சொந்த அண்ணியை அடித்து கொலை செய்த சகோதரர்கள்: அதிர்ச்சி தரும் காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா
1267Shares
1267Shares
lankasrimarket.com

தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில், மது போதையில் அண்ணன் மனைவியை அடித்து கொலை செய்த சகோதரர்கள் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொல்லுபட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சின்னசாமி என்பவரின் மனைவி லட்சுமி, வீட்டின் முன்பு போண்டா கடை நடத்தி வந்தார்.

கடந்த 4ம் திகதி இவரது வீட்டிற்கு மதுபோதையில் வந்த சின்னசாமியின் சகோதரர்களான மகாலிங்கம், சின்னகுட்டி ஆகியோர், குடிப்பதற்கு பணம் கேட்டு லட்சுமியை தொந்தரவு செய்துள்ளனர்.

அவர் பணம் தரமறுத்தபோதும், மீண்டும் மீண்டும் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த லட்சுமி அவர்களை திட்டி அனுப்பி உள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய மகாலிங்கம், சின்னகுட்டி ஆகியோர், மீண்டும் மது குடித்துவிட்டு இரவு 10 மணிக்கு லட்சுமியின் வீட்டுக்கு வந்து, அவரிடம் தகராறு செய்துள்ளனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், இருவரும் சேர்ந்து லட்சுமியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் மயங்கி கீழே விழுந்த லட்சுமி, சிறிது நேரத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த அவர்கள், யாருக்கும் தெரியாமல் லட்சுமியை சாக்கு மூட்டையில் கட்டி, இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, கொல்லுப்பட்டியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள தொம்பக்கல் காட்டு பகுதியில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் லட்சுமியை காணாததால், அவரது கணவன் சின்னசாமி பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

உடனடியாக விசாரணையில் இறங்கிய பொலிசார், சந்தேகத்தின் அடிப்படையில், மகாலிங்கம், சின்னகுட்டி ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில், லட்சுமியை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, மகாலிங்கம், சின்னகுட்டி ஆகியோர் அளித்த தகவலின்பேரில், தொம்பக்கல் காட்டு பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த லட்சுமியின் சடலத்தைக் கைபற்றிய பொலிசார், உடற்கூறு ஆய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, லட்சுமி சில தினங்களுக்கு முன்பு மகளிர் சங்கத்தின் மூலம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கி வீட்டில் வைத்திருந்ததாகவும், இந்த பணத்தை மகாலிங்கம், சின்னகுட்டி ஆகியோர் இணைந்து அபகரித்து விட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தற்போது கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், லட்சுமி கொலை செய்யப்பட்ட விவகாரம் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக உறவினர்கள் கூறிய புகார் போன்றவை குறித்து, பாலக்கோடு பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்