101 சதமடித்த முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் காலமானார்
இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் ஸ்மித் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.
ராபின் ஸ்மித்
தென் ஆப்பிரிக்காவில் பிறந்த ராபின் ஸ்மித், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 1988 முதல் 1996 ஆம் ஆண்டு வரை 62 டெஸ்ட் போட்டிகளிலும் 71 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2003 ஆம்ஆண்டு வரை கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.

டெஸ்ட், ஒருநாள், முதல்தர மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் 101 சதங்கள், 255 அரைசதங்கள் உட்பட மொத்தம் 47,737 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
1993 ஆம் ஆண்டு எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்மித் 167 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

23 ஆண்டுகளாக இங்கிலாந்தின் அதிகபட்ச ஓட்டமாக இது இருந்தது. 2016 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அலெக்ஸ் ஹேல்ஸ் 171 ஓட்டங்கள் எடுத்து அதை முறியடித்தார்.
62 வயதில் காலமானார்
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனது சகோதரரின் ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்தார். மேலும், தனது சொந்த கிரிக்கெட் பயிற்சி அகாடமியை நடத்தினார்.

மதுவுக்கு அடிமையானதோடு, மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார். டிசம்பர் 1 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.
இறப்பிற்கான காரணம் தெரியவில்லை எனவும், பிரேத பரிசோதனையில் தெரிய வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெர்த்தில் நடைபெற்ற ஆஷஸ் போட்டியை காண மைதானத்திற்கு வருகை தந்திருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |