மனிதர்களுக்கே உலகத்தை காட்டிய வரலாறு: சித்திரத்திற்குள் சிக்கிய பூமி

Report Print Kavitha in வரலாறு
137Shares
137Shares
lankasrimarket.com

மனித நாகரிகம் முதன் முதலாக தோன்றியதாக கருதப்படும் மெசபடோமியாவை (பாபிலோனியர்கள்) சுற்றி மட்டுமே முதல் மூன்று நூற்றாண்டு வரைபடங்கள் இருந்திருந்தன.

ஏனெனில் மனிதன் உலகம் என்று நினைத்தது அந்த பகுதியை மட்டுமே. மனிதன் பயணம் செய்ய, செய்ய உலகம் எவ்வளவு பெரியது என்பதை அறிந்தான்.

பாய்ட்டிங்கரின் உலக வரைபடம்

பாய்ட்டிங்கரின் உலக வரைபடம் என்பது கிபி 4 – 5 நூற்றாண்டுகளில் ரோம பேரரசுக் காலத்தில் நிலவிய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் தொடர்பைச் சித்திர வடிவில் விளக்குகின்ற புகழ்பெற்ற வரைபடம் ஆகும்.

இந்த உலக வரைபடத்தில் ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, பாரசீகம், இந்தியா, இலங்கை மற்றும் சீனாவின் ஒரு சிறு முனை போன்ற உலகப் பகுதிகள் சித்திரமாக விவரிக்கப்படுகின்றன.

உலக வரைபடத்தின் முன்னோடியாக கருதப்படும் பாய்ட்டிங்கரின் வரைபடத்தின் மூல வரைப்படம் ரோமப் பேரரசனான அகஸ்டஸ் (Augustus) என்பவரின் நண்பரும் உறவினருமான மார்க்கஸ் விப்சானியஸ் அக்ரிப்பா (Marcus Vipsanius Agrippa) கிமு 64 – கிமு 12 என்பவரின் வழிகாட்டலின் கீழ் வரையப்பட்டது.

இந்த அக்ரிப்பா என்பவர்தான் ரோமில் புகழ்பெற்ற பாந்தியன் (Pantheon) என்னும் அனைத்துக் கடவுளர் கோவிலைக் கட்டியவர்.

அகஸ்டஸ் இறந்ததும், அந்த வரைபடம் ரோமாபுரி நகரில் அமைதிப் பீடம் (Ara Pacis) என்று அழைக்கப்பட்ட இடத்தின் அருகே ‘விப்சானியஸ் நினைவு வாயிலில்’ பளிங்குக் கல்லில் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டது.

பண்டைய ரோமாபுரியில் உருவாக்கப்பட்ட உலக வரைபடமே பாய்ட்டிங்கர் உலக வரைபடத்திற்கு மூலம் என்பது கிளென் போவர்சாக் போன்ற அறிஞர்களால் நிரூபிக்கப்பட்டது.

பாய்ட்டிங்கரின் உலக வரைபடத்தில் காண்ஸ்டாண்டி நோபுள் காட்டப்பட்டுள்ளது. அந்நகரம் எழுப்பப்பட்டது கிபி 328ஆம் ஆண்டில் ஆகும். ஆனால் அங்கு பாம்பேய் (Pompeii) நகரமும் காட்டப்பட்டுள்ளது.

அந்நகரமோ வெசூவியசு (Vesuvius) எரிமலை கிபி 79இல் வெடித்துத் தீப்பிழம்பைக் கக்கியதன் காரணமாக அழிந்துபோன பாம்பேய் மீண்டும் கட்டப்படவில்லை.

அதுபோலவே, இத்தாலியின் ரவேன்னா (Ravenna) நகர் இந்த உலகப் படத்தில் மிகச் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதும் கருதத்தக்கது. ரவேன்னா நகரம் கிபி 402இல் இருந்து மேற்கு ரோமாபுரிப் பேரரசின் தலைமையிடமாக விளங்கியது. எனவே இந்த வரைபடம் கிபி 5ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.

தெற்கு ஜெர்மனியில் கிபி ஐந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அழிந்துபட்ட சில நகரங்கள் இந்த உலக வரைபடத்தில் உள்ளதால் அது கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முன்னர் வரையப்பட்டிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதினர்.

இந்த வரைபடத்தின் நடுவில் ரோம் நகர் அரச மாட்சிமையோடு வீற்றிருக்கக் காணலாம். அந்நகரம் ஓர் அரசிபோல உருவகிக்கப்பட்டு, தலையில் முடிசூடி, அரியணையில் வீற்றிருக்கிறது. அப்படத்திலிருந்து பல திசைகளிலும் சாலைகள் செல்கின்றன.

“எல்லா வழித்தடங்களும் ரோமாபுரிக்கே இட்டுச் செல்கின்றன” என்னும் முதுமொழிக்கு வித்திடுவதாக அமைந்துள்ளது. அங்கே காட்டப்படுகின்ற நெடுஞ்சாலைகளுள் சில இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஆப்பியா சாலை (via appia), அவுரேலியா சாலை (via aurelia) ஆகியவற்றைக் கூறலாம்.

பயணிகளுக்கு வழிகாட்டியாக அமைந்த இந்த வரைபடம் ஒரே சுருளேடாக இருந்தது. பின்னர், அதை நன்முறையில் பாதுகாக்கும் வகையில் அது 1863ஆம் ஆண்டில் 11 பகுதிகளாகக் பிரிக்கப்பட்டது. அப்பகுதிகளுக்கு முந்திய பகுதி ஒன்று இருந்திருக்க வேண்டும். அது கிடைக்கவில்லை.

அந்த முதல் பகுதியில் ரோமாபுரிப் பேரரசின் பகுதிகள் எசுப்பானியா, பிரித்தானியத் தீவுகள், வட மேற்கு ஆப்பிரிக்க கடற்கரைப் பகுதி போன்றவற்றை உள்ளடக்கிய வரைபடமாம். அது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதால் சேதமடைந்திருக்க வாய்ப்பு உண்டு. அதை 1898இல் பண்டைய வரைபடத்தின் பாணியில் உருவாக்கி இணைத்தார்கள்.

இந்த வரைபடத்தில் நகரங்களும் சாலைகளும் துல்லியமாகத் தரப்படவில்லை. அதன் நோக்கம் பயணிகளுக்குப் பயன்தரும் விவரங்களை அளிப்பது ஆகும். பயணிகளுக்குப் பயனில்லாதவை, எடுத்துக்காட்டாக, கடல்கள், ஆறுகள், பாலைநிலங்கள், மலைத் தொடர்கள் போன்றவை சுருங்கிய வடிவிலேயே தரப்படுகின்றன. மாறாக, நெடுஞ்சாலைகள் விளக்கமாக உள்ளன.

சாலைகளின் தூரங்கள் ரோமானிய “மைல்” அளவில் தரப்படுகின்றன. ஆனால் வேல்சு நாட்டிற்கு “லீக்” அளவும், கீழை நாடுகளுக்கு “பாராசங்கு” (Parasang) அளவும் (ஒரு நாள் கால்நடை தூரம், சுமார் 5 முதல் 6.5 கி.மீ) தரப்படுகின்றன. இந்தியப் பகுதியில் “கல்” என்னும் இந்திய மைல் தரப்படுகிறது (சுமார் 2.5 கி.மீ.).

இந்த வரைபடம் சுமார் 200 ஆயிரம் கி.மீ. தூரத்தை உள்ளடக்கியதாக உள்ளது. எல்லா இடங்களும் அளவுக்கு ஏற்ப வரையப்படவில்லை. எடுத்துக்காட்டாக, ரோமப் பேரரசின் மையப்பகுதியான இத்தாலி மட்டுமே 5 பகுதிகளை உள்ளடக்குகிறது. எஞ்சிய உலகப் பகுதிகள் அனைத்தும் 7 பகுதிகளுக்குள் அடக்கப்படுகின்றன.

பாய்ட்டிங்கரின் உலக வரைபடத்தில் வெவ்வேறு நிறங்கள் பயன்படுத்துவதும் சிறப்பு. கிடைக்காமற்போன முதல் பகுதி மட்டும் கருப்பு வெள்ளையில் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. எஞ்சிய 11 பகுதிகளும் பல்வேறு நிறங்கள் கொண்டு வரையப்பட்டன.

இவ்வாறு, மஞ்சள் நிறம் நிலத்தைக் காட்டுகிறது; கருப்பு நிறம் பூமியின் எல்லையைக் காட்டுகிறது. மேலும் பெரும்பாலான எழுத்து விவரங்களும் கருப்பில் உள்ளன. சிவப்பு நிறத்தால் நெடுஞ்சாலைகள் குறிக்கப்படுகின்றன. கடல், ஏரி, ஆறு ஆகியவை பச்சை நிறத்தில் காட்டப்படுகின்றன.

மஞ்சள் நிறமும் இளஞ்சிவப்பு நிறமும் மலைகளைக் காட்டுகின்றன. இந்த நிறங்கள் மக்கள் வசிக்கும் இடங்கள், சாலைகள் பிரியும் இடங்கள் போன்றவற்றையும் காட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வரைபடத்தை ஜெர்மனியின் வோர்ம்சு நகரில் (Worms) ஒரு நூலகத்தில் கண்டெடுத்தவர் கோன்ராடு செல்ட்டெஸ் (Konrad Celtes) என்பவர் ஆவார். அதை அவர் தம் நண்பரான பாய்ட்டிங்கரிடம் 1508இல் ஒப்படைத்தார்.

இன்று இந்த உலக வரைபடம் ஆஸ்த்திரிய நாட்டு வியன்னா நகரில் மைய நுலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்