புனர்வாழ்வின் மூலம் சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள், நாட்டில் கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டால் மீண்டும் கைது செய்யப்படுவீர்கள் என இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் செயற்படும் பல குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நாட்டின் ஸ்திரதன்மை சீர்குலைக்கப்படுகின்றது. எனவே அவ்வாறான குழுக்களுடன் முன்னாள் போராளிகள் இணைந்து செயற்பட்டால் அவர்கள் உடனே கைது செய்யப்படுவார்கள் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, முன்னாள் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்வித தடையும் கிடையாது எனவும் இவர்கள் சட்ட ரீதியான முறையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சந்தன ராஜகுரு தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள முன்னாள்போராளிகள் குறித்து இராணுவத்தினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முன்னாள் போராளிகள் ஜே.வி.பி கிளர்ச்சிக் குழுக்களுடன் இணைந்து செயப்படுவதாக நாம் இலங்கையர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உதுல் பிரேமலத்ன வெளியிட்ட கருத்துக்கே இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.