானத்தை செவ்வாய், குரு பார்க்கிறார்கள். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்னை தலைதூக்கலாம் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பெண்கள் வீண் பேச்சுகளை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கோபத்தை குறைப்பது நல்லது.கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும்.

நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மிக பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். சூரியன் சஞ்சாரம் அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக்கஷ்டம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்