புரட்டாசி மாத ராசி பலன்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு என்ன நடக்கும்?

Report Print Fathima Fathima in ஜோதிடம்
6406Shares
மேஷம்

மலர்கள் உதிர்வதால் செடிகள் சோர்வடைவதில்லை என்பதை அறிந்த நீங்கள் இழப்புகள், ஏமாற்றங்களைக் கண்டு என்றும் அஞ்சியதில்லை. 19ம் தேதி முதல் தனசப்தமாதிபதியான சுக்கிரன் ஆட்சி பெற்று 7ம் வீட்டில் அமர்வதால் விபத்துகள், போராட்டங்களிலிருந்து மீள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும்.

பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். உங்களின் பூர்வ புண்யாதி பதியான சூரியன் இந்த மாதம் முழுக்க 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு.

பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை சுமுகமாகும். மகனுக்கு வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம், வசதி வாய்ப்புகள் உயரும். குலதெய்வக் கோயிலை புதுப்பிப்பீர்கள். 3ந் தேதி வரை புதன் சாதகமாக இருப்பதால் சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். 4ம் தேதி முதல் புதன் 6ம் வீட்டில் மறைந்தாலும் ஆட்சிபெற்று அமர்வதால் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் இருக்கும்.

அவ்வப்போது அசதி, சோர்வு, தொண்டைப் புகைச்சல், நரம்புச் சுளுக்கு வந்து நீங்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் 9ம் வீட்டில் நிற்பதால் உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். 6ம் வீட்டிலேயே குரு மறைந்திருப்பதாலும், அஷ்டமத்துச் சனி தொடர்வதாலும் பணப் பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மாணவ, மாணவிகளே! விளையாட்டைக் குறையுங்கள். படிப்பில் தீவிரம் காட்டுங்கள். அறிவியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.

லாப வீட்டில் கேது நிற்பதால் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். தேங்கிக் கிடந்த பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். அதிரடி சலுகை திட்டங்கள் மூலமாக வருவாய் கூடும். பங்குதாரர்கள் வழக்கம் போல் முணுமுணுப்பார்கள். பகைத்துக் கொள்ளாதீர்கள். வேலையாட்களையும் விட்டுப் பிடிப்பது நல்லது. ரியல் எஸ்டேட், கமிஷன், ஏற்றுமதி வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நன்றி மறந்த சக ஊழியர்களை நினைத்து கொஞ்சம் ஆதங்கப்படுவீர்கள். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள்.

விவசாயிகளே! விளைச்சல் கொஞ்சம் மந்தமாக இருக்கும். பக்கத்து நிலக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கலைத்துறையினரே! பிறமொழி வாய்ப்பு களால் பயனடைவீர்கள். போராட்டங்களை கடந்து புத்துயிர் பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 22, 23, 24, 25, 29, 30, அக்டோபர் 2, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 5, 6 மற்றும் 7ம் தேதி நண்பகல் 12.30 மணி வரை வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம்: நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.

ரிஷபம்

வாழ்க்கை என்பது கசந்து, துவர்த்து, புளித்து, பின்பு இனிப்பதாகும் என்பதை அறிந்த நீங்கள் கஷ்ட நஷ்டங்களால் கசங்கியதில்லை. குருபகவான் 5ம் வீட்டில் நிற்பதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் தோன்றும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 19ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சிபெற்று அமர்வதால் தோற்றப் பொலிவு கூடும்.

கணவன் - மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். ஆனால், 6ல் சென்று சுக்கிரன் மறைவதால் கழுத்து வலி, சளித் தொந்தரவு, சைனஸ் தொந்தரவு, சிறுசிறு வாகன விபத்துகள் வந்துசெல்லும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதுடன், 4ம் தேதி முதல் ஆட்சிபெற்று அமர்வதாலும் குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். ஆனால், இந்த மாதம் முழுக்க 5ம் வீட்டிலேயே சூரியனும் அமர்வதால் அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. செவ்வாய் 8ல் நிற்பதால் மனஇறுக்கம், முன்கோபம், ரத்த அழுத்தம், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துசெல்லும். வீடு, மனை வாங்கும்போது தாய் பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தங்கள் வரும். 7ல் சனி அமர்ந்து கண்டகச் சனியாக தொடர்வதால் முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். சர்ப்ப கிரகங்களும் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் இரும்புச் சத்து உடலில் குறையும். எனவே, காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். திடீர் திடீரென்று உணர்ச்சிவசப்படுதல் இவையெல்லாம் இருக்கும். மூச்சுத் திணறல் ஏற்படக்கூடும். எனவே, மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலில் சிக்க வேண்டாம். தலைமையிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது.

மாணவ, மாணவிகளே! பழைய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

கன்னிப் பெண்களே! குழம்பிக் கொண்டிருந்த நீங்கள் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். உயர்கல்வி முயற்சிகளும் பலிதமாகும்.

வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேலையாட்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி அன்பாக திருத்துங்கள். ஆனால், புதிய வேலையாட்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உணவு, துணி, வாகன உதிரி வாகனங்களால் ஆதாயமடைவீர்கள்.

உத்யோகத்தில் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகளும் கிட்டும். எதிர்பார்த்து ஏமாந்த இடமாற்றம் இப்போது வரும். சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள்.

கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகளால் உற்சாகமடைவீர்கள். ஆனால், கிசுகிசு தொல்லைகள் வந்துபோகும்.

விவசாயிகளே! உங்களின் கடுமையான உழைப்பிற்கு ஏற்ப மகசூல் கூடும். யதார்த்தமான முடிவுகளால் எதிர்ப்புகளை முறியடித்து முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 17, 18, 24, 25, 26, 27, அக்டோபர் 3, 5, 6, 12, 13, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 7ம் தேதி நண்பகல் 12.30 மணி முதல் 8 மற்றும் 9ம் தேதி இரவு 10 மணி வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்: கும்பகோணம் - சுவாமிமலை முருகனை தரிசியுங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

மிதுனம்

வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது இறுதியல்ல என்பதை உணர்ந்த நீங்கள் எதற்கும் அலட்டிக் கொள்ள மாட்டீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சுக்கிரன் 19ம்தேதி முதல் 5ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். செவ்வாய் 7ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். வேனல் கட்டி, சிறுசிறு நெருப்புக் காயங்கள் வந்து செல்லும். மனைவிக்கு செரிமானக் கோளாறு, இடுப்பு வலி, மூச்சுப் பிடிப்பு, மூட்டு வலி வந்துபோகும். உடன்பிறந்தவர்களால் செலவுகள் இருக்கும்.

வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வரக்கூடும். சனியும், ராகுவும் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வரும். உங்கள் ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதுடன், 4ந் தேதி முதல் 4ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதாலும் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். இந்த மாதம் முழுக்க சூரியனும் 4ம் வீட்டில் இருப்பதால் வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். 4ம் வீட்டில் குருவும் நிற்பதால் தாயாருக்கு வேலைச்சுமை, அவருக்கு முதுகுத் தண்டில் வலி, கால் வலி, கண் எரிச்சல் வந்துபோகும். விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

அரசியல்வாதிகளே! உங்கள் புகழ் கூடும். தொகுதி மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

மாணவ, மாணவிகளே! படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு, கலைப் போட்டிகளிலும் பரிசு, பாராட்டுகள் பெறுவீர்கள். மதிப்பெண் கூடும். கன்னிப் பெண்களே! வேலை கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேறுவீர்கள்.

வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். கல்வித் தகுதியில் சிறந்த, நல்ல அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். பங்குதாரர்களின் பிரச்னை குறையும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். துரித உணவகம், ஸ்பெகுலேஷன், போர்டிங் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதற்கான பாராட்டும் உங்களுக்குக் கிடைக்கும். சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். அதிகாரிகளால் மறைமுகத் தொந்தரவுகள் இருந்து கொண்டேயிருக்கும்.

கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் வெற்றி பெறுவீர்கள்.

விவசாயிகளே! வற்றிய கிணறு சுரக்கும். புதிய சாகுபடி திட்டத்தில் சேர்ந்து மாற்று பயிர்களால் ஆதாயமடைவீர்கள். தன்னம்பிக்கையாலும், தளராத உழைப்பாலும் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 17, 18, 19, 20, 26, 27, 28, 29, 30, அக்டோபர் 5, 6, 7, 8, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 9ம் தேதி இரவு 10 மணி முதல் 10 மற்றும் 11ம் தேதி வரை முன்யோசனையுடன் செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்: திருநெல்வேலி நெல்லையப்பரையும் காந்திமதியையும் தரிசித்து வாருங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

கடகம்

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல உங்களை ஏளனமாக பேசுபவர்களையும் பொருட்படுத்தாமல் தன் வேலையில் கவனம் செலுத்துபவர்கள் நீங்கள்தான். உங்களின் தனாதிபதியான சூரியன் 3ம் வீட்டில் நுழைந்திருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு பரபரப்பாக இருக்கும். திடீர் திருப்பங்கள் உண்டாகும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வழக்குகள் சாதகமாகும்.

புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு கல்யாணம், காதுகுத்து விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவிவழியில் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். தாயாருக்கு இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு.

புதிதாக ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். 3ம் வீட்டிலேயே குரு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தவிர்க்க முடியாத தர்மச்சங்கடமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டி வரும். யாருக்கும் ஜாமீன் கையொப்பமிட வேண்டாம். செவ்வாய் 6ல் நிற்பதால் எதிர்ப்புகள் விலகும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சொத்து வாங்குவதற்கு முன் பணம் தருவீர்கள். 5ல் சனி தொடர்வதால் பிள்ளைகளால் பிரச்னைகள் வரும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம்.

அரசியல்வாதிகளே! மேல்மட்டத்தில் மதிக்கப்படுவீர்கள். புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும். தொகுதி மக்களை மறந்து விடாதீர்கள்.

மாணவ, மாணவிகளே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். கெட்ட நண்பர்களை தவிர்த்து விடுங்கள்.

கன்னிப் பெண்களே! காதல் கனிந்து வரும். பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பள்ளி, கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள்.

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். வேலையாட்களால் வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அனுபவமிக்க வேலையாட்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். கட்டிட உதிரி பாகங்கள், கன்சல்டன்ஸி, மர வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி உழைத்தாலும் ஒரு அங்கீகாரமோ, ஆறுதலான வார்த்தையோ இல்லையே என ஆதங்கப்பட்டுக் கொள்வீர்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வரும்.

கலைத்துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும். பழைய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித்தொல்லை குறையும். நவீன உரங்களை பயன்படுத்தி முன்னேறுவீர்கள். வளைந்து கொடுத்துப் போவதால் வாழ்க்கை நிமிரும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 19, 20, 21, 22, 23, 28, 29, 30, அக்டோபர் 2, 3, 8, 9,16.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 12, 13 மற்றும் 14ம் தேதி காலை 9.30 மணி வரை கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.

பரிகாரம்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.

சிம்மம்

புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பதுபோல் தன்மான சிங்கங்களாய் விளங்கும் நீங்கள் அநாவசியமாக யாருக்கும் தலைவணங்க மாட்டீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதி குரு 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மனநிம்மதி கிடைக்கும். உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடிவடையும். பிள்ளை பாக்யம் கிட்டும். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

யோகாதிபதி செவ்வாய் 5ல் நிற்பதால் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துபோகும். கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். ராசிநாதன் சூரியன் இந்த மாதம் முழுக்க 2ல் அமர்ந்திருப்பதால் கண் வலி, பல் வலி வந்துபோகும். யதார்த்தமாகப் பேசி சிக்கிக் கொள்வீர்கள். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

வீடு கட்டும் பணியில் இருந்த தேக்கநிலை மாறும். பண உதவியும் கிடைக்கும். ராசிக்குள் ராகுவும், 7ல் கேதுவும் நிற்பதால் கணவன் - மனைவிக்குள் ஒளிவு, மறைவில்லாமல் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வது நல்லது. மனைவிக்கு முதுகு, மூட்டு வலி வந்து நீங்கும். அவ்வப்போது உங்களுக்கும் தலைச்சுற்றல், நாக்கில் வறட்சி, மூச்சுத் திணறல், செரிமானக் கோளாறு வந்துபோகும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தாயாருடன் வீண் விவாதம் வரும்.

அரசியல்வாதிகளே! அநாவசியமாக யாருக்காகவும் வாக்குறுதி தர வேண்டாம். அதை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும்.

மாணவ, மாணவிகளே! பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.

கன்னிப் பெண்களே! கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு திருமணம் கூடி வரும்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். ரியல் எஸ்டேட், ஸ்டேஷனரி, இரும்பு வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.

உத்யோகத்தில் உங்களுடைய தொலை நோக்குச் சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள்.

விவசாயிகளே! எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நாலும் தெரிந்த நல்லவர்களின் வழிகாட்டுதலால் இலக்கை தொடும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 22, 23, 24, 25, அக்டோபர் 1, 2, 3, 4, 5, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 17, 18 மற்றும் அக்டோபர் 14ம் தேதி காலை 9.30 மணி முதல் 15, 16ம் தேதி நண்பகல் 12.30 மணி வரை புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும்.

பரிகாரம்: கும்பகோணம் ராமஸ்வாமி கோயிலுக்குச் சென்று வாருங்கள். முதியோர் இல்லத்திற்கு சென்று உதவுங்கள்.

கன்னி

யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பாத நீங்கள், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கையுடன் வாழ்வீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் 19ம் தேதி முதல் ஆட்சி பெற்று தன ஸ்தானத்தில் அமர்வதால் செல்வதால் தொட்டது துலங்கும். 4ம் தேதி முதல் ராசிநாதன் புதனும் ஆட்சி பெற்று உங்கள் ராசியிலேயே அமர்வதால் அழகு, இளமை கூடும். செவ்வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். வழக்கு சாதகமாகும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.

இந்த மாதம் முழுக்க உங்கள் ராசியிலேயே சூரியன் நிற்பதால் முன்கோபம், கண் எரிச்சல், அடி வயிற்றில் வலி வந்துபோகும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. அரசு காரியங்கள் தாமதமாக முடியும். திடீர் பயணங்களாலும், செலவுகளாலும் திணறுவீர்கள். ஜென்ம ராசியிலேயே குரு தொடர்வதால் ஆரோக்கியக் குறைவு வந்து போகும். உடம்பில் கட்டி வந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம். மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பழங்கள், காய்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்ற குழப்பங்களும் வரும். அவ்வப்போது தூக்கம் குறையும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடம் நெருங்கி பழகுங்கள். உட்கட்சி பூசல் வெடிக்கும்.

மாணவர்களே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். பயணங்களின்போது பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணிக்க வேண்டாம்.

கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வந்த மனஇறுக்கம் நீங்கும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள்.

சனி 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். எலக்ட்ரிக்கல், சிமென்ட், லாட்ஜிங் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது சின்னச் சின்ன குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டி கொண்டேயிருப்பார். வேலையை விட்டு விடலாமா என்று நினைப்பீர்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

விவசாயிகளே! அயராத உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற உயர்வை பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 17, 18, 25, 26, 27, 28, 29, அக்டோபர் 3, 5, 6, 8, 13,15.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 19, 20 மற்றும் 21ம் தேதி காலை 7 மணி வரை முன் கோபத்தால் பகை உண்டாகும்.

பரிகாரம்: உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஷீரடி பாபா கோயிலுக்குச் சென்று வாருங்கள். கோயில் உழவாரப் பணியை மேற்கொள்ளுங்கள்.

துலாம்

எந்த வேலையில் ஈடுபட்டாலும் முறைப்படி அதை முழுமையாகச் செய்து முடிக்கும் நீங்கள், நல்லது கெட்டது தெரிந்து செயல்படக் கூடியவர்கள். 19ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சிபெற்று அமர்வதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சோர்வு, களைப்பு நீங்கும். முடிவெடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும். தன்னிச்சையாக செயல்பட்டு சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். வி.ஐ.பிகளும் அறிமுகமாவார்கள். புதிய வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள்.

விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். யோகாதிபதி புதன் சாதகமாக இருப்பதால் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பாதகாதிபதி சூரியன் 12ல் மறைந்ததால் எதிர்ப்புகள் குறையும். ஆனால், இனந்தெரியாத மனக்கலக்கங்களும், எதிர்காலம் பற்றிய கவலைகளும் வந்து போகும். ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்து நீங்கும். பாதச் சனி தொடர்வதாலும், 5ல் கேது நிற்பதாலும் அவ்வப்போது சலிப்பு, சோர்வு வந்து நீங்கும்.

பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். செவ்வாய் 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மனைவியின் உடல் நிலை சீராகும். பனிப்போர் நீங்கும். உடன்பிறந்தவர்களால் பண உதவிகளும், பொருளுதவிகளும் கிடைக்கும். அரைகுறையாக இருந்த வீடு கட்டும் வேலை துரிதமாகும். ரசனைக்கேற்ப வீட்டு மனையும் அமையும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.

அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும்.

மாணவ,மாணவிகளே! உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

கன்னிப் பெண்களே! வேற்றுமதத்தைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள்.

வியாபாரத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். ஷேர், ஸ்பெகுலேஷன், போர்டிங், லாட்ஜிங் வகைகளால் ஆதாயம் உண்டு. இடவசதியின்றி தவித்துக் கொண்டிருந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். பங்குதாரர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள்.

உத்யோகத்தில் எதிர்பார்த்தபடி இடமாற்றம் உண்டு. சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். புது அதிகாரி உங்களை மதிப்பார். சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம்.

கலைத்துறையினரே! எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சம்பளம் உயரும். விவசாயிகளே! குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். கரும்பு, சவுக்கு, தேக்கு வகைகளால் லாபமடைவீர்கள். எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 17, 18, 19, 20, 26, 27, 29, அக்டோபர் 6, 7, 8, 9, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 21ம் தேதி காலை 7 மணி முதல் 22 மற்றும் 23ம் தேதி காலை 9.30 மணி வரை தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள்.

பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள அய்யாவாடி பிரத்யங்கராவை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த மகனுக்கு உதவுங்கள்.

விருச்சிகம்

எப்போதும் தியாகம் செய்து கொண்டிருக்கும் நீங்கள், முடியாது என்பதையும் கடின உழைப்பால் முடித்துக் காட்டுவீர்கள் உங்களின் பிரபல யோகாதிபதியான சூரியன் லாப வீட்டில் நிற்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். அரசால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள்.

பூர்வீகச் சொத்து கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். மனைவி உங்களின் புது முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். மனைவி வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். சமையலறையை நவீனமாக்குவீர்கள். ஜென்மச் சனி தொடர்வதால் போகும். அவ்வப்போது புலம்புவீர்கள். நெஞ்சு வலி, வயிற்று எரிச்சல், காய்ச்சல், அலர்ஜி வந்துபோகும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். ஆனால், குருபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் வசதி, வாய்ப்புகள் பெருகும்.

எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். ராசிநாதன் செவ்வாய் 2ல் அமர்ந்திருப்பதால் சகோதர வகையில் அலைச்சல், செலவு, டென்ஷன் வந்துபோகும். பேச்சில் நிதானம் அவசியம். வெளிவட்டாரத்தில் அவசரப்பட்டு யாரையும் விமர்சிக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையொப்பமிட வேண்டாம். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.

அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடையே புகழடைவீர்கள். தலைமைக்கும் நெருக்கமாவீர்கள்.

மாணவ, மாணவிகளே! மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியரின் பாராட்டு கிட்டும்.

கன்னிப் பெண்களே! காதல் குழப்பங்கள் தீரும். புதிய நண்பர்களின் நட்பால் மகிழ்ச்சியடைவீர்கள்.

வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த குழப்பங்கள் நீங்கும். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிப்பார்கள். பூ, ஸ்டேஷனரி, பெட்ரோ கெமிக்கல் வகைகளால் லாபமடைவீர்கள். புதிய சலுகைத் திட்டங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.

சூரியன் லாப வீட்டில் நிற்பதால் உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. மூத்த அதிகாரி நெருக்கமாவார். இடமாற்றம் சாதகமாக அமையும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினரே! உங்கள் படைப்புகள் பலராலும் பாராட்டிப் பேசப்படும்.

விவசாயிகளே! ஊரில் மரியாதை கூடும். மரப்பயிர் மற்றும் கரும்புப் பயிரால் ஆதாயம் கூடும். புது அணுகுமுறையால் வலம் வரும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 19, 20, 22, 28, 29, 30, அக்டோபர் 8, 9, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 23ம் தேதி காலை 9.30 மணி முதல் 24 மற்றும் 25ம் தேதி மதியம் 1.15 மணி வரை அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரரை தரிசித்து வாருங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.

தனுசு

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு பகவான் 10–ல் சஞ்சரிக்கின்றார். 10–ல் குரு வந்தால் பதவி மாற்றம் என்பது பழமொழி. ஆனாலும் வரும் மாற்றம் நல்ல மாற்றமாக அமைய வழிபாடுகள் கைகொடுக்கும். ஜென்மத்தில் செவ்வாய் இருப்பதால் முன்கோபம் கூடுதலாக வந்து இடையூறுகளை விளைவிக்கும். ஏழரைச் சனியிலும் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. எனவே குடும்பச் சுமை கூடுதலாக இருக்கும்.

இருப்பினும் முதல் சுற்று நடப்பவர்களும், மூன்றாவது சுற்று நடப்பவர்களும் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். இரண்டாவது சுற்று நடப்பவர்களுக்கு பொங்கு சனி என்பதால் மங்கள ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு உருவாகும். தங்குதடைகள் அகலும். தனலாபம் கூடுதலாக இருக்கும். குருவின் பார்வை 2–ம் இடத்தில் பதிவது யோகம் தான். வாக்கு, தனம், குடும்பம் எனப்படும் இடத்தைக் குரு பார்ப்பதால் செல்வாக்கு எப்போதும் போல இருக்கும். செயல்பாடுகளும், திட்டங்களும் வெற்றி பெறும். நல்வாக்குச் சொல்பவர்கள் உங்கள் அருகிலிருந்து வளர்ச்சிக்கும், மனஅமைதிக்கும் வழிகாட்டுவர்.

புத்திரகாரகன் என்று வர்ணிக்கப்படும் குரு வலிமை இழந்து சுக்ரனோடும், சூரியனோடும் கூடியிருப்பதால் பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு மன அமைதியைக் குறைக்கலாம். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். இதுபோன்ற நேரங்களில் குரு பிரீதி செய்வது நல்லது. அதுமட்டுமல்லாமல் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் கொடுக்கும் இடத்தில் ராகுவும், முன்னேற்றத்தை வழங்கும் மூன்றாமிடத்தில் கேதுவும் இருப்பதால் நாகசாந்திப் பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் செய்வது நல்லது.

ராசிநாதனாகவும், 4–ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் குரு பரிவர்த்தனை யோகம் பெற்ற கிரகமான சூரியனோடு இருப்பதால் அரசியல்வாதிகளுக்கு இது உன்னதமான நேரமாகும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், நல்ல பதவிகளும் கிடைக்கும். சகோதர வர்க்கத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. வீடு கட்டுதல், கட்டிய வீட்டைப் பழுது பார்த்தல், திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் போன்றவை கட்டும் வாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக விரயச் சனியின் ஆதிக்க காலத்தில் வாகன மாற்றம் செய்வது நல்லது. பழைய வாகனங்களால் பழுதுச்செலவுகளும், சிக்கல்களும் ஏற்படலாம். ஒன்பதில் சஞ்சரிக்கும் ராகு உன்னத வாழ்வமைத்துத் தர வாரம் தோறும் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்வதோடு நவராத்திரியில் அம்பிகை வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.

சுகம் தரும் சுக்ரப்பெயர்ச்சி! செப்டம்பர் 19–ம் தேதி சுக்ரன் நீச்சத்திலிருந்து விடுபட்டுத் துலாம் ராசியில் அடியெடுத்து வைக்கின்றார். துலாம் ராசி சுக்ரனுக்குரிய சொந்தவீடாகும். இக்காலத்தில் வருமானப் பற்றாக்குறை அகலும். வாய்ப்புகள் வந்து அலைமோதும். தனக்கும் செலவிடுவீர்கள், தர்ம காரியத்திற்கும் செலவிடுவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். ஊர் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். வெளிநாட்டு யோகம் கைகூடும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.

உச்ச புதனின் சஞ்சாரம்! அக்டோபர் 4–ம் தேதி கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகின்றார். தொழில் ஸ்தானம் எனப்படும் 10–ம் இடத்தில் ஸ்தானாதிபதி உச்சம் பெறும்பொழுது தொழில் வளர்ச்சி கூடுதலாக இருக்கும். வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் முன்வந்து சுயதொழில் தொடங்குவர். லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இருமடங்காக வந்து சேரும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். மாமன், மைத்துனர் வழியில் மனதிற்கினிய சம்பவம் நடைபெறும்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்! அக்டோபர் 14–ம் தேதி முதல் 12–ம் இடத்தில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகின்றார். 6, 11–க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தனாதிபதி சனியோடு இணையும் பொழுது வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். தேங்கிய காரியங்கள் விரைவில் நடக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகளைப் பரிசீலிப்பீர்கள். மனக்குழப்பம் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். இம்மாதம் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வழிபாட்டை மேற்கொள்வதோடு ராகு–கேது பிரீதி செய்வது நல்லது.

பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: செப்டம்பர் : 17, 18, 28, 29, அக்டோபர் : 2, 3, 11, 12

மகிழ்ச்சி தரும் வண்ணம்: சிவப்பு

மகரம்

மனம் போன போக்கில் போகாமல் தனக்கென ஒரு தனிப்பாதையில் பயணிக்கும் நீங்கள், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டுமென நினைப்பீர்கள். ராஜகிரகங்களான குருவும், சனியும் வலுவாக இருப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி திரும்பும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். கோவில் விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடிவடையும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். வேற்று மதத்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் அதிரடி மாற்றம் உண்டாகும்.

புதுப் பதவிகள் தேடி வரும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். உயர்கல்விக்காகவும் அனுப்பி வைப்பீர்கள். வீடு கட்டும் பணி விரைவடையும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். செவ்வாய் 12ம் இடத்தில் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். சகோதரங்களுடன் விவாதங்கள் வரும்.

வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து போகும். இந்த மாதம் முழுக்க 9ம் வீட்டில் சூரியன் நிற்பதால் தந்தையாருக்கு மூச்சுத் திணறல், மூட்டு வலி வந்துப் போகும். அரசாங்க விஷயம் தள்ளிப் போய் முடியும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் உங்களைப் பற்றிய வதந்திகள் ஆங்காங்கே பரவும். பலவற்றையும் நினைத்து குழம்பாதீர்கள். முன்கோபத்துடன் பேசி சொற் குற்றம், பொருட் குற்றத்தில் சிக்கிக் கொள்ளதீர்கள்.

அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சியினர் மீது குற்றம் சாட்ட வேண்டாம்.

கன்னிப் பெண்களே! பெற்றோருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த தோழியை சந்திப்பீர்கள்.

மாணவ, மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். சக மாணவர்களின் சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்கள்.

வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். சந்தை ரகசியங்களை தெரிந்துக் கொள்வீர்கள். பழைய வாடிக்கையாளர்களும், வேலையாட்களும் தேடி வருவார்கள். ஜூவல்லரி, செல்போன் மற்றும் கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.

உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மூத்த அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். வேறு துறைக்கு மாற்றப்படுவீர்கள்.

கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

விவசாயிகளே! பக்கத்து இடத்தையும் வாங்குமளவிற்கு மகசூல் பெருகும். கடன் உதவி கிடைக்கும். புதிய பாதையை நோக்கி பயணித்து வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 18, 19, 20, 25, 26, அக்டோபர் 2, 3, 5, 6, 13, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 27ம் தேதி இரவு 7 மணி முதல் 28 மற்றும் 29ம் தேதி வரை எதிலும் நிதானித்து செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்: மயிலாடுதுறை - குத்தாலம் பாதையிலுள்ள க்ஷேத்ரபாலபுரம் பைரவரை தரிசித்து வாருங்கள். வயோதிகர்களுக்கு குடையும், செருப்பும் வாங்கிக் கொடுங்கள்.

கும்பம்

கரடு முரடான பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்கும் நீங்கள், பல விஷயங்களில் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுவீர்கள். செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சகோதரங்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். ராசிநாதன் சனிபகவான் சாதகமாக இருப்பதால் புது வேலை அமையும். வேற்று மொழி, மாற்று மதத்தவர்களால் உதவிகள் உண்டு.

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அடகிலிருந்த நகையை மீட்க வழி கிடைக்கும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சொந்த, பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ராகு, கேது மற்றும் குரு உங்களுக்கு சாதகமாக இல்லாததால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், பணப் பற்றாக்குறையும் வந்துபோகும்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது பெருமூச்சு விடுவீர்கள். சளித் தொந்தரவும், தோலில் நமைச்சலும் வந்து நீங்கும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். சூரியன் இந்த மாதம் முழுக்க 8ல் மறைந்து நிற்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடி வயிற்றில் வலி வந்து நீங்கும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். மனைவி வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும்.

அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள்.

மாணவ, மாணவிகளே! கல்யாணம், காது குத்து என்று விடுப்பு எடுக்காமல் படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். ஏற்றுமதி, இறக்குமதி, பதிப்பகம், மர வகைகளால் அதிக ஆதாயமடைவீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளை கையாளுவீர்கள். பங்குதாரர்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள்.

உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். அலுவலக சூட்சுமங்கள் அத்துபடியாகும். சக ஊழியர்கள் உங்களைப்பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள்.

கலைத்துறையினரே! மலையாளம், ஹிந்தி மொழியினரால் ஆதாயம் உண்டு.

விவசாயிகளே! புது இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். நெல், மஞ்சள், கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள். விட்டுக் கொடுத்து இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 17, 18, 19, 20, 26, 27, 28, 29, அக்டோபர் 5, 6, 7, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1, 2ம் தேதி மதியம் 1.45 மணி வரை மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

பரிகாரம்: சிதம்பரத்தில் அருளும் தில்லைக் காளியை தரிசித்து வாருங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.

மீனம்

மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நீங்கள், தன் குடும்ப நலனை விட தன்னைச் சார்ந்திருப்போரின் விவகாரத்தில் அக்கறை காட்டுவீர்கள். சுக்கிரனும், ராசிநாதன் குருபகவானும் சாதகமாக இருப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பணவரவு அதிகரிக்கும். பிரபலங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். பழைய சிக்கல்களுக்கு மாறுபட்ட அணுகுமுறை மூலம் புதிய தீர்வு கிடைக்கும். வெளிநாட்டில், வெளிமாநிலத்தில் இருப்பவர்களால் பண உதவிகள் கிடைக்கும்.

வாகனத்தை சரி செய்வீர்கள். வீடு மாற வேண்டியது வரும். வசிக்கும் வீட்டில் கூடுதல் அறை சிலர் கட்டுவீர்கள். மனைவிக்கு வேலை கிடைக்கும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். செவ்வாய் 10ம் இடத்தில் நிற்பதால் புதுவேலை கிடைக்கும். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கடனாகவும், கைமாற்றாகவும் வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வழக்கிலும் வெற்றி கிடைக்கும். ரசனைக்கேற்ற வீடு, மனையும் அமையும். பாகப் பிரிவினை, சொத்துப் பிரச்னைகள் தீரும். உடன்பிறந்தவர்கள் உங்களை சரியாகப் புரிந்து கொள்வார்கள்.

இந்த மாதம் முழுக்க சூரியன் 7ல் இருப்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, தொண்டைப் புகைச்சல் வந்துபோகும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். 3ந் தேதி வரை புதன் 6ல் மறைந்திருப்பதால் அலைச்சல், டென்ஷன், செலவுகள் வந்துபோகும். 4ந் தேதி முதல் புதன் 7ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்ந்து உங்களது ராசியைப் பார்க்கயிருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். தாயாரின் ஆரோக்யம் சீராகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய சொந்தபந்தங்கள் தேடிவந்து பேசுவார்கள்.

அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் கனியும். கல்யாணம் கூடி வரும்.

மாணவ, மாணவிகளே! உங்களுடன் போட்டி, பொறாமையுடன் பழகிய சில மாணர்வர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள்.

ராகு 6ல் நிற்பதால் வியாபாரம் செழிக்கும். முக்கிய பிரமுகர்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன், பெட்ரோ கெமிக்கல், இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் வளைந்து வருவார்கள்.

உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்களும் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள்.

கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். வரவேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும்.

விவசாயிகளே! விளைச்சல் இரட்டிப்பாகும். புதிதாக நிலம் வாங்குவீர்கள். செல்லும் இடமெல்லாம் சிறப்பு பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 20, 22, 24, 28, 29, 30, அக்டோபர் 1, 8, 9, 10, 11.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 2ம் தேதி மதியம் 1.45 மணி முதல் 3 மற்றும் 4ம் தேதி வரை வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். சாலையோரம் வாழும் சிறார்களுக்கு உதவுங்கள்.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments