வாழ்க்கையில் வெற்றி பெற உதவும் முக்கிய குணம் எது?

Report Print Peterson Peterson in வாழ்க்கை முறை
1176Shares
1176Shares
lankasrimarket.com

ஒவ்வொருவரின் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் அவர்களை உயர்த்தவும் தாழ்த்தவும் செய்கிறது.

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என கடினமாக உழைத்தாலும் சிலரது குணத்தால் அதற்கான பலன்கள் கிடைக்காமல் போய்விடுகிறது.

ஒரு கிராமத்தில் சிற்பி ஒருவர் வசித்து வந்துள்ளார். கிராமத்தில் கோயில் இல்லாத காரணத்தினால் புதிதாக கோயில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

சிற்பியை நேரில் சந்தித்த கிராம மக்கள் ‘புதிதாக கோயில் கட்டுகிறோம். நாங்கள் வணங்குவதற்கு சிலை ஒன்றை செய்து தர வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்ற சிற்பி அருகில் உள்ள மலைக்கு சென்று இரண்டு கற்களை கொண்டு வந்து சிலை வடிக்கும் பணியை தொடங்கியுள்ளார்.

ஒரு மாதத்திற்கு பின்னர் சிலை தயாரானதும் அதை கிராம மக்களிடம் ஒப்படைத்துள்ளார்.

பின்னர், கோயில் கட்டுமானப்பணிகள் முடிவடைந்ததும் சிலை கர்ப்ப கிரகத்தில் வைக்கப்பட்டதும் மக்கள் தினமும் வணங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில், ஒரு நள்ளிரவு நேரத்தில் யாரோ ஒருவர் அழுவது கர்ப்ப கிரகத்தில் இருந்த சாமி சிலைக்கு கேட்டுள்ளது.

உடனே ‘யார் அழுவது?’ என சாமி சிலை கேட்டுள்ளது.

அப்போது, கோயிலுக்கு வெளியே இருந்த ஒரு படிக்கல் ‘நான் தான் அழுகிறேன்’ என கண்ணீருடன் பதிலளித்தது.

’ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது?’ என சாமி சிலை கேள்வி எழுப்பியுள்ளது.

’நாம் இருவரும் ஒரே மலையில் தான் பிறந்தோம். நம் இருவரையும் ஒரே சிற்பி தான் கொண்டு வந்து சிலை வடித்தார். ஆனால், உன்னை சாமி சிலையாக கர்ப்ப கிரகத்தில் வைத்துவிட்டார்கள்.

என்னை படிக்கல்லாக கோயிலுக்கு வெளியே வைத்துவிட்டார்கள். உன்னை அனைவரும் பக்தியுடன் வணங்குகிறார்கள். ஆனால், என்னை அனைவரும் ஏறி மிதித்துவிட்டு செல்கிறார்’ என படிக்கல் வேதனையான குரலில் பதிலளித்தது.

படிக்கல்லின் பதிலை கேட்டு சாமி சிலை சிரித்துள்ளது. ‘உன்னுடைய இந்த நிலைக்கு நீயே தான் காரணமே தவிர, சிற்பியும் ஊர் மக்களும் காரணம் இல்லை’ என தெரிவித்துள்ளது.

‘என்ன? என்னுடைய நிலைக்கு நான் காரணமா? இந்த நிலையை அடைய நான் என்ன செய்தேன்?’ என படிக்கல் வியப்புடன் கேட்டுள்ளது.

இதற்கு சாமி சிலை பேசியபோது ‘நம் இருவரையும் சிற்பி ஒரே மலையில் இருந்து தான் கொண்டு வந்தார்.

முதலில் உன்னை தான் சாமி சிலையாக வடிக்க முயன்றார். ஆனால், சிற்பி உலியால் உன்னை செதுக்க முயன்றபோது அந்த வலியை தாங்க முடியாமல் நீ அழுதாய். உனக்கு ஏற்பட்ட வலியால் உன் உடலின் ஒரு பகுதியை கூட சிற்பியால் செதுக்க நீ அனுமதிக்கவில்லை.

வேறு வழி இல்லாத சிற்பி உன்னை செதுக்குவதை விட்டுவிட்டு என்னை தேர்ந்தெடுத்தார்.

என் உடலில் உலியை வைத்து அடித்தபோது எனக்கும் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அந்த வலியை நான் தாங்கிக்கொண்டேன். ஒவ்வொரு பகுதியை செதுக்கும்போதும் எனக்குள் ஏற்பட்ட வலியை எனக்குள்ளே வைத்துக்கொண்டேன்.

சிற்பியும் என்னை சாமி சிலையாக வடித்து கோயிலின் கர்ப்ப கிரகத்தில் வைத்துவிட்டார். எதையும் தாங்கிக்கொள்ளாத உன்னை படிக்கல்லாக கோயிலுக்கு வெளியே வைத்து விட்டார்.

வாழ்க்கையும் இப்படி தான். நாம் முன்னேற முயற்சிக்கும்போது எண்ணற்ற தடைகள், துயரங்கள், வலிகள், அவமானங்கள் ஏற்படும். ஆனால், இவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு முன்னேறும் குணம் இருந்தால், நாம் செல்ல வேண்டிய இலக்கை நிச்சயம் அடையலாம்’. என சாமி சிலை விளக்கம் அளித்தது.

தன்னுடைய தவறை புரிந்துக்கொண்ட படிக்கல் கண்ணீருடன் சாமி சிலையிடம் இருந்து விடைப்பெற்றது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்