அரசுப் பள்ளி மாணவிக்கு ஜப்பான் பயணத்தைப் பரிசளித்த விவசாயம்

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின்மூலம் நடைபெற்றுவரும் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதின் ஓர் அம்சமாக, 'சகுரா எக்சேஞ்ச் புரோகிராம் ஆஃப் ஜப்பான்' (sakura exchange program of Japan)' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

இந்தத் திட்டத்தின்மூலம், இந்தியா சார்பில் 30 மாணவர்கள் ஜப்பான் சென்று, அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையங்களைப் பார்வையிடவும் அறிவியல் அறிவை வளர்க்கும் முகாமில் கலந்துகொள்ளவும் இருக்கிறார்கள்.

advertisement

இதற்காக, தமிழகத்திலிருந்து தேர்வான ஐந்து பேரில் ஒரு மாணவிதான், சுடர்ஒளி. சேலம், கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி. மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த சுடர்ஒளி, அதை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

''உங்களைப் பற்றி..?''

"என் அப்பா, சுடலேஸ்வரன், அம்மா பெயர், பாப்பாத்தி. ரெண்டு பேருமே கூலி வேலைக்குப் போறாங்க. ஒரு அக்காவும் ஒரு தம்பியும் இருக்காங்க.

''எப்படிக் கிடைத்தது இந்த வாய்ப்பு?''

''எனக்கு விவசாயம் மற்றும் அறிவியல் ரெண்டுலயும் ஆர்வம் அதிகம். 2013-ம் வருடம் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் புத்தாக்கப் போட்டியில் கலந்துகொண்டு, 'எனது மண் எனது விவசாயம்' என்ற தலைப்பில் என் படைப்பைச் சமர்ப்பித்தேன்.

அது, சேலம் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது. அதன்மூலம் மதுரையில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றேன். தேசியப் போட்டிக்குத் தகுதிபெற்றேன்.

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் இரண்டாம் இடம்பெற்றேன். இதன்மூலம், ஜப்பானுக்குச் சென்று நவீன அறிவியல் தொழில்நுட்பங்களுடன் இணைந்த விவசாய முறை ஆராய்ச்சி நிலையங்களைப் பார்வையிடவும், விவசாயத் தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுக்கவும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. அந்த நிமிடங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.''

''உங்களுடைய 'எனது மண் எனது விவசாயம்' பற்றி சொல்லுங்கள்...''

'' 'எனது மண் எனது விவசாயம்' என்பது, நீர் சிக்கனம்மூலம் விவசாயம் செய்யும் திட்டம். கழிவுநீரைச் சுழற்சி முறையில் பயன்படுத்துதல், மின் இணைப்பு இல்லாத பசுமையான தன்னிறைவு வீடு, காற்றாலை சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்திசெய்தல், இயற்கை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல் என, விவசாயத்தில் அறிவியல் தொழில்நுட்பங்களைப் புகுத்துவது. 28 ஒருங்கிணைந்த பண்ணை முறையை, ஏழு மாதங்கள் விவசாய நிலத்தில் செய்துபார்த்து, சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை அது.''

“இந்தத் தருணத்தை எப்படி உணர்கிறீர்கள்?''

''இந்த மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளால் முடியாது. எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொள்வேன். என்னுடைய ஆராய்ச்சிக்கு இந்தப் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என்னுடைய சாதனைக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்த ஆசிரியர் கலையரசி அவர்களுக்கும் தலைமையாசிரியர் அவர்களுக்கும் பெற்றோருக்கும் நன்றி.''

''எதிர்காலக் கனவு?''

''இந்த விருதும் வாய்ப்பும் விவசாயத்தின் மீது மேலும் ஆர்வத்தை உண்டாக்கி இருக்கு. விவசாயத்தில் பட்டம் பெற்று, தொடர்ந்து விவசாயம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுவேன். விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் என் ஆராய்ச்சிகளைச் செய்வேன்.''

- Vikatan

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments