கனேடியத் தலைநகரை கலக்கிய 'கனடா 150' தமிழர் கொண்டாட்டம்

Report Print Gokulan Gokulan in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடாவின் 150வது பிறந்த தினக் கொண்டாட்டத்தினை, கனடா தினமான ஜூலை முதலாம் திகதியும், அதற்கடுத்த நாளான இரண்டாம் திகதியும் கனேடியத் தமிழர்கள் தலைநகரில் வைத்துக் கோலாகலமாகக் கொண்டாடினர்.

இதன்போது ரொறன்ரோ, ஒட்டாவா, மொன்றியல், கிங்ஸ்ரன் ஆகிய நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தலை நகரில் ஒன்று கூடியிருந்தனர்.

86ம் ஆண்டு கனடாவிற்கு வந்த தமிழ் அகதிப் படகும் ஒட்டாவா பாராளுமன்றத்திற்கு மிக அருகிலிருந்த Dominion - Chalmers church முன்றலில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 155 தமிழ் மக்களை காப்பாற்றிய அனைவருக்கும் தமிழ்க் கனேடியர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் விதமாகவும், தமிழர் பாரம்பரிய விழுமியங்களை சக கனடியர்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாகவும் இந்த நிகழ்வை கனேடியத் தமிழர் பேரவை ஒழுங்கு செய்திருந்தது.

155 அகதிகள் காப்பாற்றப்பட்ட சம்பவம் கனேடிய வரலாற்றிலும், தமிழ் மக்கள் வரலாற்றிலும் நிலைத்து நிற்கும் என்ற வகையில், கனடா மத்திய அரசு, ஒன்ராறியோ மாகாண அரசு ஆகியவற்றின் நிதி ஆதரவுடன் கனடா 150 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த படகுக் கண்காட்சி நடத்தப்பட்டது.

நாதஸ்வரம் இசைக்கப்பட்டு கனடா தேசிய கீதம் பாடப்பட்ட பின்னர் ஒட்டாவா பூர்வ குடியினர் நட்புறவு மையத்தின் மூத்த தலைவரான Terry McKay பூர்வகுடிகளின் பிரார்த்தனைகளைச் செய்து, அனைவருக்கும் ஆசி வழங்கிக் கொண்டாட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

கனேடிய தமிழர் பேரவையின் முன்னாள் தலைவரான ராஜ் தவரட்ணசிங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, தலைவர் டொக்டர் சாந்தகுமார் வரவேற்புரையை நிகழ்த்தினார்.

தமக்குச் சொந்தமான நிலத்தில் தமிழ் மக்கள் வாழ்வதை வரவேற்கும் பூர்வ குடியினருக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றி சொல்லும் வகையில் ஒரு நினைவுப் பரிசிலையும் Terry McKayக்கு டொக்டர் சாந்தகுமார் வழங்கினார்.

தொடர்ந்து பிரெஞ்ச் மொழியிலமைந்த வரவேற்புரை லக்ஸ்மி ஜெயவேலால் நிக‌ழ்த்தப்பட்டது.

தொடர்ந்து Ottawa Centre சட்டசபை உறுப்பினரும், அட்டர்னி ஜெனரலுமான கௌரவ Yasir Naqviயும், Ottawa West-Nepean பாராளுமன்ற உறுப்பினரான Anita Vandenbeldவும், ஒட்டாவா பொலிஸ் பிரிவினரின் சமூகங்களுக்கிடையிலான உறவு மேம்பாட்டு அதிகாரி David Zackraisம் உரையாற்றினர்.

அதன்பின் ரொறன்ரோ, ஒட்டாவா நகரில் இயங்கிவரும் நடனக் குழுக்களால் பரத நாட்டியம், ‌நாட்டுப்புற நடனம், நவீன நடனம் என பல்வேறு நடனங்களும் நடத்தப்பட்டு வந்தோரைக் குதூகலத்தில் ஆழ்த்தின.

வேற்றின மக்கள் தமிழ் பாடல்களுக்கு தாமும் ஆட ஆரம்பித்தனர். இரண்டாம் நாள் நிகழ்வில் ஸ்காபரோ ரூஜ்பார்க் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரியும் வந்து கலந்து கொண்டார்.

இரண்டு தினங்களும் 86ம் ஆண்டு அகதிப்படகை வேற்று இனத்தவர் பிரமிப்புடன் பார்த்துச் சென்றனர். அந்தப் படகிலும், அதே அளவிலிருந்த மற்றப் படகிலும் 155 தமிழர் கனடாவிற்கு வந்த கதை பார்வையாளர்ளை நெகிழ வைத்தது.

அகதிகளைக் காப்பாற்றிய மீன்பிடிக் கப்பலின் கப்டன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஆயினும் முதுமை காரணமாக உடல் நலம் குன்றியிருக்கும் அவரை பிரதிநிதித்துவப்படுத்தி அவரது இரண்டு மகள்களும் நியூபவுண்லாந்திலிருந்து பிரத்தியேகமாக வந்து இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நன்றி மறவாமல் தம்மை கௌரவிக்கும் தமிழ் மக்களுக்கும், நிகழ்வை ஒழுங்கு செய்த கனேடியத் தமிழர் பேரவைக்கும் உணர்ச்சி பொங்க அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

தமிழ் அகதிப்படகின் கதையை சொல்லும் ஆங்கில, பிரெஞ்ச் மொழியிலமைந்த பிரசுரம் ஒன்றும் ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிடப்பட்டு அனைவருக்கும் தரப்பட்டது.

மேலும், தமிழரின் சிற்றுண்டி என்ற அறிமுகத்துடன் முறுக்கு, சிப்பிப்பலகாரம், பகோடா போன்ற உணவுகளும் சிறு பைகளில் இடப்பட்டு கனடா தினத்தை கொண்டாட வந்தோர்க்கு வழங்கப்பட்டன.

அதைச் சுவைத்த வேற்றின மக்கள் பலரும் மீண்டும் மீண்டும் நம் சிற்றுண்டிகளை பெற்றுச் சென்றதையும் அனைவரும் மகிழ்வுடன் காணக்கூடியதாக இருந்தது.

இவற்றுடன் தமிழ்ப் பாடல்கள் முழங்க, flashmob என அழைக்கப்படும் திடீர் வீதி நடனங்களையும் ஒட்டாவா நகரின் மத்திய பகுதியில் நடனக்குழுவினர் ஆடிக்காட்டி அதிர வைத்தனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments