முறைகேடாக வரிச்சலுகை பெற்றனவா அமேசான், ஆப்பிள் நிறுவனங்கள்?

Report Print Fathima Fathima in நிறுவனம்
68Shares
68Shares
Promotion

அமேசான் நிறுவனம் லக்சம்பர்க் நாட்டில் முறையற்ற வகையில் வரிச் சலுகைகளைப் பெற்றதாகக் கூறி, 250 மில்லியன் யூரோ மதிப்புள்ள வரி நிலுவையைச் செலுத்துமாறு அந்நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதே போல அயர்லாந்து நாடு ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து 13 பில்லியன் யூரோ மதிப்புள்ள வரியை வசூல் செய்யத் தவறியதற்காக அந்நாட்டு அரசு மீது வழக்கு தொடர ஐரோப்பிய ஆணையம் முடிவு செய்துள்ளது.

லக்சம்பர்க் நாட்டில் தங்களுக்கு எந்த சிறப்பு பலன்களும் கிடைக்கப்பெறவில்லை என்று கூறியுள்ள அமேசான் தாங்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்று மறுத்துள்ளது.

"ஐரோப்பிய ஆணையத்தின் உத்தரவை ஆய்வு செய்துவிட்டு, மேல்முறையீடு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்," என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஆனால், தொழிற்போட்டிக்கான ஐரோப்பிய ஆணையர் மார்கரெட் வெஸ்டேகர் லக்ஸம்பர்க் நாட்டில் வழங்கப்பட்ட சலுகைகளால் மற்ற தொழில் நிறுவனங்களைவிட அமேசான் மிகவும் குறைவான அளவே வரி செலுத்தியது என்றும், "இது ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில் நிறுவனங்களுக்கான அரசுகள் உதவி செய்வதற்கான சட்ட விதிகளுக்குப் புறம்பானது," என்றும் கூறியுள்ளார்.

"லக்சம்பர்க் வழங்கிய சட்டவிரோத வரிச் சலுகைகளால் அமேசான் நிறுவனத்தின் லாபத்தில் நான்கில் மூன்று பங்குக்கு வரி விதிக்கப்படவில்லை. உள்ளூர் நிறுவனங்களைப்போல கால் பங்கு வரிதான் அமேசான் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டிருந்தது. ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள், பிற நிறுவனங்களுக்குத் தராத வரிச்சலுகையை சில பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் தரமுடியாது, " என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்துக்கு ஒரு சதவீதத்துக்கு மிகாத வரி

இதேபோல, இன்னொரு அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்துக்கு அயர்லாந்தில் ஒரு சதவிகிதத்துக்கு மிகாத அளவிலேயே 'கார்ப்பரேட் வரி' விதிக்கப்பட்டது சட்டத்துக்குப் புறம்பானது என்று ஐரோப்பிய ஆணையம் முடிவு செய்துள்ளது.

வரி வசூல் செய்யத் தவறிய அயர்லாந்து அரசு மீது ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் அந்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஐரோப்பிய ஆணையத்தின் இந்த முடிவு தங்கள் நாட்டின் இறையாண்மையை தலையிடும் வகையில் அமைந்துள்ளது என்று கூறியுள்ள அயர்லாந்து அரசு, இது "மிகுந்த ஏமாற்றத்தை" தரும் முடிவு என்று கூறியுள்ளது.

"பெரும்பான்மையான நிறுவங்கள் செலுத்துவதைப்போல தாங்கள் செலுத்தக் கடமைப்பட்டுள்ள வரியை செலுத்தவேண்டும் என்னும் செய்தியை இந்த இரண்டு முடிவுகளும் வெளிப்படுத்துகின்றன," என்று மார்கரெட் வெஸ்டேகர் கூறியுள்ளார்.

அமேசான் மீதான விசாரணை

ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளுக்குப் புறம்பாக சந்தேகத்திற்குரிய வகையில் அமேசான் நிறுவனத்துக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்று 2014-இல் கூறிய ஐரோப்பிய ஆணையம், கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்திய விசாரணைக்குப் பிறகு இந்த முடிவை அறிவித்துள்ளது.

லக்சம்பர்க் அரசுக்கும் அமேசான் நிறுவனத்துக்கும் இடையே 2003-ஆம் ஆண்டு வரி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் அந்நிறுவனத்தின் லாபத்தின் பெரும் பகுதியை அமேசான் இ.யூ நிறுவனத்தில் இருந்து லக்சம்பர்க் நாட்டில் வரி விதிப்புக்கு உள்படாதஅமேசான் யூரோப் ஹோல்டிங் டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்கு மடை மாற்ற உதவியது என்று ஐரோப்பிய ஆணையம் கூறியுள்ளது.

அந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது ஐரோப்பிய ஆணையத்தின் தற்போதைய தலைவரான ஷாங் க்ளோட் யுங்கர், லக்சம்பர்க் பிரதமராக இருந்தார்.

- BBC - Tamil

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்