அடிப்படை வசதிகளே தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு! இதுவே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு: யாழ். ஆயர்
இனப்பிரச்சினை தீர்வை நிராகரித்து விட்டு, அடிப்படை வசதிகளை மட்டும் வழங்கினால் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும் என அரசாங்கம் எதிர்பார்கின்றது. ஆனால் அது தவறான அபிப்பிராயம் என அமெரிக்க தூதுவர் பற்றிசியா பூட்டினிடம் யாழ். ஆயர் எடுத்துக் கூறியுள்ளார்.
யாழ். ஆயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற சிறப்புச் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழர்கள் இன்றும் ஒன்று கூடுவதற்கும், சுதந்திரமாக பேசுவதற்கும் கூட முடியாதவர்களாகவே உள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் ஜனநாயகம் என்பதே கிடையாது. உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்தும் பேணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், யாழ். மக்கள் நிம்மதியற்ற வாழ்வையே வாழ்கின்றனர் என ஆயர் எடுத்துக் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பை தொடர்ந்து அமெரிக்க தூதுவர், யாழ். வணிகர் கழக பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
