கிழக்குப் பல்கலை. மருத்துவபீடம் தொடர்பாக பா. அரியநேத்திரனின் கருத்துக்கு ஹிஸ்புல்லாஹ் கடும் கண்டனம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தில் கற்கின்ற பயிற்சியாளர்களுக்கு இதுவரையில் அவர்களுக்கான வதிவிடபயிற்சிகள் வழங்கப்படவில்லை. அதன்மூலம் அந்த பல்கலைகழகத்தில் படிக்கின்ற மாணவர்கள் எதிர்காலத்தில் பலபிரச்சினைகளை எதிர் நோக்குவார்கள்.
எனவே இது தொடர்பாக மிகவிரைவில் கிழக்குப் பல்கலைகழகத்திலோ வைத்தியதுறையிலோ கல்விகற்கின்ற வைத்தியபீட மாணவர்கள் பயிற்சிக்காக அவர்களுக்கான வசதிகள் செய்யப்படவேண்டுமென உயர்கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கவிடமும், உயர்கல்வி அமைச்சரின் செயலாளரிடமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமும் பலதடவைகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளேன்.
அதுமாத்திரமல்ல அவர்களுக்கான பயிற்சிகளை முழுமையாக வழங்குவதற்கான வசதிகள் மட்டக்களப்பு வைத்தியசாலையிலே தற்போது போதுமான கட்டிடவசதிகள் இல்லாத காரணத்தினால்தான் அந்த உள்ளக பயிற்சிநெறிகளை வழங்க முடியாதுள்ளதாக அங்கிருந்து தகவல் கிடைத்தது.
எனவே அவ்வாறான நிலையில் அந்தபயிற்சிகளில் ஒருசில பிரிவை தற்காலிகமாக காத்தான்குடி தள வைத்தியசாலையிலே அமைக்க முடியுமெனவும், இதற்குபோதுமான கட்டிடவசதிகள் இருப்பதாகவும் அதன் மூலம் மட்டக்களப்பு வைத்திசாலையோடு காத்தான்குடி வைத்தியசாலையும் இணைந்து, இதற்கான உள்ளக பயிற்சிகளை வழங்க முடியுமென்ற ஆலோசனையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்வைத்துள்ளேன்.
அந்தஅடிப்படையில் தான் உயர்கல்வி அமைச்சு, தொடர்பாக சில ஆலோசனைகளையும் ஆராய்ச்சிகளையும் செய்ததே தவிர பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கூறியதைப்போல உள்ளக பயிற்சிகளை காத்தான்குடிக்கு முழுமையாக மாற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதுமுற்றுமுழுதான பொய்யானதொரு கூற்றாகும். இது மாத்திரமல்ல அதிலும் இன்னும் அவ்வாறு மாற்றுவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. ஒருசில பயிற்சிகளை மாத்திரம் காத்தான்குடி தள வைத்தியசாலையில் மாற்றுவது தொடர்பான ஒரு ஆலோசனை மாத்திரமே முன் வைக்கப்பட்டது.
எனவே இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், சமூக ரீதியிலும் இன ரீதியிலும் சிந்திப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற பயிற்சிகளில் ஒருசில பயிற்சிகளை மாத்திரம் காத்தான்குடி தள வைத்தியசாலையில் மாற்றுவது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தபோவது இல்லை.
ஆனால் காத்தான்குடி தள வைத்தியசாலையும் மட்டக்களப்பு வைத்தியசாலையும் இணைந்ததாகவே செயற்படும். ஆகவே இவ்வாறு காத்தான்குடி வைத்தியசாலைக்கு இடம்
மாற்றுவது என்பது ஒரு முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிக்கு இடம் மாற்றுவது என்றால் மட்டக்களப்பு வைத்தியசாலையையும் ஒரு தமிழ் வைத்தியசாலையாக பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கருதுகின்றாரா?
எனவே மட்டக்களப்பில் காத்தான்குடியிலும் இருக்கும் வைத்தியசாலைகள், மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான வைத்தியசாலையே தவிர முஸ்லிம்கள், தமிழ் மக்கள் என்று மக்களை பிரித்து தொடர்ந்தும் இவ்வாறான இனவாத கீழ்த்தரமான அரசியல் செய்வதிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் முழுமையாக தன்னை விலக்கிக் கொள்ள வேண்டுமென்று இந்தசந்தர்ப்பத்திலே நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
நாங்கள் முப்பது வருடகால யுத்தத்தின் பின்னர் இனவாதத்தினை அழித்து ஜனாதிபதி தலைமையில் இன்று இனங்கழுக்கிடையில் ஒருபரஸ்பர உறவினை வளர்த்து வருகின்றோம்.
இந்த சூழ்நிலையில் கிழக்கு பல்கலைகழகத்தின் உடைய 6 பயிற்சிகளில் ஒரு பயிற்சியினை காத்தான்குடியில் அமைய வேண்டுமென கோருவதில் என்னதவறு இருக்கிறது. என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.