வெளிநாட்டு உறவுகளே... உங்கள் உறவுகளுக்காக சற்று சிந்தியுங்கள்

Report Print Jeslin Jeslin in சமூகம்
582Shares
582Shares
lankasrimarket.com

சமகாலத்தில் இந்த உலகம் கண்ட இன அழிப்புக்கள் பல, திட்டமிட்ட இன அழிப்புக்கள் மற்றும் தன் இனத்தை தானே அழித்துக்கொள்ளும் இன அழிப்புக்கள் என பல நம்மை கடந்து சென்றுகொண்டிருக்கின்றன.

இவற்றின் எதிரொலி என்னவென்றால் அப்பாவி மனித உயிர்கள் தான், நாம் ஏலவே கூறியதுபோது தன் இனத்தை தானே அழித்துக்கொண்டிருக்கும் இன அழிப்பு தற்போது ஈழத்தில் தமிழர் தாயகப் பகுதிகளில் அரங்கேறி வருகின்றன. இதனை அறிவோர் நம்மில் எத்தனை பேர்?

நம்மவர்களை நாமே அழித்துக்கொண்டிருக்கின்றோம் என்பதுகூட அறியாமல் உதவி செய்கின்றோம் என்ற பேரில் ஒரு இன அழிப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றனர் நம் புலம்பெயர் உறவுகள்.

தமிழர் தாயகத்தில் வதியும் மக்களைப் பொறுத்தமட்டில் பெரும்பாலும் அவர்களது வாழ்வாதாரம் புலம்பெயர்ந்து வாழும் அவர்களது உறவுகளின் சம்பாத்தியத்திலேயே தங்கியுள்ளது.

இது தவிர உள்ளூரில் கிடைக்கும் தொழில்களை செய்துகொண்டு வருமானம் போதாமல், வருவாய்க்காக நுண்நிதிக்கடன் நிறுவனங்களை நாடி அல்லலுறும் ஒரு சாராரையும் நாம் கடந்து சென்றுகொண்டிருக்கின்றோம்.

ஆனால், அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதும் விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும் என்ற எம் முன்னோர்களின் முதுமொழிகளும் சமகாலத்தில் நிதர்சனமான உண்மையாகியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருகின்ற பணத்தின் காரணமாக ஒரு குடும்பத்தின் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்படுகின்றது. ஆடம்பர வாழ்க்கை இறுதி கட்டத்தில் பேரழிவை தான் தரும் என்பதற்கு நிகரான சம்பவங்கள் தாயகத்தில் அனுதினம் பதிவாகின்றன.

அண்மையில்கூட வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தின் தாக்கம் காரணமாக யாழ். மறவன்புலவு பகுதியைச் சேர்ந்த 47 வயதான சிவராசா சிவரூபன் என்ற குடும்பத்தலைவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

ஒரு குடும்பத்தில் ஆணின் பங்கு என்பது அதிமுக்கியமானது, அந்த குடும்பத்தின் எதிர்காலத்திற்கான அத்திவாரமே குடும்பத்தலைவர் தான்.

இந்நிலையில், தனது மனைவிக்கு வெளிநாட்டில் இருந்து உறவுகளின் மூலம் வரும் பணத்தின் காரணமாக குடும்பத்தில் சந்தோஷம் நிலவுவதில்லை என இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பணம் என்பது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு சடப்பொருள், எனினும் பணத்தினால் மனிதனின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிட முடியாது, குறிப்பாக மனித உணர்வுகளை பூர்த்தி செய்ய முடியாத ஒரு சடப்பொருள் பணம்.

இருப்பினும், இந்த பணத்தினை மாத்திரம் ஆதாரமாகக்கொண்டு தம் உறவுகளை இழந்தவர்கள் பலர், உயிர்களை மாய்த்துக்கொண்டவர்கள் பலர், இவற்றில் நாம் அறிந்தவை சில, அறியாதவை பல.

வெளிநாடுகளிலுள்ள உறவுகள் அனுப்பும் பணம் இங்குள்ள பலரது வாழ்வாதாரத்தையும் பாதுகாத்து வருகின்றது, எனினும் சிலர் இதனை தகாத முறைகளில் தான்தோன்றித்தனமாக செலவு செய்கின்றனர்.

இதனால் ஏற்படுகின்ற விளைவுகள் இலகுவில் சரிசெய்துவிட முடியாத அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இந்த கட்டத்தில் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம், வெளிநாடுகளில் இருந்து பணம் வருகின்றதென்றால் அங்குள்ள எமது உறவுகள் படும் துயரங்களை சற்றே நினைவு கூற வேண்டும்.

தனது உழைப்பால் தான் சார்ந்தவர்களையும் கவனித்துக்கொண்டு, தன்னை நம்பி தாயகத்தில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டுமெனில் எவ்வாறான கடும் உழைப்பு அவர்களுக்குத் தேவைப்படும்.

உழைப்புக்கேற்ற ஊதியம் யாருக்கும் இலகுவில் கிடைத்துவிடுவதில்லை, அந்த சூழலிலும் ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை முன்னிறுத்தி உழைக்கவேண்டுமெனில் இரத்த வியர்வை சிந்த வேண்டும்.

இவ்வாறு புலம்பெயர் நாடுகளில் இருந்து, உறவுகள் மறந்து, உணர்வுகள் மறந்து, உறக்கம் தொலைத்து, தனது கடமைக்காக தன்னை அர்ப்பணித்து உழைக்கும் எம்மவர்களின் பணம் இங்கு சர்வசாதாரணமாக அற்ப தேவைகளுக்காக சீரழிகின்றது என்பது நடைமுறையில் வேதனையே..

அதைவிட ஒருவருக்கு நாம் செய்யும் மிக்பெரிய கொடுமையே அவர்களது உழைப்பைச் சுரண்டுவதுதான், அந்த கொடூரங்கள் தான் தற்போது நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஒருவருடைய மலைபோன்ற உழைப்பின் பலன் பிறிதொருவருக்கு சாதாரணமாக போய்விட்டது, அதைவிட தாம்சார் உறவுகின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டியவர்களாக இச்சமயத்தில் நாம் இருக்கின்றோம்.

தன்னுடைய உறவுகள் துயருறுவதை யாரும் சிந்தித்துக்கூட பார்க்கமாட்டார்கள், எந்த சூழ்நிலையும் தம்மவர்களை எவ்வாறான துயரை அண்டவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டுடன்தான் புலம்பெயர் உறவுகளும் பாடுபடுகின்றனர்.

ஆனால் அவர்களின் உழைப்பும், உணர்வுகளும் அவர்களின் வியர்வைத்துளிகளும் இங்கு துச்சமாக நோக்கப்படுகின்றது என்பது மிகமும் துயரத்திற்குரியது.

எனவே புலம்பெயர் உறவுகளே தாயகத்தில் இருக்கும் உங்கள் உறவுகளுக்கு பணம் அனுப்புவதாயின் என்ன தேவைக்கான என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறூ நீங்கள் அனுப்புங்கள். இல்லையேல் அளவுக்கு மீறிய பணத்தினால் திருட்டு பயம், ஆடம்பரம்.... என அழிவுப்பாதைக்கே அவர்களை அழைத்துச் செல்லும்.

எனவே சிந்தியுங்கள் புலம்பெயர் உறவுகளே........!

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்