நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கடத்திய காதலன்: மடக்கி பிடித்து சிறைக்கு அனுப்பிய பொலிசார்

Report Print Nithya Nithya in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

சினிமா பாணியில் ஒருதலைக்காதலால் மாமன் மகளை கடத்திய கும்பலை மடக்கி பிடித்து பொலிசார் சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் திருச்சி டி.வி.எஸ் டோல்கட் அருகிலுள்ள என்.எம்.கே நகர் 2-வது தெருவில் வசித்து வரும் துரைராஜ் என்பவருக்கு முத்துக்குமார், தனலெட்சுமி உள்ளிட்ட இரு பிள்ளைகள் உள்ளனர்.

அதில் தனலெட்சுமி, திருச்சி ராஜா காலனி பகுதியிலுள்ள கமலா நிக்கேத்தன் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை 8.00 மணியளவில், முத்துக்குமார் அவரது தங்கை தனலெட்சுமியை அவர் பணிபுரியும் பள்ளிக்குத் தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, பள்ளிக்கு அருகில் இன்டிகோ கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்தக் காரிலிருந்து இறங்கிய நபர் ஒருவர், இரு சக்கர வாகனத்தை மறித்து தனலெட்சுமியின் அண்ணன் முத்துக்குமார் மீது மிளகாய்ப் பொடியைத் தூவினார்.

அடுத்த சில நொடிகளில் காரில் மறைந்திருந்த மூன்றுபேர், பள்ளி ஆசிரியை தனலெட்சுமியைக் காரில் வலுக்கட்டாயமாக ஏற்றியதோடு, மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டார்கள். ஆசிரியையின் அலறல் சத்தம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்நிலையில், தகவலறிந்து வந்த கன்டோன்மென்ட் காவல் நிலைய பொலிஸார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து, ஆசிரியை தனலெட்சுமியின் அண்ணன் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ஆசிரியை கடத்தியது தனலெட்சுமியின் முறைமாமனான கஜேந்திரன் மற்றும் அவனின் நண்பர்கள் என்பது தெரியவந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள மேலதிருப்பந்துருத்தியைச் சேர்ந்த கஜேந்திரன் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்ததும், கடந்த ஆறுமாதத்துக்கு முன்பு வரை தனலெட்சுமியின் வீட்டிலேயே குடியிருந்து வேலைக்குச் சென்றுவந்ததும் தெரியவந்தது. மேலும், கஜேந்திரன் தனலெட்சுமியைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு, அவரைப் பெண் கேட்டுள்ளார்.

இதையடுத்து தனலெட்சுமிக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவருக்கு வருகின்ற செப்டம்பர் மாதம் திருமணம் நடக்கவுள்ளது.

இந்நிலையில் தனது காதலுக்குத் தனலெட்சுமி குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கஜேந்திரனும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து தனலெட்சுமியைக் கடத்திச் சென்றுள்ளார்.

இவர்களை பொலிசார் கைது செய்து நடத்திய விசாரணையில், கஜேந்திரன் தனது அத்தை மகள் தனலெட்சுமியைக் கடந்த இரண்டாண்டுகளாக ஒருதலையாகக் காதலித்து வந்தேன் என்றும், அவரை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்ய நிச்சயம் செய்ததால், தனது நண்பர்கள் உதவியுடன் கடத்தியதாகவும் ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் கஜேந்திரன் உள்பட 4 பேரைக் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments