நியூசிலாந்து அணியை வெளுத்து வாங்கியது இந்தியா: அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தல்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிருக்கான உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில், இந்திய அணி 186 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் மகளிருக்கான உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக மந்தனா மற்றும் பூனம் ராட் களமிறங்கினர்.

மந்தனா 13-ஓட்டங்களிலும், பூனம் ராட் 4-ஓட்டங்களிலும் வெளியேறி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.

அதன் பின்னர் வந்த இந்திய அணியின் தலைவர் மிதாலி ராஜ், ஹார்மன்பிரிட் கார்ருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் இந்திய அணியின் ரன் விகிதம் சீரான விகிதத்தில் எகிறியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிதாலிராஜ் சதம் கடந்து 109-ஓட்டங்கள் குவித்து காஸ்பிரிக் பந்து வீச்சில் வெளியேறினார்.

இவருக்கு இணையாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹார்மன் பிரிட் அரைசதம் கடந்து 60-ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.

பின் வரிசை வீரராக வந்த வேதா கிருஷ்ணமூர்த்தி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 50-ஓவர் முடிவில் 7-விக்கெட் இழப்பிற்கு 265-ஓட்டங்கள் குவித்தது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக மிதாலி ராஜ் 109-ஓட்டங்களும், ஹார்மன் பிரிட் 60-ஓட்டங்களும், வேதா கிருஷ்ணமூர்த்தி 70-ஓட்டங்களும் குவித்தனர்.

இதைத் தொடர்ந்து 266-ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

துவக்க வீராங்கனைகளான சுஷி பேட்ஸ் 1-ஓட்டமும், மற்றொரு துவக்க வீராங்கனையான ரசெல் பிரிஸ்ட் 5- ஓட்டங்களிலும் வெளியேறினர்.

அதன்பின் வந்த சட்டர்வைட்(26) கேதே மார்ட்டின்(12) என வெளியேறினர். இதனால் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 52 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அடுத்து வந்த நியூசிலாந்து வீராங்கனைகள் அனைவரும் அடுத்தடுத்து வெளியேற, இறுதியாக 25.3-ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 79 ஓட்டங்களில் ஆல்அவுட் ஆனது.

இதனால் இந்திய அணி 186ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி சார்பில் ராஜேஸ்வரி கயாக்வார்ட் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments