எபோலா தொற்றுடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய 18 பேர்
கிழக்கு காங்கோவில் எபோலா நோய்த்தொற்றின் மையமாகத் திகழும் ஒரு நகரத்தைச் சேர்ந்த மக்கள், அங்குள்ள ஒரு சுகாதார மையத்தின் பகுதியாக இருந்த கூடாரம் ஒன்றை ஆத்திரத்தில் தாக்கி எரித்துள்ளனர்.
சந்தேகிக்கப்படும் 18 பேர்
வைரஸ் தொற்றுக்காக மக்கள் சிகிச்சை பெற்றுவரும் இடத்தில் இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. அப்பிராந்தியத்தில் ஒரே வாரத்திற்குள் நிகழ்ந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், தீவிபத்திலிருந்து தப்பிப்பதற்காக நோயாளிகள் வெளியே ஓடியபோது, எபோலா தொற்று இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் 18 பேர் அந்த மருத்துவ நிலையத்தை விட்டு வெளியேறியதாகவும், அவர்கள் தற்போது எங்குள்ளனர் என்பது தெரியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கோபமடைந்த அப்பகுதி மக்கள், வெள்ளிக்கிழமை இரவு Mongbwalu நகரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று, எபோலா பாதிப்பு சோதனைக்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு கூடாரத்திற்குத் தீ வைத்தனர்.
வியாழக்கிழமையன்று, எபோலா நோயால் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் உள்ளூர் நபர் ஒருவரின் உடலை எடுத்துச் செல்ல, அவரது குடும்பத்தினருக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ருவாம்பரா நகரில் உள்ள மற்றொரு சிகிச்சை மையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

177 பேர் மரணம்
எபோலா நோயால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அதிக அளவில் நோயைப் பரப்பும் தன்மையைக் கொண்டிருக்கக்கூடும்; மக்கள் அவ்வுடல்களை அடக்கத்திற்குத் தயார்படுத்தும்போதும், இறுதிச் சடங்குகளுக்காகக் கூடும்போதும் இது நோய் மேலும் பரவுவதற்கு வழிவகுக்கும்.
நோய் பாதித்திருக்கலாம் என சந்தேகத்திற்குரிய இறப்புகளுக்கு ஆளானவர்களை நல்லடக்கம் செய்யும் ஆபத்தான பணியை, சாத்தியமான இடங்களிலெல்லாம் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்; எனினும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து இதற்கு எதிர்ப்பு எழக்கூடும்.

தற்போது 750 பேருக்கு தொற்று இருக்கலாம் எனவும், 177 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, எபோலா பாதிப்புள்ள நாடுகளில் அமெரிக்க நிரந்தர வதிவிட உரிமம் பெற்றவர்கள் அமெரிக்கா திரும்புவதற்குத் தடை விதிக்கப்படுவதாக, அமெரிக்க மத்திய சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |