தமிழகத்தில் நடந்த நகைக் கடை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான நாதுராமை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னைக் கொளத்தூரில் நகைக்கடை கொள்ளை தொடர்பாக நாதுராம், தினேஷ் சௌத்ரி என்கிற இருவரைப் பிடிக்க ராஜஸ்தானுக்கு தமிழகப் பொலிசார் தனிப்படை அமைத்துச் சென்றிருந்தனர்.
ஜெய்ப்பூர் அருகே பாலி மாவட்டத்தில் பதுங்கியிருந்தவர்களைப் பிடிக்க, தமிழக பொலிசார் முயன்றனர்.
அப்போது, இரு தரப்புக்குமிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி மீது குண்டு பாய்ந்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், முக்கிய குற்றவாளியான நாதுராம் தன்னுடைய உறவினர்களுடன் தலைமறைவானார்.
அதன் பின் பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில் இரண்டாவது முக்கிய குற்றவாளி என்று கூறப்படும் தினேஷ் சவுத்ரியை ஜோத்பூர் பொலிசார் கைது செய்தனர்.
இருப்பினும் நாதுராம் சிக்காமல் இருந்ததால், அவனை பிடிப்பதற்கு ராஜஸ்தான் பொலிசார் 3 தனிப்படைகளை அமைத்தனர்.
இதையடுத்து பொலிசாருக்கு கிடைத்த தகவல் படி குஜராத்தில் தலைமறைவாக இருந்த கொள்ளையன் நாதுராமை ராஜஸ்தான் பொலிசார் கைது செய்துள்ளனர்.