பொலிஸ் ஜீப்பில் ஏற மாட்டேன் என அடம் பிடித்த சசிகலா

Report Print Thayalan Thayalan in இந்தியா
பொலிஸ் ஜீப்பில் ஏற மாட்டேன் என அடம் பிடித்த சசிகலா
0Shares
0Shares
lankasri.com

பரப்பன அக்ரஹார நீதிமன்றில் சரணடைந்த சசிகலா, அங்கிருந்து சிறைக்குச் செல்வதற்காக ஜீப்பில் ஏற மறுத்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 15ஆம் திகதி மேற்படி நீதிமன்றில் சரணடைந்த சசிகலா, நீதிமன்ற சம்பிரதாயங்களை முடித்த பின்னர், அக்ரஹார சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதற்காக, பொலிஸாரின் திறந்த ஜீப்பில் ஏறுமாறு கூறிய பொலிஸாரைப் பார்த்து முறைத்த சசிகலா, “நான் ஒன்றும் கிரிமினல் இல்லை. என்னை சிறையில் போடலாம். ஆனால் ஒரு குற்றவாளி போல இந்த திறந்த ஜீப்பில் ஒருபோதும் ஏற மாட்டேன். சிறை எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் பரவாயில்லை. நான் நடந்தே வருகிறேன்” என்று கூறியதோடு நில்லாமல் சிறை நோக்கி நடக்கத் தொடங்கினார் என்று, சம்பவத்தின்போது அங்கிருந்த ஒருவர் இந்திய ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறைச்சாலைக்கு வந்தபோது, சசிகலாவின் முகத்தில் ஏமாற்றமும், அடுத்த நான்கு வருடங்களும் சிறையிலேயே கழிக்கவேண்டுமே என்ற வெறுப்பும் வெளிப்படையாகத் தெரிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த முறை ஜெயலலிதாவின் தயவால் அவருக்கு சிறையில் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டபோதும், இம்முறை சசிகலா ஒரு முக்கியமான பிரமுகர் என்ற அந்தஸ்துக்குச் சொந்தக்காரர் அல்ல என்று கூறிய நீதிமன்றம், சாதாரண சிறையிலேயே அவர் அடைத்துவைக்கப்பட வேண்டும் என்றும் தேவைப்பட்டால் சிறைச்சாலையில் இதற்காக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தது. இது, சசிகலாவுக்கு மேலும் ஏமாற்றத்தை அளித்தது.

இதேவேளை, சிறைக்குள் தனது முதல் நாளை சசிகலா எவ்வாறு கழித்தார் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

108ஆம் இலக்கச் சிறையறையில், இளவரசியுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அதில், சீமெந்துப் படுக்கையும், பாதிச் சுவர் மறைப்புடன் கூடிய கழிவறையும் மட்டுமே இருக்கின்றன. என்றாலும், அவரது உடல் நிலையைக் கருத்திற்கொண்டு சிறிய கட்டில் ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது.

சசிகலாவுக்கு பெண் கைதிகள் அணியும் வெள்ளை நிறச் சேலை வழங்கப்பட்டபோதும், அதற்குப் பொருத்தமான ரவிக்கை வழங்கப்படாததால், இதுவரை அவர் வெள்ளைச் சேலை அணியவில்லை.

சிறைக்குள் இளவரசியுடன் அவ்வப்போது பேசியபோதும், பெரும்பாலும் யாருடனும் பேசாமலேயே இருந்தார் சசிகலா. தமிழக அரசியல் நிலவரம் குறித்த தகவல்களையும் தெரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை. அடைக்கப்பட்ட நாள் முதல் இதுவரை சிறையை விட்டு சசிகலா வெளியே வரவில்லை. நேற்றும் நேற்று முன்தினமும் இரவு வெகு நேரம் விழித்திருந்ததாகவும் ஓரிரு மணித்தியாலங்களே உறங்கியதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனக்கு சிறப்பு அறை வழங்குமாறு இன்று சசிகலா விண்ணப்பித்திருப்பதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, சசிகலாவுக்கு அடுத்த சிறையறையில், ஜெயலலிதாவின் பரம விசுவாசியான ‘சயனைட்’ மல்லிகா அடைக்கப்பட்டிருக்கிறார். பல்வேறு கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments