உலகில் வாழும் அனைவருக்கும் மிக அவசியமானது உணவு, உடை, இருப்பிடமாகும். அதிலும் உணவு என்பது மிக இன்றியமையாதது.
காலங்கள் பல சென்றாலும் உணவிற்கும், அது சம்பந்தமான படிப்பிற்கும் உள்ள மதிப்பு என்றும் குறையாது.
பள்ளிப்படிப்பினை முடித்து கல்லூரியில் என்ன பிரிவினை எடுக்கலாம் என யோசிக்கும் மாணவர்களுக்கு உணவு தொழில்நுட்பம் சார்ந்த படிப்பானது நல்ல வேலை வாய்ப்பினை வழங்குகிறது.
உணவுத்துறை என்பது மிகப்பெரிய துறையாகும். தகுதியும் திறமையும் உள்ள இளைஞர்களின் தேவையானது இத்துறையில் பெருகி கொண்டே செல்கிறது.
மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்வதால் உணவு, ஊட்டச்சத்து தொடர்பான விஷயங்களில் இத்துறை சார்ந்தவர்களே அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இதற்கேற்றவாறு தொழில்நுட்பங்கள் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. உணவு தர உத்திவாதம், உணவு நலம், வேதியியல், உணவு நடைமுறை போன்ற பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
நான்காண்டு பட்டப்படிப்பினை முடித்தப்பின்னர், உணவு பொருள்கள் தயாரிக்கப்படும் உணவு தொழிற்சாலைகளில் இப்படிப்பினை முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள் உள்நாடுகள் மட்டுமின்றி வெளிநாட்டிலும் குவிந்துள்ளன.