இன்னும் எத்தனை சுவாதி, நவீனாக்கள் பலியாகப் போகிறார்களோ?

Report Print Maru Maru in கட்டுரை

காதல் என்ற ஒரு வார்த்தையை சேர்த்துக் கொள்வதால் ஒரு கொலைகாரனின் குரூர மனம் குற்றம் குறைந்ததாகாது.

தற்கொலையாளியின் கொலை

விழுப்புரம் மாவட்டத்தில் நவீனா(17) என்ற பிளஸ்டூ முடித்த பெண்ணை ஒரு கை ஒரு கால் இழந்த நிலையில் உள்ள செந்தில் (33) என்பவர் பல வருடங்களாக ஒருதலையாக விரும்பி வந்துள்ளார்.

ஒருநாள் நவீனாவின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில், பெட்ரோலுடன் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு தன்னை தீவைத்துக்கொண்டு, அங்கிருந்து தப்ப முயன்ற நவீனாவையும் கட்டிப்பிடித்து தீப்பிடிக்கச் செய்துள்ளார். செந்தில் உடனடியாகவும் நவீனா மருத்துவமனையில் நாலுநாள் கழித்தும் இறந்துள்ளனர்.

நவீனா விஷயத்தில் ஒரு தற்கொலையாளியான செந்தில், ஒரு கொலையையும் திட்டமிட்டே செய்திருப்பதுதான் உண்மை. செந்திலின் தற்கொலை துணிவுக்கு ஊனப்பட்ட அவருடைய உடலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

செந்தில் ஓட்டுனராக இருந்தபோதே, மாணவ சிறுமியாக இருந்த நவீனாவை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்திருக்கிறார். அதை ஒரு பெற்றோராக கண்டிப்பதும் இயல்புதான். முன்னெச்சரிக்கைதான்.

நியாயம் எல்லோருக்கும் நண்பன்

ஆனால், அரசியல்வாதிகளின் பலவீனத்தை புரிந்துகொண்ட செந்தில் தான் சார்ந்த தலித் சமுதாயத்தை கருவியாக்கிக் கொண்டு, விபத்தில் பறிபோன தன் கைகால்களுக்கு காரணமாக, நவீனாவின் பெற்றோர்கள் மீது பலியை போட்டிருக்கிறார்.

செந்திலின் ஏமாற்று வேலையை தெரிந்துகொள்ளாத சில கட்சிகள் அவசரமான முன்முடிவுகளில் நவீனாவின் குடும்பத்திற்கு எதிராக போராட்டங்களும் நடத்தின.

காவலர்கள், பத்திரிகையாளர்கள் என சில குழுவினர் நேரில் சென்று நடத்திய ஆய்வில், செந்திலின் உடல் பாதிப்புக்கு விபத்துதான் காரணம் என்ற உண்மை வெளியானது.

பிறகு, செந்திலுக்கு ஆதரவாக போராடிய சில கட்சித் தலைவர்களே அந்த தவறுக்காக வெளிப்படையாக மன்னிப்பும் கேட்டுக்கொண்டனர். அது அந்த தலைவர்களின் தன் இனம் சார்ந்தவர்களின் உண்மையான பாதிப்புக்கு மட்டுமே போராடும் நற்குணத்தையே காட்டுகிறது.

கொலைக்குப் பிறகு விழிப்புணர்வு

அதேசமயம், செந்தில் பாதிக்கப்பட்டதாக நினைத்து தோள் கொடுக்க வந்த அவருக்கு நெருக்கமானவர்கள். உண்மை தெரிந்த பிறகாவது, செந்திலால் நவீனா பாதிக்கப்படாமல் இருக்க, நல்ல எண்ணத்தோடு சில அறிவுரைகளை வழங்கியிருக்கலாம்.

அப்படிச் செய்வதன் மூலம், செந்திலின் மனதில் நவீனாவை கொலை செய்ய வேண்டும் என்ற நஞ்சு வளரவிடாமல் தடுத்திருக்கலாம்.

அரசியல்வாதிகள் செந்திலுக்காக போராடி பெரிதாக்கியதால். இது செந்திலின் தவறாக மட்டும் அல்லாமல், அவர் சார்ந்த சமூகத்தையும் துரதிர்ஷ்டவசமாக நினைவுப்படுத்துகிறது.

ஆசை ஒரு பெண்ணிடம் அடைக்கலம் புகும்போது, அது எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சார்ந்தவர்களின் தன்மையை பொறுத்தது. செந்திலின் வக்கிரமும் ஆற்றாமையுமே கொலைக்கு தூண்டியுள்ளது.

ஏற்கனவே வேறு பெண்ணோடு சர்ச்சையில் ஈடுபட்டிருந்தால், அடுத்து ஏற்படும் காதல் வீரியமற்று இருக்கும் என்று சமுதாயம் கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றங்களுக்குள்ளும் காதல் விளங்கவே செய்கிறது.

ஆண்களா? விபத்து வாகனங்களா?

ஒரு பெண்ணின் அழகு, ஒரு ஆணால் ஈர்க்கப்படுவது தவறல்ல. அழகை துதிக்கும் குணம் படைத்த ஆண்கள், சாதாரண பெண்களை கூட சாம்ராஜ்ய ராணியாக்கி பார்த்திருக்கிறார்கள். செந்திலை போல அழிக்கும் குணம் படைத்தவர்கள் சாம்பலாக்கிவிடுகின்றனர்.

குற்றம் செய்தவர்கள் எப்படியும் சிறைத் தண்டனையில் வருந்தவே செய்வர். ஆனால், குற்றம் செய்வதற்குமுன் அவர்களுக்கு தன் தவறை எப்படி புரியவைப்பது.? அவனிடம் குற்ற எண்ணம் கருவாவதை எப்படி கண்டுகொள்வது? இதுதான் தடுப்பதில் உள்ள சிக்கல்.

சாலையில் தெய்வமேன்னு செல்பவரை, எதிரில் வாகனத்தில் வந்து ஏற்றிக் கொல்வது போல, சரியான பக்குவநிலை அடையாத பருவப்பெண்களை காதல் பெயரில் காலிசெய்து விடுகிறார்கள் இப்படிப்பட்ட இளைஞர்கள். இது ஒன்றல்ல, இரண்டல்ல, தொடர்கிறது.

காதலை கையாள்வதும் தெரியவில்லை. செக்ஸ் அறிவும் இல்லை. பெண்களைப் பற்றிய, சமுதாயத்தைப் பற்றிய, சட்டதிட்டங்களைப் பற்றிய சரியான புரிதலும் இல்லை. இதுபோன்ற இல்லாமைகள்தான் செந்திலைப் போன்றவர்களை உருவாக்கிவிடுகிறது.

சுவாதி, நவீனா போன்றவர்களின் கொலைகளில் உள்ள தவறுகளை எப்படித்தான் இந்த ஊடகங்கள் விளக்கினாலும் கூட, கிராமங்களிலும் நகரங்களிலும் வளரும் தலைமுறைகளிலும் எங்கேனும் ராம்குமார், செந்திலை போன்றவர்கள் மீண்டும் மீண்டும் உருவாகவே செய்கின்றனர்.

மேலும் கட்டுரை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments