கூட்டமைப்பினர் கொள்கைகளை வீசியெறிந்துவிட்டு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்: வி. முரளிதரன்
மட்டக்களப்பு சுபராஜ் இன் ஹோட்டலில், கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு குறைந்தது ஐந்து ஆசனங்களை பெறவேண்டும் என்பது எங்களது நோக்கமாக இருக்கின்றது.
அதனை மையப்படுத்தியே எங்கள் பிரசார திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். சிலவேளைகளில் ஆறு ஆசனங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. அதுவும் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
மக்கள் ஒருங்கிணைந்து வாக்களிப்பார்களால் எங்களுக்கு இந்த ஆறு ஆசனங்களையும் பெறும்வாய்ப்பிருக்கின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் இந்த விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் கணிணி பொறியியலாளராக இருந்து மாணவர்கள் உட்பட கல்விச் சமூகத்துக்கு சேவையாற்றிவரும் பிராவோ ஹன்டி, அதிபராக பல மாணவர்களின் வெளியேற்றத்துக்கு துணையாக நின்ற ருத்திரமலர் ஞானபாஸ்கரன், சகல மொழியாற்றலும் நீண்டகால அரசியல் தேர்ச்சிபெற்றவருமான இராஜன் மயில்வாகனம் ஆகியோரை இந்த தேர்தலில் களமிறக்கியுள்ளேன்.
சாதாரண நிலையில் உள்ள எவரையும் தெரிவு செய்யவில்லை. மக்களால் நன்கு மதிக்கப்பட்டவர்களையே தேர்வு செய்துள்ளேன். இவர்களை வெற்றி பெறவைக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. அம்மக்கள் தேவையுணர்ந்து தங்களது தேர்வுகளை தெரிவு செய்வார்கள் என்று நம்புகின்றேன்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரையில் அவர்கள் கடந்த மாகாணசபை தேர்தலில் போட்டியிடவில்லை. அவர்கள் அந்தவேளையில் வட கிழக்கு இணைகின்றபோதுதான் நாங்கள் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்திருந்தனர்.
இன்று அவர்கள் அந்த கொள்கைகளை வீசியெறிந்துவிட்டு, தற்போது இந்த மாகாணசபை தேர்தலிலே போட்டியிடுகின்றார்கள். இதன் நோக்கம் என்ன. நிச்சயமாக அவர்களால் ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியாது இது நன்கு அறியப்பட்ட விடயம்.
இருந்தபோதிலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரித்து, தமிழ் மக்களுக்கு ஒரு தேசத் துரோகத்தை செய்யவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தலில் குதிக்கின்றது.
அவர்கள் போட்டியிடாவிட்டால் தமிழ் மக்கள் அனைவரும் ஆளும்கட்சிக்கு வாக்களிப்பார்கள். தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடிய வாய்ப்பு நூற்றுக்கு நூறுவீதம் இருந்திருக்கும்.
முதலமைச்சர் நியமனத்தை பொறுத்தவரையில் தகுதியான முதலமைச்சர் ஒருவர் ஆட்சிக்கு வரவேண்டும். எமது மாகாணத்தை ஆளக்கூடிய முதலமைச்சராக வரவேண்டும் என்பதே எனது வேண்டுகோள் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளர் ருத்திரமலர் ஞானபாஸ்கரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம், பிராவோ ஹன்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

