கனடாவை அடுத்து இந்தியா, ரஷ்யாவுக்கு கடும் மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப்
எதிர்வரும் ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும் நிலையில் உலக நாடுகள் இரண்டாவது முறையாக மிகப்பெரிய வரி விதிப்புப் போரை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொனால்டு ட்ரம்ப் மிரட்டல்
ஏற்கனவே கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து மெக்சிகோ ஜனாதிபதி ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடியதுடன், சுமூகமான தீர்வு எட்ட வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரிடையாக புளோரிடாவுக்கு சென்று டொனால்டு ட்ரம்பை சந்தித்துள்ளார். இந்த நிலையில், இந்தியா, ரஷ்யா உட்பட்ட BRICS நாடுகளுக்கு 100 சதவிகித வரி விதிப்பதாக டொனால்டு ட்ரம்ப் கடும் மிரட்டல் விடுத்துள்ளார்.
BRICS நாடுகள் அமெரிக்க டொலரின் மதிப்பை குறைக்க முயன்றால் அல்லது சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு என புதிதாக வேறு நாணயத்தை உருவாக்க முடிவு செய்தால், கட்டாயம் 100 சதவிகித வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அக்டோபர் மாதம் BRICS நாடுகள் முன்னெடுத்த கூட்டம் ஒன்றில், அமெரிக்க டொலருக்கு மாற்றாக புதிய பரிவர்த்தனைகளை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிற நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
பொருட்களும் தடை செய்யப்படும்
இந்த அக்டோபர் சந்திப்பும் விவாதமும் ட்ரம்பை தற்போது கொந்தளிக்க வைத்துள்ளது. சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், BRICS நாடுகளின் முடிவை தம்மால் வேடிக்கை பார்த்திருக்க முடியாது என்றார்.
டொலர் பரிவர்த்தனைகளில் இருந்து அவர்களால் விலகிச்செல்வது சாத்தியமல்ல. இந்த நாடுகள் புதிய BRICS நாணயத்தை உருவாக்கவோ அல்லது வலிமைமிக்க அமெரிக்க டொலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தையும் பரிவர்த்தனை செய்யவோ கூடாது.
மீறினால் 100 சதவிகித வரி விதிப்பை எதிர்கொள்ள நேரிடும். அமெரிக்காவில் அவர்களின் பொருட்களும் தடை செய்யப்படும் நெருக்கடி உருவாகும் என்றார்.
BRICS கூட்டமைப்பில் சமீபத்தில் இணைந்த எகிப்து, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும் டொலருக்கு மாற்றான ஒரு நாணயத்தில் பரிவர்த்தனை வேண்டும் என்றும், இதனால் உள்ளூர் பண மதிப்பு உயரும் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர்.
ஆனால் உச்சிமாநாட்டின் முடிவில் மாற்று வழிகள் எதுவும் செய்யப்படவில்லை என்றே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளிப்படுத்தியிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |