ஊடகத்துறையில் 50 அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு

Report Print Thayalan Thayalan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் முன்னாள் செய்தியாசிரியருமான ஞானசுந்தரம் குகநாதன் அவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் நவயுக நக்கீரன் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்து சென்.மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாகம் ஊடகவியலாளர் குகநாதன் அவர்களின் 65ஆவது அகவையை முன்னிட்டும் ஊடகத்துறையில் கால் பதித்து 50 அகவை நிறைவை முன்னிட்டும் அவர் திருமண பந்தத்தில் இணைந்து 40ஆண்டுகள் நிறைவை முன்னிட்டும் மதிப்பளிக்கும் விழா ஒன்றை நேற்று சனிக்கிழமை ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்றது.

ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாகத்தலைவர் வே.கணேசகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆலய பரிபாலனசபையினர் என பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.

ஆலய முன்வீதியிலிருந்து செந்தூரன் குழுவினரின் மங்கள வாத்திய இசையுடன் ஊடகவியலாளர் ஞா.குகநாதன், அவரின் துணைவியார் திருமதி நல்லநாயகி குகநாதன் ஆகியோர் அழைத்து செல்லப்பட்டு ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பா. ஜோதிநாதநாதக்குருக்கள் பூசைகளை நடத்தி வைத்தார்.

அதனை தொடர்ந்து ஆலய மண்டபத்தில் மதிப்பளிக்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிகளை ஆறுமுகம் செந்தில்நாதன் தொகுத்து வழங்கினார்.

விழா ஏற்பாட்டுக்குழுவில் ஒருவரான ஜெயமோகன் சிறப்பு மலரை வெளியிட்டு வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து தமிழர் மனித உரிமை மையப் பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரன், ஊடகவியலாளர்களான இரா.துரைரத்தினம், ரவி, சண்.தவராசா, எம்.சுஜர்சன், மற்றும் திருமதி விஸ்வசீதா அட்சரநாதன், தம்பிப்பிள்ளை நமசிவாயம், எஸ்.புவனேந்திரன், எஸ்.சரவணபெருமாள், லோகேஸ்வரன், தாமோதரம், றெயின்தாள் தமிழ்மன்றம் சார்பில் உதயகுமார் உட்பட பலரும் வாழ்த்துரைகளை வழங்கினர்.

இளம் ஊடகவியலாளருக்கு வழிகாட்டியாக திகழ்ந்த குகநாதன் செய்திகளை தேடுவதில் மட்டுமல்ல செய்திகளை கறப்பதிலும் வல்லவர் என வாழ்த்துரை வழங்கிய ஊடகவியலாளர்கள் புகழாரம் சூட்டினர்.

50ஆண்டுகால ஊடக பணி என்பது சாதாரணமான ஒன்றல்ல, அந்த அசாத்திய பயணத்தில் வெற்றி கொண்ட குகநாதன் யாழ்ப்பாணத்தில் மிக நெருக்கடியான காலத்தில் உயிராபத்தின் மத்தியில் பணியாற்றினார். பல தடவைகள் உயிராபத்தில் இருந்து தப்பிய போதிலும் 2011ஆம் ஆண்டு தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் தேடிக்கொண்டார். ஆனாலும் தொடர்ந்து தனது எழுத்தின் திசையை ஆத்மீக துறையின் பக்கம் திருப்பி கொண்டாலும் இன்னும் அவரிடமிருந்து சமூக நலன்சார்ந்த ஊடகப்பணியை எமது சமூகம் எதிர்பார்க்கிறது என ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

பதிலுரை வழங்கிய ஊடகவியலாளர் குகநாதன் தன்னை ஊடகத்துறைக்கு அழைத்து வந்த தந்தையை நினைவு கூர்ந்தார். தந்தையின் வழியில் ஊடகத்துறையில் 50 ஆண்டுகாலம் தனது கடினமான ஊடகப்பயணத்தில் சலிக்காது தன்னுடன் பயணித்த துணைவியாருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய பொருளாளர் சதா.அற்புதராசா நன்றியுரையாற்றினார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments