அக்டோபர் மாத ராசி பலன்கள்

Report Print Fathima Fathima in ஜோதிடம்
2353Shares
2353Shares
lankasrimarket.com
மேஷம்

வாழ்க்கையை குறிக்கோளுடன் நடத்தி வெற்றி காணும் மேஷ ராசியினரே, நீங்கள் எடுத்த முடிவை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளமாட்டீர்கள். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார்.

பாக்கியாதிபதி குரு தனது சம ஸப்தம பார்வையால் அருள் செய்கிறார். மன திடம் அதிகரிக்கும். அதே வேளையில் அஷ்டமத்து சனியால் வீண்குழப்பம் ஏற்படலாம். எனவே எதைப்பற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

தனாதிபதி சுக்கிரன் ராசிநாதனுடன் இணைந்து சஞ்சாரம் செய்வதால் பணவரத்து இருந்தபோதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசும்போது கவனம் தேவை.

இல்லையெனில் வீணான அவச்சொல் உண்டாகும். தொழில் ஸ்தானத்தை கேது அலங்கரிக்க, தொழில் அதிபதி சனி பார்க்க என அற்புதமான அமைப்பு இருக்கிறது. தொழில் வியாபாரம் ஏற்றம் தரும் வகையில் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்னைகள் தோன்றி மறையும்.

பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணித்தல் அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசிப் பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம். கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் ஏற்படும். குடும்பாதிபதி சுக்கிரன் ராசிநாதனுடன் இணைந்திருக்கிறார். ஆனால் குடும்பஸ்தானத்தை சனி பார்க்கிறார்.

குடும்பத்தாரை அனுசரித்துச் செல்வது நல்லது. வீண்பேச்சைத் தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. உறவினர்கள் நண்பர்களிடம் இருந்துவந்த பூசல்கள் அகலும்.

பெண்கள் எதைப்பற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக இருக்கும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம்.

எந்த காரியத்திலும் நிதானமாக ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையினர் எதிர்காலம் தொடர்பான அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும். மாணவர்கள் அனாவசியமாகக் கவலைப்படாமல் பாடங்களை நன்கு படிப்பது நல்லது.

பரிகாரம்- செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து கந்தர்சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்- செவ்வாய், புதன், வெள்ளி.

ரிஷபம்

கொடுத்த வாக்கை உயிருக்கு மேல் மதிக்கும் ரிஷப ராசியினரே நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் சுத்தமாக செய்ய விரும்புபவர்கள். இந்த காலகட்டத்தில் ராசிநாதனின் சுகஸ்தான சஞ்சாரத்தால் பணவரத்து திருப்தி தரும். அதேவேளையில் சுபச்செலவுகள் அதிகமாகும். ராசியை சனி பார்ப்பதால் திடீர் கோபம் ஏற்பட்டு அதனால் சண்டை ஏற்படலாம்.

எனவே மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வீண்பேச்சைக் குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் ஸ்தானத்தை செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியோர் பார்க்கிறார்கள். சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும்.

தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதோ நன்மை தரும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்னைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது உத்தமம்.

மேலதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். குடும்பத்தார் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டலாம். நிதானத்தை கடைப்பிடிப்பது வீண் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கைத் துணை ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

உறவினர்கள் நண்பர்கள் வகையில் பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. பெண்கள் வீண் பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை தரும். மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது. கலைத்துறையினர் மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை.

எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல் துறையினர் சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் நண்பர்களுடன் கவனமாகப் பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்- தினமும் சுக்கிர ஹோரையில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்னை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்- திங்கள், வெள்ளி.

மிதுனம்

எந்த விஷயத்திலும் அவசரம் காட்டாமல் நிதானத்தைக் கடைபிடிக்கும் மிதுன ராசியினரே இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் சுகஸ்தானத்தில் ஆட்சி உச்சம் பெறுகிறார். சுக ஸ்தானத்தில் சூரியனுடன் இணைந்து சஞ்சாரம் பெறுகிறார். ராசியை குரு பார்க்கிறார். அதிகம் முயற்சித்தால் எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.

வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது அடையும் அறிகுறி தெரியும். தொலைதூரத்துத் தகவல்கள் நன்மை தரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

தொழிற் ஸ்தானம் சூரியன், செவ்வாய், ராசிநாதன் புதன் ஆகியோரது பார்வைகளைப் பெற்றிருக்கிறது. தைரியத்துடன் பீடுநடை போட்டு, தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்களால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிட்டும். மேலதிகாரிகளின் ஆதரவும் உண்டு. முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். குடும்ப ஸ்தானத்தில் ராகு இருப்பதால் குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். ஆனால் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல்நலம் மேம்படும். சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் பெறுவீர்கள்.

விட்டுக்கொடுத்து நடப்பது நன்மை அளிக்கும். பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்லனவாக வரும். பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள்.

சமூகத்தில் அந்தஸ்து உயரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். செல்வாக்கு உயரும். பணவரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.

பரிகாரம்- புதன்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட எல்லா பிரச்னைகளும் தீரும். மனோதைரியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்- புதன், வெள்ளி.

கடகம்

சிறு விஷயத்திலும் உணர்வுப் பூர்வமாக செயல்படும் கடக ராசியினரே, நீங்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த காலகட்டத்தில் ராசியில் ராகு சஞ்சாரம் செய்கிறார். வாக்குஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும்.

செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கைக் கண்டு பொறாமை உண்டாகலாம் கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும். வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சுணக்க நிலை மாறும்.

டைபட்டிருந்த வீடு கட்டும் பணிகள் நிறைவடையும்.தொழிற் ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தொழிற் ஸ்தானாதிபதி செவ்வாய் தனஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார்.

தொழிற் வியாபாரப் பணிகள் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சிகள் வெற்றிபெறும். உத்தியோகஸ்தர்கள் வேலைப்பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள்.

பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த அதிகாரமிக்கபதவிகளைப் பெறுவீர்கள். குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு இருக்கிறார்கள். குடும்ப ஸ்தானத்தை சனி பார்க்கிறார். குடும்பாதிபதி சூரியன் தைரியஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். குடும்பத்தாருக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கடன் பிரச்னையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல் தீரும்.பெண்களுக்கு காரியதடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்குவன்மையால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள்.

கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ள சச்சரவு எதிலும் ஈடுபடாதீர்கள். கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் வெற்றி வாகை சூடமுடியும். ஆனாலும் உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். மாணவர்கள் படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

பரிகாரம்- திங்கட்கிழமை அன்று அருகிலிருக்கும் அம்மனை தரிசித்து நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட மன குழப்பம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்- ஞாயிறு, திங்கள், வியாழன்.

சிம்மம்

தனித்த தோரணையாலும் சாமர்த்தியத்தினாலும் வெற்றி பெறும் சிம்மராசியினரே, நீங்கள் எடுத்த முடிவில் மாறாத குணம் கொண்டவர். இந்த காலகட்டத்தில் ராசியில் செவ்வாய், ராகு சஞ்சாரம் செய்வதாலும் தனவாக்கு ஸ்தானத்தில் ராசிநாதனான சூரியனுடன் புதன் இருப்பதாலும் மிக நல்ல பலன்களை பெறப்போகிறீர்கள்.

காரியங்களில் இருந்துவந்த தேக்கநிலை அடியோடு மாறும், தடை தாமதம் நீங்கும். முயற்சிகளில் உடனடி பலன் காணமுடியும். எந்த வேலையிலும் சிறு முயற்சியாலேயே நன்மைகள் கிடைக்கும். சுகஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சனியின் பார்வை ராசியில் விழுவதால் வாகனங்களில் செல்லும்போதும், ஆயுதங்களைக் கையாளும்போதும் கவனம் தேவை. சகோதரர்கள் வழியில் ஏதேனும் பிரச்னை வரலாம்.

தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் ராசியில் சஞ்சாரம் செய்கிறார். தொழில் ஸ்தானத்தை சனி பார்க்கிறார். தொழில் வியாபாரத்தில் நிறைவான லாபம் வரும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

சக ஊழியர்கள் அனுசரனையாக நடந்துகொள்வார்கள். பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பிரயாணங்கள் செல்ல வேண்டி வரலாம். குடும்ப ஸ்தானத்தில் ராசிநாதன் சூரியன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பாகும். குடும்பாதிபதி புதன் ஆட்சி உச்சம் பெறுவதும் நன்மைதான். குடும்பத்தாரின் செயல்கள் நன்மை அளிக்கும். எந்த விஷயத்தையும் கணவன், மனைவி இருவரும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும்.

குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்டு நடப்பதால் சந்தோஷம் கொள்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும். பெண்கள் எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். பயணம் செய்யும்போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள்.

தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பணவரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களிடமிருந்து தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். மாணவர்களுக்கு எதிர்கால கல்வியைப் பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்- தினமும் மாலைவேளையில் சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்- ஞாயிறு, வியாழன்.

கன்னி

உழைப்பால் வாழ்வில வெற்றிக் கனியை ருசிக்கும் கன்னி ராசியினரே, சோம்பேறித்தனத்தை மட்டும் விட்டால் சாதனைகள் புரிவீர்கள். இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி புதன், ராசியில் ஆட்சி உச்சமாக இருப்பதோடு சூரியனுடன் இணைந்து சஞ்சாரம் செய்கிறார். காரியங்கள் வெற்றி தரும். பணவரத்து வழக்கத்தைவிட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றாற்போல் இருக்கும்.

பிறர் உதவி கிடைக்கும். சாதூர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவப் பூர்வமான அறிவுத் திறன் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் ஸ்தானாதிபதி புதன் ராசியில் ஆட்சி உச்சமாக ஜொலிக்கிறார். தொழில் ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பீர்கள். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும். பங்குதாரர்களிடம் இருந்துவந்த பிரச்னைகள் அகலும். உத்தியோகஸ்தர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்துசேரும். உங்கள் ஆலோசனைகள் மேலிடத்தால் அங்கீகரிக்கப்படும்.

குடும்பாதிபதி சுக்கிரன் விரைய ராசியில் இருந்தாலும், அவரின் பாத சஞ்சாரத்தின் மூலம் நல்ல பலன்களை பெற இயலும். குடும்ப ஸ்தானத்தை குரு அலங்கரிக்கிறார். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்யம் மேம்படும்.

பெண்கள் சாதூர்யமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள்மீது விழ, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள்.

அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயரும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்துச் சென்று சாதகமான பலன்களை அடையுங்கள்.

பரிகாரம்- துளசியை ஐயப்பனுக்கு அர்ப்பணித்து வணங்க கடன் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்- திங்கள், புதன், வியாழன்.

துலாம்

எந்த சூழ்நிலையிலும் அனைவரையும் சரிசமமாக நடத்தும் துலா ராசியினரே, நீங்கள் சேமிக்கும் பழக்கம் உடையவர்கள். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். கோபம் மறைந்து நிதானம் அதிகரிக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும்.

பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். தொழிற் ஸ்தானத்தை ராகு அலங்கரிக்க லாபஸ்தானத்தில் தனாதிபதி செவ்வாயுடன் இணைந்து ராசிநாதன் சுக்கிரன் வலு செய்கிறார். தொழில் வியாபாரத்தில், கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் மனநிறைவு காண்பீர்கள். தொழில் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சலுக்கு பிறகு கடினமான காரியம் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. மேலதிகாரிகளால் ஏற்பட்டிருந்த அழுத்தம் அகலும்.

குடும்ப ஸ்தானத்தில் சனி இருந்தாலும் அவர் தனது நட்சத்திர பாதசாரத்தின் மூலம் வலுவாக இருக்கிறார். வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி தரலாம், அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பது ஆறுதலை தரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கான தடைகள் அகலும். பெண்கள் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் சாதகமான பலன் தரும்.

அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேசவேண்டாம். ஆனால் தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை

மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்கள் சக மாணவர்களிடமும், நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுரியமாக பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றிபெற கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.

பரிகாரம்- வெள்ளிக்கிழமையில் பெருமாள் கோயிலில் தாயாருக்கு தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரத்து கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்- வியாழன், வெள்ளி.

விருச்சிகம்

தேனீக்கள் போல் எப்போது சுறுசுறுவென்று இருக்கும் விருச்சிக ராசியினரே, நீங்கள் எடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் செவ்வனே செய்து பாராட்டு பெறுபவர்கள். இந்த காலகட்டத்தில் ராசியில் சனி இருக்க, ராசிநாதன் செவ்வாய் லாபஸ்தானத்தில் இருக்கிறார். ராசியை ராசிநாதன் செவ்வாய் பார்க்க, ராசிநாதன் செவ்வாயை சனி பார்க்கிறார்.

ஏழரை சனியினுடைய காலகட்டத்தில் இருந்தாலும் ராசிநாதன் செவ்வாயின் இருப்பு பலவகையான யோகத்தை தரும். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களைத் தேடிவருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும். வழக்கு விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.

தொழிற் ஸ்தானாதிபதியான சூரியன் லாபஸ்தானத்தில் இருக்கிறார். லாபஸ்தானாதிபதி புதன் ஆட்சி உச்சம் பெற்று இருக்கிறார். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும்.

பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளால் நன்மை கிட்டும். சக ஊழியர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மகிழ்ச்சியைத் தரும். குடும்பாதிபதி குரு விரயஸ்தானத்தில் சஞ்சாரம் செய்தாலும் அவர் ராசிநாதன் செவ்வாயின் சார சஞ்சாரம் பெறுவதால் குடும்பத்தில் சந்தோஷமும் மனநிம்மதியும் இருக்கும். வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவது நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்கள் துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள்.

உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். சந்தோஷமான மனநிலை இருக்கும். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். கடமைகளை சுறுசுறுப்புடன் நிறைவேற்றுவீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும்.

கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.

பரிகாரம்- செவ்வாய்க்கிழமை அன்று மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்னைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்- ஞாயிறு, புதன், வெள்ளி.

தனுசு

நேர்மையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் தனுசு ராசியினரே, நீங்கள் தெய்வத்தை சாட்சியாக வைத்து காரியத்தை செய்பவர்கள். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் குரு லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனஸ்தானத்தில் கேது இருக்கிறார். பணவரத்து அதிகரிக்கும்.. எடுத்த காரியத்தை செய்துமுடிக்க இருந்த தாமதம் நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டியிருக்கும்.

எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம் கவனமாக செயல்படுவது நல்லது. தொழிற் ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சூரியன், தொழில் அதிபதி புதனுடன் இணைந்திருக்கிறார். தொழில் வியாபாரம் பரபரப்பாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும்.

புதிய ஆர்டர்கள் கிடைப்பது அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் இருந்த பிரச்னைகள் அகலும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேலதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து இனிப்பான செய்தியைப் பெறுவீர்கள். குடும்ப ஸ்தானத்தை சனி பார்க்கிறார்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனமகிழ்ச்சி ஏற்பட, அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது அவசியம். வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள் அனுசரணையுடன் இருப்பார்கள்.

பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டியிருக்கும். பணவரத்து தாமதப்படலாம். அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும்.

கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். அவற்றை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாகவே இருக்கும். உங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்- வியாழக்கிழமை அன்று சித்தர்களை வணங்கவர மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்- திங்கள், வியாழன், வெள்ளி.

மகரம்

எடுத்த காரியத்தை முடிக்காமல் அடுத்த காரியத்தை பார்க்காத மகர ராசியினரே, உங்களுக்கு அனைத்து விதங்களிலும் உதவி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சனி லாபஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். ராசிநாதன் சனி பாக்கியாதிபதி புதன் சாரத்தில் சஞ்சாரம் செய்வது ஆக்கபூர்வமான யோசனைகளை தரும். ராசியில் இருக்கும் கேதுவால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் ஸ்தானத்தில் குரு இருக்கிறார். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் கூடுதல் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள்.

தொழிலை விரிவுபடுத்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். பங்குதாரர்களிடம் இருந்த பிரச்னைகள் அகலும். உத்தியோகஸ்தர்களின் செயல்திறமை வெளிப்படும். அதனால் மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வரவேண்டிய பணம் வந்துசேரும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் நன்மைகள் கிடைக்கும். குடும்ப ஸ்தானத்தை செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியோர் பார்க்கிறார்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.

குடும்பத்தாரால் அதிக வருமானம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமுகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். தாய், தந்தையரின் உடல் நிலையில் கவனம் தேவை.

உறவினர்கள், நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பெண்கள் எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும். அரசியல்வாதிகளின் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.

உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். அடிக்கடி பயணம் செய்து, கட்சிப் பணிகளைத் தீவிரமாக ஆற்றி ஆதாயம் பார்ப்பீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட நிறைய வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்கு பணம் செலவு செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்- துர்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்- திங்கள், வெள்ளி.

கும்பம்

எந்த விஷயத்தையும் நிதானமாக அணுகும் கும்ப ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் இருக்க, ராசியை செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியோர் பார்க்கிறார்கள். வீண் பிரச்னைகள் அகலும். ஆனாலும் ராசியில் செவ்வாய் பார்வை பதிவதால் வாகனங்களில் செல்லும்போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களைக் கையாளும் போதும் கவனம் தேவை. சுபசெலவு அதிகரிக்கும்.

மனதில் உற்சாகம் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உருவாகும். முயற்சிகளில் ஏற்பட்டிருந்த தாமதப் போக்கு மாறும். தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் சனி இருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சுக்கிரனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார்.

தொழில், வியாபாரத்தில் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதம் ஆகலாம். உத்தியோகஸ்தர்கள் அலைச்சலையும், வேலைப்பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். மேலிடத்தினால் கொடுக்கப்பட்ட வேலைகளை சரிவர செய்து பாராட்டு பெறுவீர்கள்.

பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம். குடும்ப ஸ்தானாதிபதி குரு, ராசியைப் பார்க்க, குடும்பஸ்தானத்தை சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் பார்க்கிறார்கள். குடும்பத்தில் கருத்து வேற்றுமை நீங்கும். வீண் வாக்குவாதங்கள் அகலும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.

பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண்கவலை உண்டாகலாம். அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த முனைவீர்கள்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் உங்கள் சுய கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். மாணவர்கள் கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.

பரிகாரம்- சனிக்கிழமை அன்று எள் சாதத்தை சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைக்க கஷ்டங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்- ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

மீனம்

சுயநலமில்லாத வாழ்க்கையை தாரக மந்திரமாக கொண்ட மீன ராசியினரே, உங்களுக்கு பல வகைகளிலும் நண்பர்கள் இருப்பார்கள். பிறருக்கு அனைத்து நேரத்திலும் உதவி செய்வீர்கள். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் குரு அஷ்டமஸ்தானத்தில் மறைந்தாலும் மற்ற கிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு உதவிபுரியும் வகையில் சஞ்சாரம் செய்கிறார்கள்.

சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் ராசியைப் பார்க்கிறார்கள். செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். எதையும் எதிர்க்காமல் அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர் நலனுக்காக உழைக்க வேண்டியிருக்கும். சொத்து வாங்கும்போதும் விற்கும் போதும்

கவனமாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும்.

தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்த பிரச்னைகள் அகலும். உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்துடன் இருந்த கருத்து மோதல்கள் அகலும்.

குடும்ப ஸ்தானாதிபதி செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் குடும்பத்தாருடன் கோபப்படாமல் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல்நலத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். வீடு மனை இனங்களில் முன்னேற்றம் கிடைக்கும்.

பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அதனால் கோபப்படாமல் விவேகத்துடன் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மனங்களை வெல்லவும்.

கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

மாணவர்கள் கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.

பரிகாரம்- குலதெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தை போக்கும். செல்வம் செல்வாக்கு உயரச் செய்யும். தடை, தாமதம் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்- செவ்வாய், வியாழன், வெள்ளி.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்