கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி: பதற வைக்கும் வீடியோ காட்சிகள்
9 பேர் உயிரிழந்த காசிபுக்கா கோவில் கூட்ட நெரிசலில் பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
காசிபுக்கா கோவில் கூட்ட நெரிசல்
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் காசிபுக்கா கிராமத்தில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு வழக்கமாக சனிக்கிழமைகளில் 2,000 முதல் 3,000 பக்தர்கள் வருவார்கள். நேற்று ஏகாதசி என்பதால், சுமார் 15,000க்கும் அதிகமான மக்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.
கோவிலின் முதல் தளத்தில் பெருமாள் சந்நிதி அமைந்துள்ளது. சுவாமியை தரிசிக்க பக்தர்கள் படியேறி செல்ல வேண்டும்.
9 பேர் உயிரிழப்பு
அதிகப்படியான கூட்டம் இருந்ததால், படியேறும் பகுதியில் வலதுபுறம் உள்ள தடுப்பு கம்பியில் பக்தர்கள் சாய்ந்த போது, தடுப்பு கம்பி உடைந்து பலர் கீழே விழுந்துள்ளனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஏறி சென்றுள்ளனர்.

நெரிசல் காரணமாக பக்தர்கள் அலறுவது, நெரிசலில் சிக்கி மயக்கமடைந்து கிடப்பவர்களுக்கு முதலுதவி அளிப்பது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதில், மூச்சுத்திணறல் காரணமாக சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டவர் காயமடைந்துள்ளனர்.
வீடியோவை காண லிங்க்கை கிளிக் செய்யவும்:
https://x.com/jsuryareddy/status/1984528444236222523
https://x.com/wilsonshivraj/status/1984551860347551826
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 8 பெண்கள் மற்றும் 12 வயது சிறுவன் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
13 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி, "உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்,காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு குறைபாடுகள்
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
கோவிலில் பக்தர்கள் உள்ளே நுழைவதற்கும் வெளியேறுவதற்கு தனித்தனி பாதைகள் இல்லாமல், ஒரே பாதை இருந்தது நெரிசலுக்கு வழிவகுத்துள்ளது.

மேலும் இது தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் என்பதால், அதிக கூட்டம் வருவது குறித்து பாதுகாப்பிற்கு அவர்கள் கோரிக்கை வைத்தால் மட்டுமே காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்கப்படும்.
அதிகமான கூட்டத்தை கோவில் நிர்வாகத்தினர் எதிர்பார்க்காததால், காவல்துறையின் பாதுகாப்பை கோவில் நிர்வாகத்தினர் கோரவில்லை.
மேலும், பக்தர்கள் கூடியிருந்த பகுதிகளில், கட்டுமான பணிகள் நடைபெற்றது அடிப்படை பாதுகாப்பு விதிமீறலாக அமைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |