அவுஸ்திரேலிய பிரதமருடனான தொலைப்பேசி உரையாடலை பாதியில் துண்டித்த டிரம்ப்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

ஆஸ்திரேலிய பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இணைப்பை பாதியில் துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல் உடனான தொலைப்பேசி உரையாடலை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாதியில் துண்டித்ததால் இரு நாடுகளுக்கும் இடையேயான அகதிகள் தொடர்பான உடன்பாடு கேள்விக்குறியாகி உள்ளது என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஒபாமா காலத்தில் கையெழுத்தான உடன்பாட்டின்படி, அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய சுமார் 1250 பேர் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட இருந்தனர். இந்த நிலையில் ஜனாதிபதி ட்ரம்புடன் தொலைபேசியில் பேசிய அவுஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல், அகதிகளை ஏற்பது குறித்து விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், அகதிகளை ஏற்பது, இன்னொரு பாஸ்டன் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதற்குச் சமம் என்று கூறியதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையேயான தொலைப்பேசி உரையாடல் காரசாரமாக மாறியதாகவும், 25-ஆவது நிமிடத்தில் தொலைபேசி இணைப்பை ட்ரம்ப் துண்டித்துவிட்டதாகவும் வாஷிங்டன் போஸ்ட் இதழ் குறிப்பிட்டுள்ளது.

திட்டமிட்டபடி உரையாடல் நீடித்திருந்தால், சுமார் ஒருமணி நேரம் வரை இரு தலைவர்களும் பேசியிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஜனாதிபதி டிரம்ப், உலகத் தலைவர்களுடன் இது வரை நடத்திய தொலை பேசி உரையாடல்களிலேயே இது தான் மோசமான உரையாடல் என தெரிவித்ததாக குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதனிடையே இரான், ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போன்ற நாடுகளில் இருந்து வந்த அகதிகளை ஏற்றுக் கொள்ள சர்ச்சைக்குரிய முறையில் மறுத்து விட்ட அவுஸ்திரேலியா, அவர்களை அதற்கு பதிலாக பசிபிக் நாடுகளான நாரூ, பப்புவா நியூ கினியா தடுப்புக் காவல் மையங்களில் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments