தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்பாளராக களமிறங்கி அடாவடித்தனமான முறையில் தனது தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் மட்டக்களப்பு கல்லடிக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக சென்ற சந்திரகாந்தன், தமிழரசுக் கட்சியின் ஆதரவாளரான ஒருவருக்கு கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
பின்னர் தனது தேர்தல் பிரசார சுவரொட்டியை அடாவடித்தனமாக குறித்த ஆதரவாளரின் கடையில் உள்ளும் வெளியுமாக பல இடங்களில் ஒட்டிவிட்டு அவற்றை கிழித்தால் என்ன நடக்குமென புரிந்துகொண்டால் சரி என எச்சரிக்கையும் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்த அடாவடித்தனமான செயற்பாட்டை பற்றி கருத்துத் தெரிவித்த பாதிக்கப்பட்ட நபர், பிள்ளையானுக்கும் அவரது கட்சிக்கும் நடைபெற இருக்கின்ற தேர்தலில் படுதோல்வியே ஏற்படும் என்ற பயத்தினால் இவ்வாறான அடாவடித்தனமான செயற்பாடுகளில் அவர் இறங்கியுள்ளதாகவும் இந்தக் கீழ்த்தரமான செயற்பாடுகளினால் ஒருநாளும் அவர் வெற்றியடைய முடியாதெனவும் தெரிவித்தார்.