தாய்லாந்து பிரதமர் பதவி விலக மறுப்பு! நாடு முழுவதும் தீவிரமடையும் போராட்டம்

Report Print Karthi in ஆசியா
58Shares

தாய்லாந்தில் கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டத்தினையொட்டி கூடிய சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரித்துள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

“நான் பிரச்சினைகளிலிருந்து ஓட மாட்டேன். நாட்டில் பிரச்சினைகள் உள்ள நேரத்தில் ராஜினாமா செய்வதன் மூலம் நான் எனது கடமையை விட்டு வெளியேற மாட்டேன் ” என்று அவர் நாடாளுமன்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை நடுப்பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டில் பின்பற்றப்படும் முடியாட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த அழுத்தம் காரணமாக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த போராட்டங்கள் குறித்தும், அதற்காக விதிக்கப்பட்ட தடைகள் குறித்தும் மன்னர் வஜிரலோங்கொர்னின் நிர்வாகம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், "அரசியலமைப்பின் அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்க மக்களுக்கு சுதந்திரம் இருந்தாலும், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும்" என்று பிரதமர் கூறியிருந்தது போராட்டக்காரர்கள் மத்தியில் கோபத்தினை மேலும் அதிகரிக்கச் செய்திருந்தது.

தாய்லாந்து பிரதமருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் முத்திரை Image credit: ALJAZEERA

2014-ல் நடைபெற்ற தேர்தலில் பிரயுத் முறைகேடாக வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்றதாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. முன்னதாக பிரயுத் ராணுவ தலைமையில் முக்கிய பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"ஜெனரல் பிரயுத் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய நான் அழைக்கிறேன், இது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க ஒரு தீர்வாக இருக்கும்." என எதிர்க்கட்சி செயலாளர் பிரசெர்ட் ஜந்தாரருங்தோங் வலியுறுத்தியுள்ளார்.

ஆனாலும், பிரதமர் தனது அதிகாரத்தில் தொடர்வதை உறுதி செய்திருப்பது போராட்டங்கள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்