அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு பணம் வசூலிப்பதில் ஊழல் என அமெரிக்க செனட்டில் எம்.பி.யாக உள்ள சிவ அய்யாதுரை பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம், சிவ அய்யாதுரைக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உலகின் செம்மொழிகளான 7 மொழிகளில் தமிழைத் தவிர எஞ்சிய ஆறு மொழிகளுக்கு இருக்கைகள் உள்ளன. மூத்த மொழியான தமிழ் மொழிக்கு இருக்கை அமைவதற்கு தற்போது பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ் இருக்கைக்கான அனுமதி பெறுவதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.40 கோடி தேவை. இதற்காக தமிழக அரசு 10 கோடி ரூபாய் அளித்துள்ளது. நடிகர் விஷால் 10 லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் 25 லட்சம் ரூபாய், மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ரூ.5 லட்சம் என பலர் நிதிகளை வாரி வழங்கினர்.
இவை மட்டுமின்றி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்க வாழ் இந்தியரும் விஞ்ஞானியுமான சிவ அய்யாதுரை, ஹார்வார்ட் பல்கலைக்கழகம் தமிழர்களை ஏமாற்றுவதாக பரபரப்பை கிளப்பியுள்ளார்.
தமிழ் வரலாற்றை திருத்தி எழுதவும், ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் நம்முடைய பணத்தை கொண்டே அவர்கள் முயற்சி செய்வார்கள் எனவும் அவர் சாடியுள்ளார்.