லண்டன் இரயிலில் கோர சம்பவம்... உயிருக்கு போராடும் பலர்: சிக்கிய இருவர்
நேற்று இரவு லண்டன் செல்லும் ரயிலில் நடந்த பயங்கரமான வாள்வெட்டு சம்பவத்தை அடுத்து ஒன்பது பேர் உயிருக்குப் போராடி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கோர சம்பவம்
டான்காஸ்டரிலிருந்து கிங்ஸ் கிராஸ் செல்லும் LNER ரயிலில் நடந்த இந்த கோர சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடூரமான தாக்குதலின் முழு சூழ்நிலையையும் பொலிசார் விசாரித்து வரும் நிலையில், விசாரணைக்கு உதவ பயங்கரவாத தடுப்பு பொலிசாரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஓடும் ரயிலில் கோர சம்பவம் தொடர்பிலான தகவல்களைத் தொடர்ந்து ரயில் அவசரமாக நிறுத்தப்பட்டதை அடுத்து, கேம்பிரிட்ஜ்ஷையரில் உள்ள ஹண்டிங்டன் நிலையத்திற்கு 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விரைந்தனர்.
இதனையடுத்து வெளியான தகவலில், 10 பேர்கள் தாக்குதலுக்கு இலக்கானதாகவும் அதில் 9 பேர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
அத்துடன் சம்பவத்தின் தீவிரத்தன்மையைக் குறிக்கும் வகையில் Plato என்றும் அறிவித்தனர். ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் போது காவல்துறை மற்றும் அவசர சேவைகள் பயன்படுத்தும் தேசிய குறியீட்டு வார்த்தை இந்த Plato.

புறப்பட்ட 10 நிமிடங்களில்
ஆனால், சம்பவப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட ஆய்வினை அடுத்து, Plato அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. வாள்வெட்டு சம்பவம் வெளியானதை அடுத்து அவசர சேவைகளும் ஆயுதம் ஏந்திய பொலிசாரும் சம்பவயிடத்தில் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே, தாக்குதலாளியிடமிருந்து தப்பிக்க பயந்துபோன பயணிகள் கழிவறைக்குள் ஒளிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், டான்காஸ்டரில் இருந்து கிங்ஸ் கிராஸ் செல்லும் ரயில் பீட்டர்பரோ நிலையத்திலிருந்து புறப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு தாக்குதல் தொடங்கியதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

வெளியான தரவுகளின் அடிப்படையில் அந்த ரயில் பீட்டர்பரோ நிலையத்திலிருந்து இரவு 7.29 மணிக்குப் புறப்பட்டது என்றே தெரிய வருகிறது.
இந்த நிலையில், கைதானவர்கள் தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே, இந்த சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், காவல்துறையின் ஆலோசனையைப் பின்பற்றுமாறு பொதுமக்களை வலியுறுத்தினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |