லண்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் பயமூட்டும் சம்பவம்... பொலிசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
பிரித்தானியாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் நால்வர் மீது மர்மமான பொருளைத் தூவி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபத்தான நிலையில்
குறித்த சம்பவத்தை அடுத்து பல்கலைக்கழக வளாகம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. நள்ளிரவுக்குப் பிறகு ஒரு நபர் தாக்கப்பட்டதாகக் கிடைத்த தகவலுக்குப் பிறகு பொலிசார் லண்டன் கிரீன்விச் பல்கலைக்கழகத்திற்கு விரைந்தனர்.
தலையில் காயம்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, உடபடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் மூவர் மீது மர்மமான பொருள் தூவப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை கைது நடவடிக்கை ஏதும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், தப்பியோடிய தாக்குதல்தாரியை தீவிரமாக தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பெருநகர காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், செவ்வாய்க்கிழமை சுமார் 12.13 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் ஒருவர் தாக்கப்பட்டதாகவும் மூவர் மீது மர்மப் பொருள் தூவப்பட்டதாகவும் தகவல் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
நச்சுத்தன்மையற்றது
இதனையடுத்து லண்டன் ஆம்புலன்ஸ் சேவையுடன் பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். ஒருவர் தலையில் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மூவர் மீது மர்மப் பொருள் தூவப்பட்டு தாக்குதல் நடந்ததாகவும் தெரிய வந்தது.
சோதனை நடத்தப்பட்டதில், அந்த பொருள் நச்சுத்தன்மையற்றது என்பது தெரியவந்தது. இந்த ஆரம்ப கட்டத்தில், யாரும் கைது செய்யப்படவில்லை மற்றும் அவசர விசாரணைகள் நடந்து வருகின்றன என்வும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதால் பல்கலைக்கழக வளாகம் மூடப்பட்டுள்ளதுடன், வளாகத்தினுள் பேருந்து சேவையும் தாமதமாகலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |