உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதம்... நெருக்கும் ஸ்டார்மர்: நழுவும் ட்ரம்ப்
ரஷ்ய ஜனாதிபதி புடினால் அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில் உக்ரைனுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பிரித்தானிய பிரதமர் அமெரிக்காவுக்கு அழுத்தமளித்து வருகிறார்.
பாதுகாப்பை உறுதி செய்ய
உக்ரைன் - ரஷ்யா போர் அடுத்த சில வாரங்களில் முடிவுக்கு வரலாம் என்ற தகவல் வெளிவரும் நிலையில், உக்ரைனுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முன்வைத்துள்ளார்.
ஏற்கனவே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்துள்ள ஸ்டார்மர், உக்ரைனுக்கான பாதுகாப்பை அமெரிக்கா உறுதி செய்ய மறுத்தால், ரஷ்யாவால் இன்னொரு முறை மிக மோசமான தாக்குதலுக்கு உக்ரைன் இரையாகும் வாய்ப்புள்ளதாகவும் ஸ்டார்மர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்திய வாரங்களில் நடந்தேறிய சம்பவங்களை குறிப்பிட்டு, ட்ரம்பை உங்களால் நம்ப முடிகிறதா என்ற கேள்விக்கு ஆம் என்றே ஸ்டார்மர் பதிலளித்துள்ளார். மேலும், நான் அவரை சந்தித்திருக்கிறேன், அவருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறேன், எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த உறவு நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு சிறப்பான உறவு.
எங்கள் இரு நாடுகளும் ஒன்றாக போரிட்டுள்ளது, ஒன்றாகவே வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளோம் என்றார் ஸ்டார்மர். ஆனால் உக்ரைன் தொடர்பில் ஸ்டார்மரின் கோரிக்கையை டொனால்டு ட்ரம்ப் ஏற்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
ஊடுருவ ஒரு வாய்ப்பாக
புதன்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் உக்ரைன் தொடர்பில் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், மிக அதிகமாக பாதுகாப்பு உத்தரவாதங்களை உக்ரைனுக்கு அளிக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அப்படியான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஐரோப்பா இருப்பதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் ஸ்டார்மர் தெரிவிக்கையில், பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் போர்நிறுத்தம் ஏற்பட்டால், அது விளாடிமிர் புடினுக்கு மீண்டும் ஊடுருவ ஒரு வாய்ப்பாக அமையும்,
ஏனெனில் உக்ரைன் தொடர்பான அவரது லட்சியம் மிகவும் வெளிப்படையானது, அது அனைவருக்கும் தெரியும் என்று நான் நினைக்கிறேன் என ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |