ஈழத்தமிழருக்கு அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை வேண்டும்: கனடாவில் இடம்பெற்ற உண்ணாநிலை போராட்டம்
கடந்த 20ஆம் திகதி ரொறொன்ரோவில் அமைந்துள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் முன்பாக காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இந்த உண்ணாநிலை கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
சாயிப்பிரியன், வன்னிப் புஷ்பா, ஈழவேந்தன், யோகம்மா வல்லிபுரம், ஹென்றி கிருபைராஜா ஆகியோர் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்கத்தின் கனேடியச் செயலர் நிமல் விநாயகமூர்த்தியும் பழரசம் வழங்கி நிறைவு செய்து வைத்தார்.
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடாத் தமிழர் இணையம் உட்பட பல தமிழர் அமைப்புக்களும் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இக்கவனயீர்ப்பு போராட்டத்திற்கு உறுதுணை வழங்கியிருந்தன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈழத்தமிழருக்கான அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையொன்றினை வலியுறுத்தி தீர்மானமொன்றினை ஏலவே நிறைவேற்றியுள்ளது.
உண்ணாநிலையாளர்களின் கருத்துரைகளாக:
சாயிப்பிரியன்: அறப் போராட்டம் தான் இன்று நமக்குள்ள ஒரே தெரிவு. நாம் எமது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி சாத்வீக அறப்போராட்டத்தில் குதித்துள்ளோம். அனைத்துக் கட்டமைப்புகளும் தந்த பேராதரவுக்கு நாம் நன்றி கூறுகின்றோம். மக்கள் தாமாகவே முன்வந்து ஆதரவு வழங்கி உள்ளார்கள்.ஊடகங்களும் வேறுபாடு காட்டாமல் உறுதுணையாக நின்றன. நாங்கள் இப்படியான மக்கள் போராட்டங்களை, உண்ணாநோன்பு அறப்போராட்டங்களை தொடர்ந்து செய்ய வேண்டும். இளம் சந்ததியினர் அதிகளவில் பங்கு பற்றி இப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
வன்னிப் புஷ்பா: இலங்கையில் தமிழர் படும் அவதிகளை விளக்கும்போது கண்கலங்கி அந்த மக்களுக்கு நாம் எம்மால் ஆனதைச் செய்யா விட்டால் நாம் தமிழர்களே இல்லை.நாம் மானமுள்ள தமிழராக வாழ வேண்டுமானால் போராடுவதைத் தவிர வேறு வழியே இல்லை.
ஈழவேந்தன்: இன்றைய நிலையில் நமக்கு உள்ள தெரிவுகள் இரண்டு தான். ஒன்று இன அடையாளத்தை இழந்து ஸ்ரீலங்கா அரசிற்கு அடங்கி அடிமைகளாய்ப் போவது. மற்றது எமது உரிமைகளுக்காக முடியுமான வரை முடிந்த மட்டும் எதிர்த்துப் போராடுவது. போராடாது விட்டால் அழிவது திண்ணம்.எதிர்த்துப் போராடும் போதும் அழிந்தும் விடலாம். ஆனால் வெல்லும் வாய்ப்பும் உண்டு. நாம் மானத்தோடு போராடுவது என்று தீர்மானித்து விட்டோம்.நாம் துணிவோடு செயற்படுவோம். இறுதிவரை போராடுவோம்.
ஹென்றி கிரிபைராஜா : வீட்டில் முடங்கிக் கிடக்கும் நேரம் இதுவல்ல. அத்தனை தமிழரும் களத்தில் இறங்கிப் போராட வேண்டிய தருணமிது. இப்போது நாம் தூங்கிவிட்டால் நாளைய தலைமுறை எங்களைத் தூற்றுவார்கள். இளைஞர்களாகிய நாம்தான் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும்.ஒரு உந்துசக்தியாக இருக்க வேண்டும்.
உண்ணாநிலையாளர்களின் கருத்துக்களை இவ்வாறு அமைய, இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்திருந்த தமிழ் சமூகப்பிரதிநிதிகளின் கருத்துரைகளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத் தலைவர் பொன் பாலராஜன், 'ஈழத் தமிழருக்கான அனைத்துலக பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றே இன்று உடனடியாக நமக்குத் தேவையான சர்வரோக நிவாரணி' எனத் தெரிவித்தார்.
பறிபோகும் மண்ணைக் காப்பாற்றக் கேட்பதா, சிங்களக் குடியேற்றத்தை நிறுத்தக் கேட்பதா, பௌத்த திணிப்பை நிறுத்தக் கேட்பதா, மொழி கலாசாரச் சிதைப்பை நிறுத்தச் சொல்வதா, பொருளாதாரச் சுரண்டலை நிறுத்தக் கேட்பதா, இராணுவக் குவிப்பை அகற்றச் சொல்வதா, இராணுவத் தலையீடற்ற சிவில் நிர்வாகத்தைக் கேட்பதா, பத்திரிகைச் சுதந்திரம், சர்வதேசத் தொண்டு நிறுவனங்களுக்கான சுதந்திரம், சுதந்திர நீதி நிர்வாகம், ஒடுக்குமுறைத் தவிர்ப்பு, இப்படி எதையெல்லாம் தான் நாங்கள் கேட்பது, ஈழத் தமிழர் அத்தனை அடக்கு முறைகளுக்கும் அக்கிரம அட்டூழியங்களுக்கும் ஆளாகி உள்ளார்கள். இவற்றில் எதை முன்வைத்து நாங்கள் போராடுவது, எதை முன்வைத்து நாம் பேசுவது.
மனித உரிமைகளைக் காப்பாற்ற தமிழின இருப்பைக் காப்பாற்ற தமிழ் இனத்தைக் காப்பாற்ற எல்லாவற்றிற்குமான ஒரே தீர்வு அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றுதான். நாங்கள் அதையே முன்வைத்து எமது சகல போராட்டங்களையும் செய்வோம்.சகல தரப்பினரையும் அதையே கேட்போம். நாம் இதைப் புதிதாகாக் கேட்கவில்லை. ஏற்கெனவே கேட்டிஸ் போன்ற இனத்தைக் காப்பாற்ற சர்வதேசத்தால் அப்படியான ஒரு பொறிமுறை பயன்படுத்தப்பட்டது எனத் பொன் பாலராஜன் தனதுரையில் தெரிவித்தார்.
வேலுப்பிள்ளை தங்கவேலு தனதுரையில், இன அழிப்பின் வடிவங்களையும் சிங்களமயமாக்கல், புத்த மயமாக்கல், மண் பறிப்பு, வன்முறைகள் போன்றவற்றையும் புள்ளி விபரங்களோடு விளக்கிக் கூறினார்.மண் பறி போனால் அனைத்துமே போய்விடும். பின்னர் இனத்தைப் பற்றிப் பேசவும் முடியாது. ஆகவே அனைத்துத் தமிழரும் இனியும் தூங்கிக் கிடக்காமல் செயற்பாட்டில் இறங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
யோகம்மா வல்லிபுரம் பேசும்போது, இந்த அளவுக்கு மகிந்த அரசாங்கம் தமிழ் மக்களை ஒழித்துக் கட்ட வஞ்சகமாக அதர்மமாக ஆட்டம் போடும்போது நாம் வீட்டில் சுருண்டு எப்படி இருக்க முடியும். உடம்பில் உயிர் இருக்கும்வரை எமது எதிர்காலச் சந்ததிக்கு எதையாவது செய்து விட்டுப் போவோம் என்று தான் இன்று அதிகாலையிலேயே எழுந்து மிக்க சிரமப்பட்டு இங்கு வந்து சேர்ந்து இந்த உண்ணாநோன்பில் பங்கு கொண்டேன். அதில் எனக்கு மிகத் திருப்தியாக இருக்கிறது. அத்தனை தமிழரும் இன்றைய தேவை உணர்ந்து ஒற்றுமையாகச் செயற்பட வேண்டுமென்றார்.
பொன்னையா விவேகானந்தன் தனதுரையில், முள்ளிவாய்க்காலை விடவும் மிக மோசமாக வேகமாக இப்போது தமிழின அழிப்புத் தொடர்கிறது. காட்டாற்று வெள்ளம் போல் மகிந்த அரசானது அனைத்து அடக்குமுறைகளையும் கையாண்டு தமிழினத்தை இல்லாமலே செய்துவிட வேண்டுமென்று அசுர வேகத்தில் செயற்படுகிறது. இன்னும் நாம் தாமதித்தால் முழு இலங்கையுமே தனிச்சிங்கள நாடாகி விடும். தமிழினம் தமக்குள் இருக்கும் வேறுபாடுகளை எல்லாம் மறந்து அனைத்துக் கட்டமைப்புகளும் ஒருவருக்கொருவர் ஆதரவாக சிங்கள ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட வேண்டும். எதிரியின் பிரித்தாளும் தந்திரத்திற்கு நாம் பலியாகக் கூடாது என தெரிவித்தார்.
மார்க் சூசையின் உரையில், இது நடப்பதை அறிந்த என்னால் வீட்டில் முடங்கிக் கிடக்க முடியவில்லை. எப்படியும் என்பங்கிற்கு எதையாவது செய்ய வேண்டுமென்று இதில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தமிழராகிய நாம் இன்னுமின்னும் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடவேண்டும் என்று கூறினார்.
இக்கவனயீர்பு நிகழ்வானது அப்பையா சண்முகராஜாவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகி அகவணக்கம் செலுத்தப்பட்டு நடைபெற்றது.
நிகழ்வைத் தொகுத்து வழங்கிய வின் மகாலிங்கம், காலத்தின் கட்டாயம் கருதி அனைத்துத் தரப்பாரும் ஆதரவு வழங்க முன்னெடுக்கப்படுகின்ற இந்த மக்கள் போராட்டம் எமது இலட்சியத்தை அடையும் பயணத்தில் நல்லதொரு திருப்பமாகும் எனக் குறிப்பிட்டார்.










