பிப்ரவரி மாத ராசிபலன்கள்

Report Print Fathima Fathima in ஜோதிடம்
1677Shares
1677Shares
lankasrimarket.com

பிப்ரவரி மாதம் 1- 15 திகதி வரையில் பன்னிரெண்டு ராசிகளுக்குமான பலன்கள் இதோ,

மேஷம்

சுறுசுறுப்பான நடவடிக்கைகளால் அனைத்து காரியங்களையும் சாதிக்கும் மேஷ ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் மறைந்திருந்தாலும், அவர் ஆட்சி பெறுகிறார். ராசியை குரு பார்ப்பதால் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரம், ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் அனுகூலமாக இருப்பதால் நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். புதன் சஞ்சாரம் ராசிக்கு 9ல் இருந்து திரிகோணப்படி ராசியுடன் சம்பந்தம் பெறுவதால் தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது நலம் தரும்.

தொழில் ஸ்தானத்தில் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியன், தனாதிபதி சுக்கிரன் ஆகியோர் புதனுடன் இணைந்து சஞ்சாரம் செய்கிறார்கள். ராசிநாதன் செவ்வாய் மற்றும் குரு இருவரும் லாபஸ்தானத்தைப் பார்க்கிறார்கள். பகைவீட்டில் சூரியன் இருப்பதால் தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மை பெறுவீர்கள்.குடும்ப ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் பார்க்கிறார். குடும்பத்தில் சிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும்.

வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். புதியதாக மனை, வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும். பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள், சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும். கலைத்துறையினருக்கு சுக்கிரன் சஞ்சாரத்தால் சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். ஒப்பந்தங்களில் சரியான முடிவுக்கு வரமுடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உடன் பணிபுரிபவர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. பயணங்களின்போதும் எச்சரிக்கை தேவை. அரசியல் துறையினர், சூரியன் சஞ்சாரத்தால் திறமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். மாணவர்கள் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு பாடங்களை நன்கு படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.

பரிகாரம்: மாரியம்மனை செவ்வாய்க்கிழமையில் தீபம் ஏற்றி வணங்கி வர, கஷ்டங்கள் தீரும். மனநிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

ரிஷபம்

கொடுக்கும் வாக்கினை உயிரினை விட மேலாக மதிக்கும் ரிஷப ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அஷ்டமத்து சனி நடக்கிறதே என்கிற கவலை வேண்டாம். சப்தம விரயாதிபதி செவ்வாய் ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் சுக்கிரன், சூரியன்கேதுவுடன் பாக்கியஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். ராசியைப் பார்க்கும் செவ்வாயால் முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். ராசிநாதன் சுக்கிரன் மனநிம்மதியை தருவார். குழப்பமான விஷயங்களில்கூட சாமர்த்தியமாக முடிவெடுத்து வெற்றி பெறுவீர்கள்.

தொழில் ஸ்தானத்தை செவ்வாய் குரு சனி ஆகியோர் பார்க்கிறார்கள். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும். குடும்ப ஸ்தானத்தை அதன் அதிபதி புதன் சனி குரு ஆகியோர் பார்க்கிறார்கள். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.

பெண்களுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தைகூட எளிதாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்துமுன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வேலை தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் கோயிலில் தாயாரை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.

மிதுனம்

எந்த கடின சூழ்நிலையிலும் நிதானமாகவும் சாமர்த்தியமாகவும் முடிவெடுக்கும் மிதுன ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசிநாதனான புதன், குரு மற்றும் சனி மூவரும் ராசியைப் பார்க்கிறார்கள். தனஸ்தானத்தை ராகு அலங்கரிக்கிறார். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அஷ்டமஸ்தானத்தில் கிரக கூட்டணி அமைந்திருக்கிறது. தனஸ்தானத்தை சூரியன், சுக்கிரன் இருவரும் பார்க்கிறார்கள். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றி தரும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டைவிட்டு வெளியில் தங்க நேரிடும். ராசியை செவ்வாய் எட்டாம் பார்வையால் பார்க்கிறார். இதன் மூலம் புதிதாக வீடு, மனை வாங்க முற்படுவீர்கள்.

தொழில் ஸ்தானாதிபதி குரு ராசியைப் பார்க்கிறார். தொழில், வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. பண விஷயங்களில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம். சக ஊழியர்களின் உதவியால் எல்லா வேலைகளையும் சரியாக முடிப்பீர்கள். குடும்ப ஸ்தானத்தை சூரியன் பார்க்கிறார். குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள், நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடக்கும்.

கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும்போதும், வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. அரசியல் துறையினர் எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். மாணவர்கள் கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.

பரிகாரம்: பெருமாளுக்கு நெய்தீபம் ஏற்றி வணங்க, எதிர்பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்னை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.

கடகம்

மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை எந்த சூழ்நிலையிலும் செய்யாத கடக ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசியில் ராகு இருக்கிறார். செய்யும் செயலில் வேகம் இருக்கும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். ராசியை தனாதிபதி சூரியன் பார்ப்பதால் ராஜாங்க ரீதியிலான காரியங்கள் கைகொடுக்கும். நாடிப்படி செவ்வாய் ராசியை தொடர்பு கொள்கிறார். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பணவரத்து திருப்தி தரும். வீண்பழி ஏற்படலாம்.

தொழில் ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தொழில், வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புறம்கூறாமல் இருப்பது நன்மை தரும். உங்களுடைய பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது அவசியம். பணி நிமித்தமான ரகசியங்களை பாதுகாப்பது அவசியம். குடும்பாதிபதி சூரியன் ராசியைப் பார்க்கிறார். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வீண்பேச்சை குறைப்பது நன்மை தரும். கலைத்துறையினர் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும்போது கவனமாக இருப்பது நல்லது. மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

அரசியல் துறையினர் கடின உழைப்புக்குப்பின் முன்னேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்துசேரும். மேலிடத்தை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொண்டர்களின் பாராட்டை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய அதிக கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: ஆதிபராசக்திக்கு வேப்பிலை மாலை அணிவித்து தீபம் ஏற்றி வணங்க போட்டிகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.

சிம்மம்

அதிகார தோரணையும், மிடுக்கும் கொண்ட சிம்ம ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதனான சூரியன், ரணருணரோக ஸ்தானத்தில் இருக்கிறார். மனதில் உற்சாகம் பிறக்கும். காரியங்களில் இருந்தத் தடை நீங்கி சாதகமான பலன்தரும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும். தொழில், ஸ்தானத்தை செவ்வாய் பார்க்கிறார். தொழில் வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பது கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

நிதி பிரச்னை நீங்கும். உபதொழில் ஆரம்பிப்பதற்கான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் குழப்பத்துடனேயே செய்ய நேரிடும். சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மேலிடம் உங்களுக்கான பொறுப்புகளை அதிகரிக்கும். குடும்ப ஸ்தானாதிபதி புதன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தை அலங்கரிக்கிறார். குடும்ப ஸ்தானத்தை சனி பார்க்கிறார். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தை தரும். பயணங்கள் செல்லும்போது கவனம் தேவை. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

பெண்கள் எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்னைகளை கண்டால் ஒதுங்கிச் சென்றுவிடுவது நல்லது. முன்னேற்றம் காண, கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒருசில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க பாடுபட்டு படிப்பீர்கள்.

பரிகாரம் : சிவனை வணங்கிவர எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி.

கன்னி

உழைப்பிற்கும் நேரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் கன்னி ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதனான புதன் சுகஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். அவருடன் சனியும் இணைந்து சஞ்சரிக்கிறார். சனிபகவான் ராசியைத் தனது பத்தாம் பார்வையால் பார்க்கிறார். வீண் பிரச்னையால் மனக்குழப்பம் ஏற்படலாம். தன பாக்கியாதிபதி சுக்கிரன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த சுகவீனம் நீங்கும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.

தொழில் ஸ்தானத்தை உங்கள் ராசிநாதனான புதன், சனி மற்றும் குரு ஆகியோர் பார்க்கிறார்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தடை, தாமதம் நீங்கும். போட்டிகள் சமாளிக்கும் திறமை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குடும்பாதிபதி சுக்கிரன் உங்களுடைய நட்பு வீட்டில் சஞ்சரிக்கிறார். குடும்ப ஸ்தானத்தில் குரு இருக்கிறார். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனக்கிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். பெற்றோர், உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும்.

பெண்களுக்கு பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும். கலைத்துறையினர் புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. அரசியல் துறையினர் முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக பேசுவது நல்லது. நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தடை ஏற்படலாம். கவனமாக படிப்பது நல்லது.

பரிகாரம் :பைரவருக்கு அர்ச்சனை செய்து வணங்க, மனக்கஷ்டம் நீங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.

துலாம்

அனைவரையும் சரிசமமாக நடத்தும் திறன் கொண்ட துலா ராசியின,ரே நீங்கள் பணம் சார்ந்த விஷயங்களில் அதிக சிக்கனம் உடையவர்கள். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் சுகஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். அவருடன் சூரியனும், கேதுவும் இணைந்திருக்கிறார்கள். ராசியில் தைரியரணருண ரோகாதிபதியான குரு இருக்கிறார். எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். தொழில் ஸ்தானத்தை ராகு அலங்கரிக்கிறார்.

லாபாதிபதி சூரியனும், ராசிநாதனான சுக்கிரனும் பார்க்கிறார்கள். தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியிலான சிரமங்களிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். குடும்ப ஸ்தானத்தில் அதன் அதிபதி செவ்வாய் இருப்பது ஒரு நல்ல அம்சமாகும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

கலைத்துறையினருக்கு வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை. எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும்போது கவனம் தேவை. பொருளாதாரம் உயரும். எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்னைகள் தீரும். பலவகையான யோகங்கள் ஏற்படும். அரசியல் துறையினருக்கு மனக் குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும்போது நிதானம் தேவை. தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் துர்க்கை அம்மனை வணங்க எல்லா நலனும் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வெள்ளி.

விருச்சிகம்

எப்போதும் விழிப்புடன் இருக்கும் விருச்சிகராசியினரே, உங்கள் சொல்லுக்கு தகுந்த வலு இருக்கும். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். அவரின் சாரத்தால் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். தனாதிபதி குரு விரயஸ்தானத்தில் சுயசாரம் பெற்று சஞ்சரிப்பதால் தைரியம் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும். தொழில், வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும்.

நிர்வாகத் திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப ஸ்தானத்தில் புதன், சனி அமர்ந்திருக்கிறார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உறவினர்கள் மூலம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும்.

பெண்களுக்கு மனோதைரியம் கூடும். சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றிபெறும். கலைத்துறையினர் லாபம், நஷ்டம் பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வீர்கள்.

போட்டிகள் மறையும். ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசியல் துறையினருக்கு கடன் தொடர்பான பிரச்னைகள் தீரும். பணவரத்து கூடும். மனக்குழப்பம் நீங்கும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். சின்ன விஷயத்துக்கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். ராகுவின் சஞ்சாரம் பணவரத்தை தரும். வேற்றுமொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். மாணவர்கள் கல்விநிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க, நோய் நீங்கும். மனக்குழப்பம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

தனுசு

எந்த விஷயத்திலும் சுயசிந்தனை உடைய தனுசு ராசியினரே, நீங்கள் நேர்மையின் மறு உருவமாக இருப்பவர்கள். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் குரு லாபஸ்தானத்தில் சுக்கிரன் வீட்டில் அமர, யோகமான பலன்களை பெற போகிறீர்கள். மேலும் ராசியில் சனியின் சஞ்சாரம் இருப்பதால் சோம்பலில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் உண்டாகலாம். ஜென்ம சனி மூலமாக சோம்பலும் சோர்வும் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். ஆனாலும் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும். தொழில் ஸ்தானாதிபதி புதன், தனாதிபதி சனி இருவரும் ராசியில் இருக்கிறார்கள்.

அவர்களின் சாரபலத்தின் மூலம் பல நல்ல பலன்களைப் பெறப்போகிறீர்கள். ராசிநாதன் குரு லாபஸ்தானத்தில் இருக்கிறார். தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நல்லபடியாக நடக்கும். பணவரத்து அதிகமாகும். யோசித்து செய்யும் காரியங்கள் அனைத்தும் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியிருக்கும். குடும்ப ஸ்தானத்தில் சூரியன் இருந்தாலும் அது அவருக்கு பகைவீடாக இருக்கிறது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகள் மேல் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம், வீண் செலவு ஏற்படலாம். கலைத்துறையினர் புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பதுபோல மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். தொழில் தொடர்பான பயணங்களும் அவற்றால் அலைச்சலும் ஏற்படலாம். அரசியல் துறையினருக்கு பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் தாமதமான நிலை காணப்படும். வேலைசுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒருசில பணி காரணமாக வீட்டைவிட்டு வெளியில் தங்க நேரிடலாம். மாணவர்கள் கல்வியில் மந்தமான நிலை மாற, கூடுதல் கவனத்துடன் பாடங்களைப் படிப்பது நன்மை தரும்.

பரிகாரம்: நவகிரக சந்நதியில் குருபகவானை முல்லை மலர்சூடி வணங்க, எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வநிலை உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

மகரம்

சட்ட நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் திறன் கொண்ட மகர ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசியில் அஷ்டமாதிபதி சூரியன் இருந்தாலும், அவருடன் உங்கள் ராசிக்கு யோகாதிபதியான சுக்கிரனும் மற்றும் கேதுவும் உடன் இணைந்திருக்கிறார்கள். ராசிநாதனான சனி விரய ஸ்தானத்தில் இருந்தாலும், கேது சாரம் பெற்று பலமாக இருக்கிறார். யோக பலனை அள்ளித் தரும் சுக்கிரன் ராசியிலேயே இருப்பதால், பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த வேதனையும், சோதனையும் மாறும். உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதுரியம் அதிகரிக்கும்.

தொழில் ஸ்தானத்தில் குரு இருப்பதால் தொழில், வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவபூர்வமான அறிவு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். செயல்திறன் அதிகரிக்கும். குடும்ப ஸ்தானத்தை செவ்வாய், குரு மற்றும் ராசிநாதனான சனி ஆகியோர் பார்க்கிறார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையை தரும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள். பெண்களுக்கு புத்திசாதுரியம் அதிகரிக்கும். பயணங்களின்போது கவனம் தேவை. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யுமுன் ஆலோசனைசெய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அரசியல் துறையினரே, சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள் மற்றும் அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். புதிய நபர்களின் அறிமுகமும் அதனால் நன்மையும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணெய் சாத்தி வணங்கி வர, துன்பமும், தொல்லையும் நீங்கும். மனோதைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி.

கும்பம்

கடின உழைப்பை உலகிற்குப் பறைசாற்றும் கும்ப ராசியினரே, நீங்கள் எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு உதவ தயங்க மாட்டீர்கள். இந்த காலகட்டத்தில் ராசியை செவ்வாய், குரு மற்றும் ராசிநாதனான சனி ஆகியோர் பார்க்கிறார்கள். ராசிநாதன் சனி மிக அனுகூலமாக லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். எதிலும் ஆதாயம் கிடைக்கும். தனவாக்கு அதிபதியான குரு, ராசியைப் பார்ப்பதால் பேச்சு திறமை அதிகரிக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடலில் சூடு ஏற்படுத்தும் ஆகாரங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். பணம் சம்பந்தமான அனைத்து பிரச்னைகளும் சுமுகமாக முடியும்.

தொழில் ஸ்தானத்தை அதன் அதிபதி செவ்வாய் அலங்கரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிப் போகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப் பளு இருக்கும். பணி நிமித்தமாக நேரத்திற்கு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, மனை, வாகன விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பெண்கள் பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும்.

கலைத்துறையினருக்கு என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள், குடும்பம் முன்னேற்றமடைய உதவும். அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். அரசியல் துறையினருக்கு தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். ராசியாதிபதி சனியின் சஞ்சாரத்தின் மூலம் சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்குத் தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள்.

மாணவர்கள் தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க, உடல் ஆரோக்கியம் பெறும். வேலைப்பளு குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.

மீனம்

சொந்த வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணிக்கும் எண்ணம் கொண்ட மீன ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் தனது பார்வையின் மூலமாக பல நல்ல பலன்களை தருவார். தனஸ்தானத்தை ராசிநாதனான குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சுக்கிரனின் லாபஸ்தான சஞ்சாரத்தால் எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத் திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். தொழில் ஸ்தானத்தில் இருக்கும் புதன், சனியால் தொழில், வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். பணியில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப ஸ்தானத்தை ராசிநாதனான குரு பார்க்கிறார். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. தங்க நகை சேரும் காலகட்டம் இது. பெண்கள் நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

மதிப்பும், மரியாதையும் கூடும். கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். அரசியல் துறையினர் வாழ்க்கைத் தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்: நவகிரக சந்நதியில் குருவை நெய் தீபம் ஏற்றி வணங்க, கடன் சுமை குறையும். தொழில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்