இந்தியாவிலேயே முதல்முறையாக ட்ரோன் மூலம் ரோந்து - முதல்வர் விஜய் பேச்சு
பெண்களை தொந்தரவு செய்துவிட்டு கடந்து போய்விடலாம் என்ற நினைப்பவர்களை நான் எச்சரிக்கிறேன் என முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை
பெண்கள் பாதுகாப்பிற்கான சிறப்பு பிரிவான சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து பெண் காவலரும், சிங்கமும் உள்ளது போல் வடிவமைக்கப்பட்டுள்ள சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை லட்சினையை வெளியிட்டார். பின்னர் ரோந்து வாகனங்களை துவங்கி அதை தானே ஓட்டினார்.
முதல்வர் விஜய் பேச்சு
அதைத்தொடர்ந்து நிகழ்வில் பேசிய முதல்வர் விஜய், சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மனதிற்கு நெருக்கமான ஒன்று. நமது பாட்டி, அம்மா, அக்கா, தங்கை என ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று கூறினேன்.

அதனை அரசியலுக்காக மட்டும் அல்லாமல், உணர்வுப்பூர்வமாகத்தான் கூறினேன். அதனை தற்போது நிறைவேற்றியுள்ளேன்.
பெண்களுக்கு எதிரான கொடுமையை சிறிதளவு கூட சகித்து கொள்ள முடியாது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கேட்டு மனம் பதறுகிறது.
இது மே 9 ஆம் திகதி பின்னர் உருவான பிரச்சினை இல்லை. பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை. பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்ததுதான் பிரச்னை பெரிதானதற்கு காரணம். இதற்கு காரணம் யார் என்பதை நான் கூறி தெரியவேண்டும் என்பது இல்லை.
போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவைதான். இது தொடர்பான பிரச்னைகளை சரி செய்ய கவனம் செலுத்த வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு தொடர்புடையது மட்டும்தானா? தனிமனித ஒழுக்கத்துடன் தொடர்புடையது. ஒழுக்கத்துடன் இருந்தால் பல பிரச்னைகளை கட்டுப்படுத்தலாம்.
பெண்களை தொந்தரவு செய்துவிட்டு கடந்து போய்விடலாம் என்ற நினைப்பவர்களை நான் எச்சரிக்கிறேன். பெண்கள் மீது கொடுமைகள் இழைத்தால் இனி நடவடிக்கை கடுமையாக இருக்கும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். தவறு செய்யாத யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிபடைக்கு முதற்கட்டமாக ரூ.354 கோடி ஒதுக்கீடு; இரண்டாம் கட்டமாக 2,500 புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க இந்தியாவிலேயே முதல்முறையாக ட்ரோன் மூலம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ரோந்து அறிமுகப்படுத்தப்படும்" என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |