விமான விபத்து நடந்த அன்று... ஏர் இந்தியா விமானியின் இறுதி வார்த்தைகள்
பயணிகள் உட்பட 260 பேர்களை பலிகொண்ட ஏர் இந்தியா விமானத்தின் முதன்மை விமானியின் இறுதி வார்த்தைகள் தெரியவந்து தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரமாக கவனித்துக்கொள்
விமானி சுமீத் சபர்வால் இயக்கிய போயிங் 787 ட்ரீம்லைனர் பயணிகள் விமானமானது ஜூன் 12ம் திகதி விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர்களும், விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியில் 19 பேர்களும் என 260 பேர்கள் பலியாகினர்.
8,200 மணி நேரத்திற்கும் அதிகமாக விமானத்தை இயக்கி அனுபவம் மிக்க சபர்வால் மீது தற்போது விசாரணை அதிகாரிகளின் பார்வை குவிந்துள்ளது. அவரே விமானத்தின் எரிபொருள் பொத்தானை துண்டித்தார் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
மட்டுமின்றி, விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட உரையாடலின் பதிவுகள், விமானத்தின் எரிபொருள் விநியோகத்தை விமானி சபர்வால் துண்டித்தார் என்ற கருத்தையே உறுதி செய்கின்றன.
ஆனால், சம்பவத்தன்று, தமது குடியிருப்பை விட்டு வெளியேறும் விமானி சபர்வால் தெரிவித்த இறுதி வார்த்தைகள் நடந்த சம்பவத்திற்கு சற்றும் தொடர்பில்லாமல் இருந்துள்ளது.
அவரது அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்பு காவலரிடம், அப்பாவை பத்திரமாக கவனித்துக்கொள், சீக்கிரம் நான் வந்துவிடுகிறேன் என்றே கூறிச் சென்றுள்ளார்.
அத்துடன், சபர்வால் தான் இந்த கோர விபத்திற்கு காரணம் என்ற கருத்தை அவரது நண்பர்களும் சக ஊழியர்களும் நிராகரிக்கின்றனர். அவர் ஒரு மென்மையான ஆன்மா, சிறந்த விமானி எனவும் விபத்துக்கு முன்பு எந்த பெரிய விவகாரத்திலும் அவர் ஈடுபட்டதில்லை என்றும் உறுதியுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், அவருக்கு தன்னைப் பற்றி எந்த விதமான பெருமையும் இல்லை, அவ்வளவு பணிவானவர், மரியாதைக்குரியவர். பேசும்போது எப்போதும் ஒரு புன்னகை இருக்கும் என்கிறார் சக ஊழியரான 61 வயது நீல் பைஸ்.
ஓய்வு பெறுவது குறித்து
அவர் ஒருபோதும் குரல் எழுப்பியதையோ அல்லது கோபப்படுவதையோ நான் பார்த்ததில்லை. ஆனாலும் அவர் வேலை அல்லது பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்பவரல்ல. ஏதாவது பிரச்சினை இருந்தால், அதை அவர் சுட்டிக்காட்டுவார் எனவும் பதிவு செய்துள்ளார் நீல் பைஸ்.
ஆனால், 2022 இல் தனது தாயார் இறந்ததை சபர்வால் சமாளிக்க முடியாமல் தவித்தார். மட்டுமின்றி, தனது வயதான தந்தையை கவனிக்கும் பொருட்டு மனைவியை விட்டுப் பிரிந்து டெல்லியில் இருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
அவரது தாயார் இறந்த பிறகு அவர் துக்க விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது. பணிக்கு மீண்டும் சேரும் போது மருத்துவ ரீதியாக அவர் தயார் நிலையில் இருந்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தனது 90 வயதான தந்தையை முழுநேரமாக கவனித்துக் கொள்ளும் பொருட்டு, சபர்வால் ஒரு விமானியாக ஓய்வு பெறுவது குறித்து யோசித்ததாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |