13ம் திருத்தச் சட்டமே வடக்கு இளைஞர்கள் ஆயுதங்களை கீழே வைக்கக் காரணம்: டியூ.குணசேகர (செய்தித் துளிகள்)
ஆயுதங்களை ஏந்திய வடக்கு இளைஞர் யுவதிகள் ஆயுதங்களை களைந்து ஜனநாயக அரசியலில் இணைந்து கொண்டனர். 13ம் திருத்தச் சட்டத்தின் காரணமாகவே இது சாத்தியமானது.
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரும் பலருக்கு இது நினைவில்லை. 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதன் மூலம் மீண்டும் பிரிவினைவாதம் தலைதூக்கக் கூடும்.
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கையினால் தமிழ் புலம்பெயர் மக்களும், புலி ஆதரவாளர்களுமே அதிகளவில் சந்தோசப்படுவார்கள். பிரபாகரனின் போரை நியாயப்படுத்தும் வகையில் எவரும் செயற்படக் கூடாது.
இந்த நிலைமைகளை புரிந்து கொள்ளாமல் ஒரு சிலர் செயற்படுகின்றமை வருந்தத்தக்கது என டியூ. குணசேகர தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்க அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ள முடியும் - அருன்திக பெர்னான்டோ
13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்ல முடியும் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அருன்திக பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்திற்க விரோதமான ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நபர்கள் விலகிக்கொள்ள வேண்டும்.
ஆளும் கட்சியின் சிலர் எதிர்க்கட்சிகளுக்கு கோசம் எழுப்ப ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இந்தியாவும் தொடர்புபட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்கு பிணக்குகள் கிடையாது. எவ்வளவு பலம்பொருந்தியவர்கள் என்றாலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு மாறுபட்ட கருத்துக்களை வெளியிடக் கூடாது என அருன்திக்க பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
காப்புறுதி பிணைப்பணம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.