1994 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் காமினி திசாநாயக்கவின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்பாளர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வழங்கியதாக அமைச்சர் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய பொது செயலாளர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
அப்போதைய ஜனாதிபதி தேர்தலில் காமினி திசாநாயக்கவை தோற்கடிப்பதற்கான அனைத்து உபாய மார்க்கங்களையும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரே வழங்கியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தேர்தலில் வெற்றி பெறுவதற்கும், மறைந்த காமினி திசாநாயக்க தேர்தலில் தோல்வியுற வேண்டும் என்பதற்காகவும், அவர் இதனைச் செய்தார்.
அமைச்சரின் இந்த கருத்தை முடியுமாயின், நிரூபிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போது வலியுறுத்தியிருந்தார்.
நான் சவால் விடுக்க விரும்புகின்றேன், அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தமது கூற்றை நிரூபிக்கும் வகையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை அவரின் வாயாலேயே இந்த விடயம் உண்மையென கூற வைக்க வேண்டும்.
இந்தநிலையில், கொழும்பில் இன்று இடம்பெற்ற கூட்டமைப்பின் செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, திஸ்ஸ அத்தநாயக்கவின் சவாலை ஏற்றுக்கொண்டார்.
அந்த சவாலை ஏற்றுக்கொள்ள தயார், ஆனால் அதன்பின்னர் ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்படும் நிலைமைகள் தொடர்பாக பொறுப்புகளை நான் ஏற்றுக்கொள்ள முடியாது.
என்னிடம், எழுத்து மூலமான சாட்சிகள், காவல்துறையில் கடமையாற்றிய அதிகாரிகளின் விபரங்கள் அடங்கிய தகவல்களும், மேலும் சில விடயங்களும் என்னிடம் உள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பொதுசெயலாளருக்கும் நான் கூற விரும்புகின்றேன், இந்த சிக்கலை மேலும் பெரிதாக்கி பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டாம்.
எதிர்க்கட்சியின் தலைவராக எதிர்வரும் 6 வருடங்களுக்கு தாமே இருக்கபோவதாக கூறிக் கொண்டு, அந்த பக்கத்திற்கு யாரும் வரக்கூடாது என்ற வகையில் செயற்படுகிறார்.
அப்படியிருக்கையில் சவால்களை விடுத்து பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டாம்.
இந்த பிரச்சினையை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு எனக்கு தேவைப்பாடு இல்லை. ஆனால் இவர்கள் கூறுவார்களாயின் அடுத்த கட்ட பணிகளை முன்னெடுக்க தயாராக இருக்கின்றேன்.
இந்த சம்பவம், தொடர்பான தகவல் வெளியானதும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் காரியாலயம் அறிக்கையொன்றின் மூலம் அமைச்சர் மைத்திரிபாலவின் கருத்தை நிராகரித்துள்ளது.
அந்த அறிக்கையின் படி, 1994 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரான காமினி திசாநாயக்கவின் தேர்தல் உபாயங்கள் தொடர்பாக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எந்தவொரு தகவலையும் வழங்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் இந்த கூற்று தொடர்பாக செய்தியாளர் ஒருவர் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் வினவினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் : நான் எனது முன்னாள் தலைவிக்கு அகௌரவமளிப்பதற்கு தயாராக இல்லை. ஆனால் அவர் கடந்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட விருந்த 72 மணித்தியாலங்களுக்கு முன்னதாக சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு குறிப்பிட்டார்.
எனவே, நிலைமை அவ்வாறிருக்கையில் அவர் எம்மை பற்றி தெரிவிக்கும் கருத்துகள் தொடர்பாக பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது.
அமைச்சரின் இந்த கருத்து தொடர்பாக பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம், வினவிய போது, மைத்திரிபால சிறிசேன 1994ம் ஆண்டில் என்ன செய்து கொண்டிருந்தார் என்று. நான்
நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவிடம் வினவியிருந்தேன்.
ஏனென்றால், அவர் அப்போது பொது செயலாளராக செயற்படவில்லை. 1994 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைத்திரிபாலவுக்கு தேர்தல் கலந்துரையாடல் இடம்பெறும் அறையினுள்ளேயேனும் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
ஒரு அலுவலக உதவியாளராகவே இருந்தார்.. பியோனின் நிலைமையிலிருந்த மைத்திரிபால சிறிசேன தற்போது யாருடைய ஒப்பந்தத்தை நிறைவேற்ற முனைகிறார்.
எனவே, மீண்டும் அவரிடன் நான் சவால் விடுக்க விரும்புகிறேன். முடியுமானால் அவர் தெரிவிக்கும் விடயத்தை முழுமையாக நிரூபித்து காட்டவேண்டும்.
இதற்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு பதிலளித்தார்.
1994 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நான் பொது ஜன ஐக்கிய முன்னணியின் தேர்தல் நடவடிக்கைகளின் போது, பிரதானமாக எதிர்கட்சிகளின் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் இரகசியங்கள் தொடர்பான செயலாளராக செயற்பட்டு வந்தேன்.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பதவியை விட நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பியோன் வேலை எனக்கு உயர்ந்ததாக தெரிகிறது.
நான் மதிப்பளிக்கும் அரசியல் நோக்கங்களுக்கு அமைய இது புலப்படுகிறது.