தனது கண்ணையே மகனுக்கு தானமாக தந்த தாயார்: நெகிழ வைக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

இந்திய மாநிலம் கேரளாவில் தன்னால் மகனின் பார்வை பறிபோனதை எண்ணி வருந்திய தாயார் விபத்தில் உயிரிழந்ததையடுத்து அவரது கண்ணை மகனுக்கு பொருத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த ராஜப்பன் ரமாதேவி தம்பதிக்கு கோகுல் (27), ராகுல்ராஜ் (25) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களது மூத்தமகன் கோகுல் 6 வயதாக இருந்த போது வீட்டில் வளர்த்த பசு ஒன்று கோகுல் மீது ஆவேசமாக பாய முயன்றுள்ளது.

அப்போது மகனை காப்பாற்ற வழி தெரியாத ரமாதேவி அருகில் கிடந்த கற்களை எடுத்து மாட்டின் மீது எறிந்தார்.

அதில் ஒரு கல் மாடு மீதும் மற்றொரு கல் மகன் மீதும் பட்டது. மாடு மீது பட்டகல்லால் மாடு வேறுபக்கம் ஓடியது. மகன் மீது பட்ட கல் அவரின் இடது கண்ணை சிதைத்தது.

நொறுங்கிப்போன ரமாதேவி உடனே மகனை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றார். கோகுலை பரிசோதனை செய்த மருத்துவர் இடது கண் முற்றிலும் சிதைந்து பார்வை பறிபோய் விட்டது. மாற்றுக்கண் தான் பொருத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் மகனின் பார்வை பறிபோனதை எண்ணி தாய் குற்ற உணர்வில் வருந்தியே வந்துள்ளார். இருப்பினும் மகன் மீது கூடுதல் பாசம் வைத்து வளர்த்து வந்தார்.

இதனிடையே இரண்டாவது மகனுடன் பைக்கில் சென்ற ரமாதேவி தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரமாதேவி பரிதாபமாக உயிரிழ்ந்தார்.

இதனையடுத்து குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று மருத்துவர்கள் ரமாதேவியின் கண்களை அவரது மகனுக்கு பொருத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்