வெள்ளியன்று ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றைத் தொடர்ந்து காங்கோ மக்களாட்சிக் குடியரசில் நடைபெறும் மனிதநேய நடவடிக்கைகளுக்காக 12.5 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை வழங்க சுவிட்சர்லாந்து முன்வந்துள்ளது.
சுவிஸ் அரசின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் காங்கோ உலகின் மோசமான மனிதநேய பிரச்சினைகளிலும் காலரா தொற்றிலும் சிக்கியுள்ளதாவும் அதன் லட்சக்கணக்கான குடிமக்கள் மனிதநேய உதவிகளையே நம்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து அளிக்கும் இந்த உதவி, மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், மருத்துவ, உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்கும் உதவும்.
இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவும் அமைப்புகளும் இவ்வுதவிகளுக்கு ஆதரவளிக்கின்றன.
காங்கோவில் அரசுப்படைகளுக்கும் ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கும் இடையே நிகழும் பிரச்சினைகளால் 4.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
காங்கோவிற்கு உதவும் சுவிஸ் உதவி அமைப்புகளுடன் ஐக்கிய நாடுகள் ஏஜன்சிகளும் உதவிகள் செய்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபை, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த மாநாட்டின் நோக்கம் காங்கோவின் தேவைகளுக்கான 1.69 பில்லியன் டொலர்களை சேகரிப்பதாகும். தனது பங்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் 77 மில்லியன் யூரோக்களை அளிப்பதாக உறுதியளித்துள்ளது.
ஆனால் மத்திய ஆப்பிரிக்க நாடுகளின் மனித நேய பிரச்சினை பெரிது படுத்தப்படுவதாகக் கூறி காங்கோ இந்த சர்வதேச மாநாட்டைப் புறக்கணித்தது.
காங்கோவில் நிகழும் நெருக்கடியான சூழலின் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தை பின்பற்றி சுவிட்சர்லாந்து காங்கோவின்மீது விதிக்கப்பட்ட தடைகளை இந்த ஆண்டு பிப்ரவரியில் நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.