புரட்டாசி மாத ராசி பலன்கள்: மேஷம் முதல் கன்னி வரை

Report Print Fathima Fathima in ஜோதிடம்

மேஷம் முதல் கன்னி ராசிக்காரர்களுக்கான புரட்டாசி மாத ராசி பலன்கள் இதோ,

மேஷம்

தன்மானத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்காமல் உயிரென மதிக்கும் நீங்கள் நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பீர்கள். இலவசத்தை விரும்ப மாட்டீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் இப்போது 6ம் வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.

அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் உடனடியாக நிறைவேறும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கிருந்த முன்கோபம், கூடாப் பழக்க வழக்கங்கள் விலகும். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும்.

9ந் தேதி வரை சுக்கிரன் சாதகமாக இருப்பதால் நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சமையலறையை மாற்றம் செய்வீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக அமையும். வாகனத்தை மாற்றுவீர்கள். சரி செய்வீர்கள்.

ஆனால், 10ந் தேதி முதல் சுக்கிரன் 6ல் சென்று மறைவதால் தொண்டை வலி, சளித் தொந்தரவு, சிறுசிறு விபத்துகள், கணவன் மனைவிக்குள் சச்சரவுகள் வந்து செல்லும். 22ந் தேதி முதல் புதன் 6ல் மறைந்தாலும் ஆட்சிபெற்று அமர்வதால் உறவினர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும்.

9ந் தேதி முதல் புதன் உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்களால் திருப்பம் உண்டு. 13ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் 5ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.

சகோதர, சகோதரிகளுடன் மனத்தாங்கல் வரும். 7ம் வீட்டில் குரு அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் எல்லா பிரச்னைகளையும் சமாளித்து முன்னேறுவீர்கள். சிலருக்கு புது வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! கட்சித் தலைமை உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும்.

கன்னிப் பெண்களே! தள்ளிப்போன திருமணம் கூடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும்.

மாணவ, மாணவிகளே! வகுப்பாசிரியர் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். என்றாலும் அஷ்டமத்துச் சனி தொடர்வதால் ஏனோ தானோ என்று படிக்காமல் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.

வியாபாரிகளே! வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கடையை விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சலுகை திட்டங்களை அறிவிப்பீர்கள். உணவு, புரோக்கரேஜ், ஏஜென்ஸி வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நெடுநாட்களாக தடைப்பட்டு வந்த பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருந்தாலும் மூத்த அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையினரே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விவசாயிகளே! வங்கிக்கடன் உதவி கிடைக்கும். கிணற்றில் தண்ணீர் சுரக்கும். ராஜதந்திரமாக செயல்பட்டு முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 22, 23, 29, 30 மற்றும் அக்டோபர் 1, 2, 3, 4, 10, 11, 12, 13, 16, 17.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 24ம் தேதி இரவு 11.13 மணி முதல் 25, 26, 27ம் தேதி காலை 10.39 மணி வரை புதிய தொழில் எதையும் தொடங்க வேண்டாம்.

பரிகாரம்: திருநெல்வேலி நெல்லையப்பரை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

ரிஷபம்

நினைத்ததை சாதித்துக் காட்டும் மன உறுதியும், விடாமுயற்சியும் கொண்ட நீங்கள், எப்பொழுதும் எளிய வாழ்க்கையை விரும்புவீர்கள். செவ்வாய் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உடன்பிறந்தவர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.

குருபகவான் 5ம் வீட்டில் நிற்பதால் வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குழந்தை பாக்யம் கிட்டும். பழைய சொந்த பந்தங்களை சந்திப்பீர்கள். நீண்ட காலப் பிரார்த்தனையை இப்போது நிறைவேற்றுவீர்கள்.

உங்கள் பூர்வ புண்யாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் வாகன வசதிப் பெருகும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை முடிக்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள்.

22ந் தேதி முதல் உங்கள் ராசிநாதனாகி புதன் 4ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்வதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களின் தியாக உள்ளத்தைப் புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான சூரியன் 4ல் அமர்ந்திருப்பதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.

ராகு 2ம் இடத்திலும், கேது 8லும் தொடர்வதால் பார்வைக் கோளாறு, வீண் விரயங்கள், ஏமாற்றங்கள், பேச்சால் பிரச்னைகள், சிறுசிறு விபத்துகளெல்லாம் வந்து செல்லும்.

அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங்களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.

கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். முகப்பரு, பசியின்மை நீங்கும்.

மாணவமாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள்.

வியாபாரிகளே! வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட லாபம் அதிகரிக்கும். விளம்பர யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள்.

பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்னைகளும் கட்டுப்பாட்டிற்குள் வரும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். மருந்து, துணி, உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

விவசாயிகளே! தோட்டப் பயிர்கள் மூலம் லாபம் வரும். வீட்டில் நல்லது நடக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 17, 18, 19, 20, 25, 26, 27, 28, 29 மற்றும் அக்டோபர் 5, 6, 7, 8, 9, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 29ம் தேதி இரவு 10.09 மணி முதல் 30மற்றும் அக்டோபர் 1, 2ம் தேதி காலை 8.13 மணி வரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்து வாருங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.

மிதுனம்

மதியாதார் முற்றம் மிதிக்காத நீங்கள், யாருக்காகவும், தன் கொள்கை, கோட்பாடுகளை மாற்றிக் கொள்ள மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வழக்கு சாதகமாக முடியும்.

குடும்ப வருமானம் உயரும். பழைய பெரிய பிரச்னைகள் தீரும். ஆனால், சின்னச் சின்ன பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். உங்கள் ராசிக்கு பூர்வ புண்யாதிபதியான புதன் 8ந் தேதி வரை வலுவாக இருப்பதால் நிம்மதி, பணவரவு, எதிர்ப்புகள் நீங்கும். குழந்தை பாக்யம் கிட்டும். உறவினர், நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். பூர்வீக சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.

ஆனால் 9ந் தேதி முதல் புதன் 6ம் வீட்டில் மறைவதால் மனஉளைச்சல், நரம்புச் சுளுக்கு, சளித் தொந்தரவு, பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்னை வந்துபோகும்.

13ந் தேதி வரை செவ்வாய் சாதகமாக இருப்பதால் பூமி சம்பந்தப்பட்ட சிக்கல்கள், சொத்துப் பிரச்னைகள், பாகப் பிரிவினைகள் சாதகமாக முடியும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். சகோதர, சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள். 5ம் வீட்டில் நிற்கும் சூரியனுடன் 14ந் தேதி முதல் செவ்வாயும் சேர்வதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்துபோகும்.

அரசாங்க விஷயங்கள் தள்ளிப்போய் முடியும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் வாகனப் பழுது நீங்கும். பாதியிலேயே நின்று போன வீடு கட்டும் பணி முழுமையடையும்.

உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குரு 6ம் இடத்தில் மறைந்திருப்பதால் இருப்பதால் அவ்வப்போது தூக்கம் குறையும். மற்றவர்கள் உங்களைப்பற்றி குறைவாகவும், தாழ்வாகவும் நினைப்பதாக எண்ணுவீர்கள். அந்த தாழ்வு மனப்பான்மை வேண்டாம்.

அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது.

கன்னிப் பெண்களே! யார் எது பேசினாலும் நம்பி விடாதீர்கள். உண்மையானவர்களை இனங் கண்டறியப் பாருங்கள். பெற்றோர் ஆதரிப்பார்கள்.

மாணவ மாணவிகளே! விளையாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஆசிரியர்களிடம் தயங்காமல் சந்தேகத்தை கேளுங்கள்.

வியாபாரிகளே! வியாபாரம் சுமாராக இருக்கும். சந்தை நுணுக்கங்களை தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள். பங்குதாரர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். ஏற்றுமதி, இறக்குமதி, கமிஷன் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் கொஞ்சம் உஷாராக இருங்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் கடின உழைப்பைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். சக ஊழியர்களில் சிலர் உங்களை உதாசீனப்படுத்துவார்கள்.

கலைத்துறையினரே! உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்தாலும் அஞ்ச வேண்டாம்.

விவசாயிகளே! நவீனரக உரங்களை கையாளுவதால் விளைச்சலில் இருந்து வந்த மந்த நிலை மாறும். ஆழமறிந்து காலை விட வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 17, 19, 23, 24, 25, 26 மற்றும் அக்டோபர் 3, 4, 5, 6, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 27ம் தேதி காலை 10.39 மணி முதல் 28, 29ம் தேதி இரவு 10.09 மணி வரை புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம்.

பரிகாரம்: திண்டிவனம் நகரத்தின் மையத்திலுள்ள சிவாலயத்தில் அருளும் திந்திரிணீஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஏழை மாணவியின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

கடகம்

நிறை குறைகளை அலசி ஆராய்ந்து மற்றவர்களை துல்லியமாக கணிக்கும் நீங்கள் பிறரின் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டிலேயே கடந்த ஒரு மாதமாக அமர்ந்து கொண்டு ஓரளவு பணவரவையும், பேச்சால் சின்ன சின்ன பிரச்னைகளையும் ஏற்படுத்தி வந்த சூரியன் ராசிக்கு 3ம் வீட்டில் வந்து அமர்ந்ததால் தடைப்பட்ட காரியங்கள் முடியும்.

கண் கோளாறு, பல் வலியிலிருந்து விடுபடுவீர்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்கத்தால் கௌரவம் உண்டு. சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். வழக்குகள் எதிர்பார்த்ததைவிட நல்ல விதத்தில் முடியும். மற்றவர்களை நம்பி ஏமாந்து போன விஷயங்கள் இந்த மாதத்தில் முடியும்.

ஆனால் ராசிக்குள் ராகுவும், 7ல் கேதுவும் தொடர்வதால் எதுவாக இருந்தாலும் நீங்களே நேரில் சென்று எல்லா வேலைகளை செய்து முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சில நேரங்களில் கோபப்படுவீர்கள்.

சிலரின் சுயரூபத்தை அறிந்து கொண்டு வருத்தப்படுவீர்கள். சிலர் ஏன் இப்படி எல்லாம் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்று வேதனைப்படுவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய இனிமையான அனுபவங்கள் நினைவுக்கு வரும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியுடன் பேசுவீர்கள். குரு 4ல் அமர்ந்திருப்பதால் தாயாருக்கு முதுகுத் தண்டில் வலி, அசதி, சோர்வு வந்து நீங்கும். சிலர் வீடு மாறவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும்.

வீட்டை விரிவுபடுத்துவது, புதுப்பிப்பது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும். செவ்வாய் சாதகமாக இல்லாததால் வீரியத்தை குறைத்துக் கொண்டு காரியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது.

அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப்படுவீர்கள்.

கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

மாணவமாணவிகளே! விளையாடும் போது கவனம் தேவை. பயணங்களின் போது பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணிக்க வேண்டாம். பொது அறிவுத் திறன் வளரும்.

வியாபாரிகளே! வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது.

ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள், பருப்பு வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் செய்த தவறுகளுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகிவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். முக்கிய ஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள். சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.

விவசாயிகளே! மகசூல் மந்தமாக இருக்கும். தண்ணீர் பிரச்னையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பதுபோலதான் இப்போதைய நிலை இருக்கும். நிதானத்தால் நெருக்கடிகளை நீந்திக் கடக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 18, 19, 20, 22, 23, 28, 29, 30 மற்றும் அக்டோபர் 1, 7, 8, 10, 16, 17.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 2ம் தேதி காலை 8.13 மணி முதல் 3, 4ம் தேதி பிற்பகல் 3.55 மணி வரை யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

பரிகாரம்: கும்பகோணம் ராமஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று தரிசித்து வாருங்கள். மரக்கன்று நட்டு பராமரியுங்கள்.

சிம்மம்

அரைக்காசுக்கு போன மானம் ஒரு கோடி கொடுத்தாலும் திரும்ப வராது என்பதை அறிந்த நீங்கள் தன்மானச் சிங்கங்கள். இந்த மாதம் முழுக்க சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பிரச்னைகளை எப்படி தீர்க்கலாம் என்று யோசிப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள்.

வாகனத்தை மாற்றுவது, சீர் செய்வது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். புதிதாக ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள்.

வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டு. கேது 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் முக்கியமான முடிவுகளெல்லாம் தன்னிச்சையாக எடுப்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டுமனை வாங்குவீர்கள். தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

வேற்றுமதம், மொழியினரால் அதிரடி மாற்றம் உண்டாகும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான குருபகவான் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் முன்கோபத்தைக் குறையுங்கள். தன்னம்பிக்கையில்லாமல் போகும். பெயரும், புகழும் கெட்டுவிடுமோ என்ற ஒரு பயம் ஏற்படும்.

எப்போது பார்த்தாலும் மனதில் சின்னச் சின்ன சலனம் இருந்து கொண்டேயிருக்கும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் செலவுக்கு பணம் வரும். கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். நட்பு வட்டம் விரியும். உங்கள் ராசிநாதன் சூரியன் ராசியை விட்டு விலகி 2ல் அமர்ந்ததால் கண் எரிச்சல், பார்வைக் கோளாறு, பல் வலி, பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும்.

அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் என்ன வாழ்க்கை இது? செக்கு மாட்டு வாழ்க்கை மாதிரி என்றெல்லாம் சின்னதாக ஒரு வெறுப்பு, சலிப்பு வந்து போகும். தாயாரிடம் எதையும் மறைக்க வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.

அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும்.

கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். புதிதாக லேப்டாப், மொபைல் போன் வாங்குவீர்கள்.

மாணவ மாணவிகளே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள்.

வியாபாரிகளே! வியாபாரத்தில் வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள்.

இரும்பு, ஸ்பெகுலேஷன், கடல் உணவு வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக செயல்படப்பாருங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரியின் ஆறுதல் வார்த்தையால் நிம்மதி கிட்டும். சக ஊழியர்களால் மறைமுக எதிர்ப்புகளும், தொந்தரவுகளும் தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கும்.

கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டுக் கிடைக்கும்.

விவசாயிகளே! மரப்பயிர்களால் வருமானம் பெருகும். இயற்கை உரத்தை மறந்து விடாதீர்கள். மனப்போராட்டம் நீங்கி மகிழ்ச்சி பெருகும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 22, 23, 24, 30 மற்றும் அக்டோபர் 1, 2, 3, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 4ம் தேதி பிற்பகல் 3.55 மணி முதல் 5, 6ம் தேதி இரவு 9.17 மணி வரை புதிய தொழில் எதையும் தொடங்க வேண்டாம்.

பரிகாரம்: புதுக்கோட்டையில் அருள்பாலிக்கும் புவனேஸ்வரியை தரிசித்து வாருங்கள். கோயில் உழவாரப் பணியை மேற்கொள்ளுங்கள்.

கன்னி

அன்றாட வாழ்வில் ஏற்படும் நெளிவு, சுளிவுகளுக்கு தகுந்தாற்போல் வளைந்து கொடுத்து வாழக்கற்று கொண்ட நீங்கள், எப்பொழுதும் புதுமையை விரும்புவீர்கள். ராகு லாப ஸ்தானத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும்.

சிலர் புதிதாக வீடுகட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். ஷேர் பணம் தரும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

ராஜ கிரகங்களான குருவும், சனியும் வலுவாக இருப்பதால் மனோபலம் அதிகரிக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். இளைய சகோதர, சகோதரிகளால் பலனடைவீர்கள். பூர்வீகச் சொத்தை விற்று உங்கள் ரசனைக்கேற்ப வீடு மனை வாங்குவீர்கள். ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்திருந்த சூரியன் இப்போது உங்கள் ராசிக்குள் நுழைந்திருப்பதால் படபடப்பு, முன்கோபம் வரும்.

அவசரப்பட்டு, உணர்ச்சி வேகத்தில் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். உங்களின் ராசிநாதனாகிய புதன் 22ந் தேதி முதல் உங்கள் ராசிக்குள்ளேயே உச்சம் பெற்று அமர்வதால் உற்சாகம் பொங்கும். பணப்புழக்கம் அதிகமாகும். செவ்வாய் சாதகமாக இல்லாததால் வீண் அலைச்சல், செலவுகள், திடீர் பயணங்கள், சகோதர வகையில் மனத்தாங்கல், தூக்கமின்மை வந்து செல்லும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிலர் நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப்பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள்.

கன்னிப்பெண்களே! கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் புது முயற்சிகளுக்கு பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

மாணவ மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். விளையாட்டு, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசையும் பாராட்டையும் பெறுவீர்கள்.

வியாபாரிகளே! வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். தொழிலை விரிவுபடுத்த லோன் கிடைக்கும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பர். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.

மரவகைகள், ரியல் எஸ்டேட், டிராவல்ஸ், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள். சக ஊழியர்களின் சம்பள உயர்விற்காக போராடுவீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

கலைத்துறையினரே! கௌரவிக்கப்படுவீர்கள். உங்களுடைய படைப்புத் திறன் அதிகரிக்கும்.

விவசாயிகளே! பூச்சி, எலித் தொல்லை விலகும். புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். அடுத்தடுத்த வெற்றிகள் தொடரும் மாதமிது.

ராசியான தேதிகள்: செப்டம்பர் 17, 23, 25, 26, 27, 28, 29 மற்றும் அக்டோபர் 3, 4, 5, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 6ம் தேதி இரவு 9.17 மணி முதல் 7, 8ம் தேதி வரை ஜாமீன் கேரண்டர் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: சென்னை - திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை தரிசியுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்