ஆடு மேய்ப்பதற்காக அமெரிக்க விஞ்ஞானி பணியை ராஜினாமா செய்த இளைஞர் இன்று ஆட்டுப் பண்ணைக்கு உரிமையாளராக உள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலம் புல்டானாவில் பிறந்த அபிஷேக் பாரத் சிறு வயதி முதல் கல்வியில் சிறந்து விளங்கியுள்ளார்.
2008-ஆம் ஆண்டு பஞ்சமராவ் தேஷ்முக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த அபிஷேக், அமெரிக்கா சென்று தனது முதுகலை பட்டத்தை பெற்றுள்ளார்.
பின்னர் அமெரிக்காவின் Louisiana பல்கலைக்கழக்கத்தில் தனது டாக்டரேட் பட்டத்தை பெற்று அதே பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் விஞ்ஞானியாகவும் பணியாற்றியுள்ளார்.
அதில் போதுமான திருப்தி இல்லாததால் தனது தாய்நாடான இந்தியாவிற்கு சென்று விவசாயம் செய்ய முடிவு செய்துள்ளார் அபிஷேக்.
இதற்கு அவரது குடும்பம் மற்றும் உறவினர்கள் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எதிர்ப்பை மீறி 20 ஏக்கர் நிலத்தினைக் குத்தகைக்குப் பெற்று அதில் ஆடு வளர்ப்பினை துவங்கியுள்ளார்.
துவக்கத்தில் 120 ஆடுகளுடன் பண்ணைத் தொடங்கிய அபிஷேக்கிடம் தற்போது 400 ஆடுகள் உள்ளன.
படித்த கர்வம் இல்லாமல் அனைத்து விதமான பராமரிப்பு பணிகளிலும் தானே இறங்கி வேலை செய்து வரும் அந்த நபர், ஆறு ஏக்கர் நிலத்தில் ஆடுகளுக்காக மக்காச்சோளம் மற்றும் தினை போன்றவற்றை விவசாயமும் செய்து வருகிறார்.
தற்போது ஆண்டு வருவாயாக ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் அந்த நபர், வரும் காலங்களில் கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.
மேலும், தன்னைப் போன்ற ஆடு வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசப் பட்டறை அமைத்து பயிற்சி வழங்கி வரும் அந்த நபர், பலருக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார்.
விஞ்ஞானி பணியை இராஜினாமா செய்துவிட்டு ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.