விஜய் மல்லையா நாடு கடத்தல்: அதிகாரப்பூர்வ விசாரணையை உறுதி செய்த பிரித்தானியா

Report Print Kabilan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானிய நீதிமன்றம் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான அதிகாரப்பூர்வ விசாரணையை உறுதி செய்துள்ளது.

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, பாரத் ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளிடமிருந்து பெற்ற ரூ.9,000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக அவர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், இந்த வழக்கு விசாரணையை தவிர்ப்பதற்காக அவர் பிரித்தானியாவிற்கு சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து, இந்திய அரசு அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானியாவிற்கு விடுத்தது.

அதனைத் தொடர்ந்து, ஸ்காட்லாந்து யார்டு பொலிசார், மல்லையாவை லண்டனில் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர். ஆனால், ரூ.5 கோடியை பிணையத் தொகையாக செலுத்தி அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

எனினும், அவரது பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்களை பொலிசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில், அதிகாரப்பூர்வ விசாரணை டிசம்பர் 4ஆம் திகதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு முன்பு, இருதரப்பு வாதங்களையும் கடந்த திங்கட்கிழமை நீதிமன்றம் கேட்டது. அப்போது, இந்திய அரசு சார்பில், ‘கிரௌன் பிராஸிக்யூஷன் சர்வீஸ்’ என்ற வழக்காடு நிறுவனம், விஜய் மல்லையாவுக்கு எதிராக கூடுதல் ஆதாரங்களை சமர்பித்தது.

மேலும், மல்லையா மீது சுமத்தப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள், அவர் மீதான பழைய குற்றச்சாட்டுகளுக்கு மாற்றாக அமைந்துள்ளதால், புதிய ஆவணங்களை முறைப்படி தாக்கல் செய்வதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 4ஆம் திகதி தொடங்கி 14ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்