அன்று 350 ரூபாய் சம்பளம்: இன்று 100 கோடி வருவாய்! சாதனை தமிழரின் கதை

Report Print Raju Raju in தொழிலதிபர்
0Shares
0Shares
lankasrimarket.com

சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸ் நிறுவனம் இன்று மன்னா ஹெல்த்புட் பிராண்ட் என்ற பெயரில் முந்திரிபருப்பு, பாதம் பருப்பு வகைகள், சிறுதானியங்கள், பருப்பு வகைகளைக் கொண்டு பல இயற்கையான சத்து மாவுகளை தயாரித்து வருகிறது.

இதன் நிறுவனர் பெயர் நாசர் (55) தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் தனது பெற்றோருக்கு ஆறு குழந்தைகளில் ஒருவராக நாசர் பிறந்தார்.

சாதாரண நடுத்தர குடும்பம் தான் நாசருடையது. படிப்பில் கெட்டிகாரராக விளங்கிய அவர் பட்டப்படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ மேற்படிப்பு படிக்க கல்லூரியில் சேர்ந்தார்.

ஆனால், நாசர் தந்தையால் கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக படிப்பை நிறுத்திய நாசர் கோவையில் உள்ள ஹொட்டலில் மேனேஜராக பணிபுரியும் தனது நண்பரை காண சென்றார்.

அப்போது, அந்த ஹொட்டலில் டேப்லெட்ஸ் இந்தியா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், விற்பனை பிரதிநிதி வேலைக்கு ஆட்களை நியமிப்பதற்கான தேர்வை நடத்தி கொண்டிருந்தது.

திடீரென அதில் கலந்து கொண்ட நாசர் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தார், சம்பளமாக 350 ரூபாய் தரப்பட்டது.

இயல்பிலேயே நாசரின் சுறுசுறுப்பான சுபாவமும், அதீத உள்ளுணர்வு நிலையும் அவர் தொழிலில் வெற்றி பெற முக்கிய காரணமாக உள்ளது

1983ல் பணியில் சேர்ந்த நாசர் அங்கிருந்து 1988ல் விலகி வேறு மருத்துவ நிறுவனத்தில் விற்பனைப்பிரிவு தலைவராக சேர்ந்தார்.

1990களின் மத்தியில் சொந்தமாக தொழில் தொடங்கலாம் என நாசருக்கு யோசனை வர தனக்கு பழகி போன மருத்துவ துறையிலேயே அதை செய்ய நினைத்தார்.

ஆனால் உணவுத் தொழில் சார்ந்த நிறுவனத்தில் இருந்த அவரது நண்பரின் மனைவி, ஆரோக்கிய உணவு சார்ந்த தொழில் தொடங்கலாம் என்று நாசருக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், தனது 40 லட்ச சொந்த பணம் மற்றும் நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கிய பணம் என சேர்த்து 1 கோடி முதலீட்டில் சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். .

பல்வேறு திறமையான நபர்களை அருகில் வைத்து கொண்ட நாசரின் வியாபாரம் ஆரம்பத்திலேயே நன்றாக போனது.

பல சவால்கள் இருந்தாலும் அதை தனது தைரியத்தால் நாசர் சமாளித்து முன்னேறினார்.

ரோட்டரி சங்கத்தில் உள்ள நாசர், 2014-15-ம் ஆண்டில் சென்னை மற்றும் புறநகர் பகுதியின் ரோட்டரி மாவட்ட கவர்னராக இருந்துள்ளார்.

முதல் ஆண்டில் 45 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. பிறகு பல்வேறு வகையான பொருட்களை மன்னா ஹெல்த்புட் பிராண்ட் தயாரிக்க தொடங்க வியாபாரம் விரிவடைய ஆரம்பித்தது.

தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் வியாபாரம் பெரிதாக வளர்ந்து லாபம் அதிகரித்தது, கடந்த 2008ல் 9 கோடி ரூபாய் வருமானத்தை நிறுவனம் பார்த்தது.

இன்றைக்கு 60-க்கும் அதிகமான தயாரிப்புகளுடன் இந்த நிதி ஆண்டில் சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸ் நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கும் நெருக்கமாக வருவாய் ஈட்டி இருக்கிறது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்