கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனத்தில் உள்வாங்கப்படாத பட்டதாரிகளின் போராட்டம்

Report Print Kumar in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

கிழக்கு மாகாண சபையினால் வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதுடன், அறிவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரிய நியமன விண்ணப்ப அறிவுறுத்தலுக்கு மாறாக நியமனம் வழங்கப்பட்டதை கண்டித்தும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்பாக இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, '40 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் நியமனம் வழங்கு, எங்கள் கண்ணீருக்கு நீதிவேண்டும், அரசியல்வாதிகளே சிந்தியுங்கள், இன்று நாங்கள் தெருவில் நாளை நீங்கள் தெருவில், பரீட்சையிலும் சித்தி, நேர்முகதேர்விலும் சித்தி ஏன் நாங்கள் இன்னும் வீதி ஓரத்தில்" போன்ற சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்த பட்டதாரிகள்,

கிழக்கு மாகாணசபையினால் வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கு கோரப்பட்ட விண்ணப்பத்திற்கு மாறான முறையில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மாகாணத்திற்கு பொதுவான கொள்கை இருக்கும் போது மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வழங்கப்பட்டு மிகவும் குறைந்த புள்ளிகளைப்பெற்றவர்கள் ஏனைய மாவட்டங்களில் ஆசிரியர்களாக உள்ளீர்க்கப்பட்ட நிலையில் அதிகளவிலான புள்ளிகளைப் பெற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 40 புள்ளிகளுக்கு மேல் பெறுவோர் ஆசிரியர்களாக உள்ளீர்க்கப்படுவார்கள் என்று கிழக்கு மாகாணசபையினால் அறிவிக்கப்பட்டிருந்த போதும் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்ற பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

நேர்முகம்தேர்வு போட்டிப்பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களில் பலருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் எந்த அரசியல்வாதிகளும் தங்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவில்லை.

விண்ணப்பத்தில் வேறு அரச நிறுவனங்களில் நியமனம் பெற்றவர்கள் விண்ணபிக்கமுடியாது என்று கோரப்பட்டபோதிலும் பலர் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

எனவே கிழக்கு மாகாணசபை வேலையற்ற பட்டதாரிகள் நியமனத்திற்காக நடத்தப்பட்ட பரீட்சையில் சித்திபெற்ற அனைவரையும் உள்ளீர்க்க நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்