ஐப்பசி மாத ராசிபலன்கள்! உங்கள் ராசிக்கு எப்படி?

Report Print Fathima Fathima in ஜோதிடம்
1923Shares
1923Shares
lankasrimarket.com

மேஷம்

திட்டமிட்டு முறையாக எதையும் செய்யும் நீங்கள், சில நேரங்களில் அதிரடியாக இறங்கி அசத்துவீர்கள். குருபகவான் இந்த மாதம் முழுக்க உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டேயிருப்பதால் உங்களின் முன்னேற்றத்திற்கு தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும்.

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுப நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். மனைவி வழியில் செல்வாக்குகூடும். 2ந் தேதி வரை சுக்கிரன் 6ல் மறைந்திருப்பதால் சின்ன சின்ன வாகன விபத்துகள் வரக் கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும். கணவன் மனைவிக்குள் சாதாரண விஷயத்திற்கெல்லாம் சண்டை வரும்.

மனைவிக்கு மாதவிடாய் கோளாறு வரக்கூடும். ஆனால், 3ந் தேதி முதல் சுக்கிரன் 7ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேருவீர்கள். மனைவியின் ஆரோக்யம் சீராகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள்.

அஷ்டமத்துச் சனி தொடர்ந்துக் கொண்டிருப்பதால் சின்னதாக ஒருவித சலிப்பு, கொஞ்சம் நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது. புதன் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்கள், புது நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதி சூரியன் 7ம் வீட்டில் நீச்சமாகி அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். கொஞ்சம் பிடிவாதமாக இருப்பார்கள். கூடுதல் மதிப்பெண் பெற்றால் நல்லது.

கூடுதலாக நேரம் ஒதுக்கி படித்தால் நல்லது என்றெல்லாம் கவலைப்படுவீர்கள். அவர்களின் உடல் நலமும் பாதிக்கும். உங்களது ராசிநாதன் செவ்வாய் 6ம் வீட்டில் இந்த மாதம் முழுக்க வலுப்பெற்று அமர்ந்திருப்பதால் பூமி, வீடு வாங்குவது சாதகமாக அமையும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம்.

கன்னிப் பெண்களே! உங்களுடைய திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்வீர்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிட்டும்.

மாணவமாணவிகளே! விளையாட்டைக் குறைத்து படிப்பில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள்.

வேலையாட்களை அவர்கள் போக்கிலே விட்டுப் பிடிப்பது நல்லது. பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். பங்குதாரர்கள் அவ்வப்போது முணுமுணுப்பார்கள். அவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம். இரும்பு, கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டு. உங்களை சிலர் ஓரம் கட்ட நினைப்பார்கள். உங்களின் கடின உழைப்பாலும், புத்திசாலித்தனத்தாலும் எல்லாவற்றையும் முறியடிப்பீர்கள்.

கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

விவசாயிகளே! அயராத உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். ஒருபக்கம் அலைகழிப்புகளும், டென்ஷனும் இருந்தாலும் மற்றொரு பக்கம் விடாமுயற்சியால் முன்னேறும் மாதமிது.

ராசியான நாட்கள்: அக்டோபர் 18,19,27,28,29,30,31 மற்றும் நவம்பர் 6,7,8,9,15,16

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 22,23,24ம் தேதி மாலை 5.41மணி வரை

பரிகாரம்: மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூர் சக்கரத்தாழ்வாரை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

ரிஷபம்

கொடுக்கும் குணம் கொண்ட நீங்கள், ஆபத்தான நேரத்தில் கூட அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயங்குவீர்கள். 2ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 5ம் வீட்டில் இருப்பதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிரபலங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

புதிதாக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். ஆனால், 3ந் தேதி முதல் சுக்கிரன் 6ல் சென்று மறைவதால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். 27ந் தேதி வரை உங்களின் பூர்வ புண்யாதிபதி புதனும் 6ம் வீட்டில் மறைந்திருப்பதால் பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள், சொந்தபந்தங்களுடன் மோதல்களெல்லாம் வந்துச் செல்லும். ஆனால், 28ந் தேதி முதல் புதன் சாதகமாவதால் உறவினர், நண்பர்களுடனான பகைமை நீங்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.

பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சுகாதிபதி சூரியனும் நீச்சமாகி 6ம் வீட்டில் மறைந்திருப்பதால் வழக்கில் வெற்றி கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. ஆனால், , 3ம் வீட்டிலேயே ராகுபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் பிரச்னைகள், சிக்கல்கள், உடல் நலக் குறைவுகள் என்று வந்தாலும் எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். செவ்வாய் 5ல் இந்த மாதம் முழுக்க 5ம் இடத்தில் நீடிப்பதால் உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தங்கள் வரும். சகட குரு நடப்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். . நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களின் தனித்ததன்மையையே பின்பற்றுவது நல்லது.

அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும்.

கன்னிப் பெண்களே! பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். வேஸ்புக், வாட்ஸ்அப்பில் முன்பின் தெரியாத நபர்களுடன் நட்பு பாராட்ட வேண்டாம்.

மாணவமாணவிகளே! அன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். பெரியளவில் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் நயமாகப் பேசுங்கள். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். வாகன உதிரி பாகங்கள், பூ, ஸ்டேஷனரி வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சக ஊழியர்களில் ஒருசாரர் உங்களுக்கு ஆதரவாகவும், ஒருசாரார் உங்களுக்கு எதிராகவும் செயல்பட வாய்ப்பிருக்கிறது. அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் வந்தாலும், வேறு நிறுவனத்தின் வேலையாக இருந்தாலும் இப்போது அதைப் பற்றி யோசிக்க வேண்டாம். இருக்கும் இடத்திலேயே தக்க வைத்துக் கொள்ளப்பாருங்கள்.

கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் குறையும். விளைச்சலைப் பெருக்க வேண்டுமே என்று கவலைப்படுவீர்கள். பொங்கி எழாமல் பொறுமை காக்க வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்: அக்டோபர் 20,23,30,31 மற்றும் நவம்பர் 1,2,3,4,8,9,11,12,13,14,15.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 24ம் தேதி மாலை 5.41மணி முதல் 25,26ம் தேதி வரை.

பரிகாரம்: திருநெல்வேலி நெல்லையப்பரை தரிசித்து வாருங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.

மிதுனம்

பிரதிபலன் பாராமல் உதவும் நீங்கள், அனைவரும் வாழ்வில் உயர வேண்டும் என்ற பொது நலத்துடன் சிந்திப்பீர்கள். ராஜ கிரகங்களான சனியும், குருவும் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். செவ்வாய் இந்த மாதம் முழுக்க கேந்திரபலம் பெற்று 4ம் வீட்டிலேயே நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். சகோதரங்கள் ஆதரிப்பார்கள் என்றாலும் சில நேரங்களில் போட்டி, பொறாமைகள் வரக்கூடும். 27ந் தேதி வரை ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் தோற்றப் பொலிவுக் கூடும். எதிலும் மகிழ்ச்சி உண்டு. ஆனால், 28ந் தேதி முதல் புதன் 6ல் சென்று மறைவதால் கழுத்து வலி, நரம்புச் சுளுக்கு, காய்ச்சல் வரக்கூடும்.

உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் நீண்ட நாட்களாக வீடு மாற நினைத்தவர்களுக்கு வீடு கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். லோன் கிடைக்கும். ப்ளான் அப்ரூவலாகும்.

சிலருக்கு அயல்நாட்டில் வேலைக் கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். சூரியன் 5ல் நிற்பதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். கெட்ட நண்பர்களின் சகவாசங்களை அறவே ஒதுக்கித் தள்ளுங்கள்.

ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெறாத ஃபைனான்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டாம். வட்டிக்கு ஆசைப்பட்டு இருப்பதை இழந்து விடாதீர்கள்.

அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப் பாருங்கள்.

கன்னிப் பெண்களே! கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உங்கள் கல்வித் தகுதிக்கேற்ப புதுவேலை அமையும்.

மாணவ, மாணவிகளே! போட்டித் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியரின் பாராட்டைப் பெறுவீர்கள். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். புது முதலீடு செய்வீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.

கடையை மாற்றி அழகுபடுத்துவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். கம்ப்யூட்டர், செல்போன், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் தேடிவரும். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சிலர் அலுவலகத்தை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள்.

கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

விவசாயிகளே! விளைச்சல் அதிகரிக்கும். பக்கத்து நிலத்தையும் வாங்குமளவிற்கு வருமானம் உயரும். மாறுபட்ட அணுகுமுறையாலும், சமயோஜித புத்தியாலும் சாதித்துக் காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்: அக்டோபர் 18,22,23,24,25,26 மற்றும் நவம்பர் 1,2,3,4,12,13,14,15.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 27,28,29ம் தேதி பிற்பகல் 3.36மணி வரை.

பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள பட்டீஸ்வரம் துர்க்கையை தரிசியுங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவிற்கு உதவுங்கள்.

கடகம்

கலைநயம் கொண்ட நீங்கள், சின்னச் சின்ன விஷயங்களையும் சிரத்தையுடன் செய்து முடிப்பவர்கள். இந்த மாதம் முழுக்க பிரபல யோகாதிபதியான செவ்வாய் சாதகமாக இருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும்.

உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆனால், சனி 5ல் நிற்பதால் அவர்களின் உடல்நலம் பாதிக்கும். பிள்ளைகள் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு உங்களை விட்டுப் பிரிய வேண்டியது வரும். சுக்கிரனும், புதனும் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.

உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ராசிக்குள் ராகு நிற்பதாலும், 7ல் கேது தொடர்வதாலும் டென்ஷன், ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். எனவே, பச்சை கீரை, காய்கறி வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இடைத்தரகர்களை நம்பி பணத்தை தந்து விட்டு ஏமாற வேண்டாம். சூரியன் நீச்சமானாலும் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டுவீர்கள். சிலர் வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைப்பீர்கள்.

4ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். உங்களுக்கும் கை, கால் வலிக்கும். சோர்வு, அலுப்பு வந்துபோகும். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும்.

அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.

கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள்.

மாணவ, மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். உங்களுடைய தனித்திறமைகளையும் வளர்த்துக் கொள்ளப் பாருங்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள்.

ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், தேங்காய் மண்டி மூலம் லாபம் வரும். பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். உத்யோகத்தில் கால, நேரம் பார்க்காமல் உழைத்தாலும் உயரதிகாரிகள் குறை கூறத்தான் செய்வார்கள். சக ஊழியர்களால் பிரச்னைகள் வெடிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை வந்து நீங்கும். எண்ணெய் வித்துக்களால் ஆதாயமடைவீர்கள். எதிர்ப்புகளையும், இடையூறுகளையும் சமாளித்து இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: அக்டோபர் 18,19,25,26 மற்றும் நவம்பர் 3,4,5,6,7,12,13,14,15,16.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 29ம் தேதி பிற்பகல் 3.36மணி முதல் 30,31ம் தேதி இரவு 11.35மணி வரை.

பரிகாரம்: கும்பகோணம், பேரளத்திற்கு அருகேயுள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகையை தரிசித்து வாருங்கள். மரக்கன்று நட்டு பராமரியுங்கள்.

சிம்மம்

பிரச்னைகளை கண்டு அலட்டிக் கொள்ளாத நீங்கள், எதுவாக இருந்தாலும் சந்திக்க தயங்க மாட்டீர்கள். கேது 6ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மனோபலம் அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிட்டும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமதம், மொழி, இனத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதனும், சுக்கிரனும் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

உறவினர்களின் அன்புத் தொல்லைகள் குறையும். தவணை முறையில் பணம் செலுத்தி சிலர் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் சூரியன் இந்த மாதம் முழுக்க நீச்சமாகி நிற்பதால் வேலைச்சுமை, அலைச்சல் இருக்கும்.

சின்ன காரியங்களைக் கூட அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். செலவினங்கள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்தப் பாருங்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் தோலில் நமைச்சல், அலர்ஜி, யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும்.

தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. வழக்கில் அலட்சியம் வேண்டாம். தாயார் கோபத்தில் ஏதேனும் பேசினாலும் அவரிடம் எதிர்விவாதம் செய்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் பிரபல யோகாதிபதி செவ்வாய் இந்த மாதம் முழுக்க 2ம் இடத்திலேயே தொடர்வதால் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் வேறு அர்த்தத்தில் புரிந்துக் கொள்வார்கள்.

உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். பல் வலி, பார்வைக் கோளாறு வரக்கூடும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். குரு 3ல் தொடர்வதால் யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.

அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும்.

கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.

மாணவமாணவிகளே! டி.வி. பார்ப்பது, வெளியூர் செல்வது என்றெல்லாம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காமல் படிப்பில் கவனத்தை திசை திருப்பப்பாருங்கள். வகுப்பறையில் ஆசிரியரிடம் சந்தேகங்களை கேட்க தயக்கம் வேண்டாம்.

வியாபாரத்தில் அதிரடிச் சலுகைகள் அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். பழைய பங்குதாரர்களிடம் கவனமாக பழகுங்கள். புதியவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ளாதீர்கள். ரியல் எஸ்டேட், மூலிகை, மர வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சின்னச் சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியது வரும். அதிகாரிகள் உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். அலுவலக விஷயங்களை வெளியிட வேண்டாம்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.

விவசாயிகளே! பழைய மோட்டார் பம்பு செட்டை மாற்றுவார்கள். நீர்பாசனப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். அனுபவ அறிவாலும், ஆன்மிக பலத்தாலும் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: அக்டோபர் 18,19,20,21,27,28,29,30 மற்றும் நவம்பர் 6,7,8,9,15,16.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 31ம் தேதி இரவு 11.35மணி முதல் நவம்பர் 1,2ம் தேதி வரை.

பரிகாரம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரரை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.

கன்னி

பணிவு என்பது தோற்றத்தில் இருந்தால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என விரும்புவீர்கள். சனிபகவான் 3ம் வீட்டிலேயே முகாமிட்டிருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும்.

இந்த மாதம் முழுக்க சூரியன் 2ம் வீட்டில் நீச்சமாகி நிற்பதால் பல் வலி, பார்வைக் கோளாறு, காது வலி, பணப்பற்றாக்குறை, பேச்சால் பிரச்னைகளெல்லாம் வரக்கூடும். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையெப்பமிட வேண்டாம். இரு சக்கர வாகனத்தை இயக்கும் போது தலைக்கவசம் அணிவது நல்லது. அரசுக் காரியங்கள் தாமதமாகி முடியும். உங்கள் ராசிநாதன் புதனும், பாக்யாதிபதி சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உற்சாகமடைவீர்கள்.

இங்கிதமாக, இதமாகப் பேசி பல முக்கிய காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். உங்களுடைய மாறுபட்ட அணுகுமுறை எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். சிலர் புதுவீடு மாறுவீர்கள்.

பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பிதுர்வழிச் சொத்துகள் வந்துசேரும். குருபகவான் 2ம் வீட்டிலேயே தொடர்வதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். வி.ஐ.பிகள் வரிசையில் இடம் பிடிப்பீர்கள். புதுவீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால், இந்த மாதம் முழுக்க செவ்வாய் ராசிக்குள்ளேயே நிற்பதால் சிறுசிறு நெருப்புக் காயங்கள், இரத்த சோகை, முன்கோபம், வீண் சச்சரவுகளெல்லாம் வரக்கூடும்.

உடன்பிறந்தவர்கள் உங்களை தவறாகப் புரிந்து கொள்வார்கள். சொத்து வாங்குவதாக இருந்தால் தாய்ப்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது.

அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டிப் பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும்.

மாணவ, மாணவிகளே! ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். இசை, ஓவியம், கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரம் செழிக்கும். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்று முடிப்பீர்கள். குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள்.

கமிஷன், புரோக்கரேஜ், ஆபரணங்கள் மூலம் லாபமடைவீர்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளே வியக்கும்படி சில முக்கிய காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். சக ஊழியர்களுக்காக பரிந்து பேசுவீர்கள். புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சம்பள உயர்வு உண்டு.

கலைத்துறையினரே! உங்கள் புகழ் கூடும். உங்களின் கலைத்திறன் வளரும்.

விவசாயிகளே! மகசூல் அதிகாரிப்பதால் சந்தோஷம் நிலைக்கும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். செவ்வாயால் சின்னச் சின்ன ஏமாற்றங்கள், தடங்கல்கள் இருந்தாலும், ராஜ கிரகங்களின் ஆதரவால் நினைத்ததை முடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: அக்டோபர் 21,23,24,26,28,30,31 மற்றும் நவம்பர் 1,2,8,9,10,11,13.

சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 3,4,5ம் தேதி காலை 8.46மணி வரை.

பரிகாரம்: திண்டிவனத்தில் அருளும் லட்சுமி நரசிம்மரை தரிசித்து வாருங்கள். கோயில் உழவாரப் பணிக்கு உதவிடுங்கள்.

துலாம்

எந்த ஊர் சென்றாலும் சொந்த ஊரை மறவாத நீங்கள் அவ்வப்போது கடந்தகால நினைவுகளில் மூழ்குவீர்கள். புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் பிரச்னைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கும் சக்தி உண்டாகும்.

பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். தந்தைவழியில் ஆதரவு பெருகும். உறவினர்களின் பாசமான விசாரிப்பால் ஆறுதலடைவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். வாகனம் பழுதாகி சரியாகும். என்றாலும் உங்கள் ராசியிலேயே சூரியன் நீச்சமாகி நிற்பதால் உணர்ச்சி வசப்படுவீர்கள். உடல் நிலை பாதிக்கும். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. அரசுக் காரியங்கள் இழுபறியாகும்.

ஜென்ம குரு நடைபெறுவதால் அஜீரணப் பிரச்னை, வயிற்று உபாதை, நீர் சுருக்கு, கணுக்கால் வலி வந்துபோகும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். சில நேரங்களில் தவறான மருந்து, மாத்திரைகளால் கூட பாதிப்புகள் வரக்கூடும். வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும்.

ராசிக்கு 12ல் செவ்வாய் நிற்பதால் எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் இருக்கும். அவ்வப்போது தூக்கம் கெடும். உடன்பிறந்தவர்களால் மனஉளைச்சல் ஏற்படும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வரக்கூடும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. பாதச் சனி தொடர்வதுடன், சர்ப்ப கிரகங்களும் சாதகமாக இல்லாததால் வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் நிதானம் அவசியம்.

வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும். பணம், நகை மற்றும் கல்யாண விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம். சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது.

அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள்.

கன்னிப் பெண்களே! பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவர்களிடம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது.

மாணவ மாணவிகளே! அவ்வப்போது மந்தம், மறதி வந்து நீங்கும். சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். புது முதலீடுகளோ, முயற்சிகளோ வேண்டாம். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளப் பாருங்கள். கமிஷன், புரோக்கரேஜ், டிரான்ஸ்போர்ட் வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களிடம் பணிந்து போங்கள்.

உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் யதார்த்தமாக பழகுவதாக நினைத்து உங்கள் குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வாய்ப்புக்காக கொஞ்சம் அலைய வேண்டி வரும்.

விவசாயிகளே! பக்கத்து நிலத்துக்காரருடன் வீண் தகராறு வேண்டாமே. வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியையாவது தந்துவிட வேண்டுமென முயற்சிப்பீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்: அக்டோபர் 23,24,25,26,28 மற்றும் நவம்பர் 1,2,3,4,10,11,12,13.

சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 5ம் தேதி காலை 8.46மணி முதல் 6,7ம் தேதி காலை 11.18மணி வரை.

பரிகாரம்: சீர்காழியில் அருளும் தோணியப்பரையும் சட்டநாதரையும் தரிசித்து வாருங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு இயன்ற வரை உதவிடுங்கள்.

விருச்சிகம்

இளகிய மனசுள்ள நீங்கள், காயப்பட்டு வருபவர்களின் புகலிடமாக இருப்பீர்கள். பிறரின் சுமையைப் பகிர்ந்து கொள்வீர்கள். உங்களின் ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் முழுக்க லாப வீட்டிலேயே வலுவாக நிற்பதால் செயற்கரிய காரியங்களையும் முடித்துக் காட்டி எல்லோராலும் பாராட்டப்படுவீர்கள்.

சவால்களை எளிதாக சமாளிப்பீர்கள். கம்பீரமாகப் பேசுவீர்கள். அதிகாரிகளின் அறிமுகம் கிட்டும். பணப்புழக்கம் அதிகமாகும். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித் தொகை கொடுத்து பத்திரப்பதிவு செய்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடிவரும். ஆனால், ராசிக்குள்ளேயே சனி நிற்பதால் அவ்வப்போது பெரிய நோய் இருப்பதைப்போல நீங்கள் உணருவீர்கள்.

நல்ல மருத்துவரை ஆலோசித்து மருந்து, மாத்திரை உட்கொள்வது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். கேது 3ம் வீட்டில் தொடர்வதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். பிரச்னைகள் வெகுவாகக் குறையும். வீடு, மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.

ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் உதவிகள் உண்டு. சப்தமாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவி வழியில் மரியாதை கூடும். புது வேலை கிடைக்கும். ஜீவனாதிபதியான சூரியன் இந்த மாதம் முழுக்க நீச்சமாகி 12ல் மறைந்திருப்பதால் வேலைச்சுமை இருக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். தூக்கம் குறையும். புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் திட்டமிட்டபடி பயணங்கள் அமையும்.

பேசாமலிருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். சுபச் செலவுகள் அதிகமாகும். குருபகவான் 12ல் மறைந்திருப்பதால் யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். யாராக இருந்தாலும் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. ஆன்மிக தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

அரசியல்வாதிகளே! சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். பள்ளி, கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள்.

மாணவ மாணவிகளே! தேர்வில் வெற்றி பெறுவீர்கள். வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள்.

வியாபாரம் ஒருபுறமிருந்தாலும் ராஜதந்திரத்தால் லாபத்தை பெருக்குவீர்கள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

இரும்பு, பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டியது வரும். அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள்.

கலைத்துறையினரே! உங்களின் மாறுபட்ட படைப்புகள் பலராலும் பாராட்டிப் பேசப்படும்.

விவசாயிகளே! தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். விவேகமான முடிவுகளால் பழைய பிரச்னைகள், சிக்கல்கள் தீரும் மாதமிது.

ராசியான தேதிகள்: அக்டோபர் 18,19,27,28,29,30 மற்றும் நவம்பர் 3,4,5,6,12,13,14,15.

சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 7ம் தேதி காலை 11.18மணி முதல் 8,9ம் தேதி பிற்பகல் 1.42மணி வரை.

பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருபுவனம் சரபேஸ்வரரை தரிசித்து வாருங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று உதவுங்கள்.

தனுசு

தொலைதூரச் சிந்தனையுடைய நீங்கள், நாளை நமதே என்ற நம்பிக்கையுடன் எதையும் செய்பவர்கள். இந்த மாதம் பிறக்கும்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சூரியன், புதன், குரு போன்ற முக்கிய கிரகங்கள் அமர்ந்திருப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கி லோன் கிடைக்கும்.

உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வெளிநாட்டிற்குச் செல்ல விசா கிடைக்கும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாயும் இந்த மாதம் முழுக்க 10ம் இடத்திலேயே தொடர்வதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.

முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருந்த நிலை மாறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அவர்களின் உடல் நிலை சீராகும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் உங்களுக்கு சாதகமாக முடியும். உடன்பிறந்தவர்கள் வலிய வந்து உதவுவார்கள்.

அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் சிலருக்கு வேலை அமையும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய சில உதவிகள் கிடைக்கும்.

வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் அவ்வப்போது வருங்காலத்தைப் பற்றி ஒருபயம் இருக்கும். யாரையும் நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். சில முக்கிய விஷயங்களுக்கெல்லாம் நீங்களே சென்று வருவது நல்லது. காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. சின்னச் சின்ன ஏமாற்றங்கள் வரக்கூடும்.

அரசியல்வாதிகளே! உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். ஆடை, அணிகலன் சேர்க்கை உண்டு. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் கனவுகளை நனவாக்குவீர்கள்.

மாணவ மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள்.

வியாபாரத்தில் புதுத் தொடர்புகள் கிடைக்கும். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அதிக சம்பளமும், சலுகைகளும் தந்து வேலையாட்களை உற்சாகப்படுத்துவீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள்.

உணவு விடுதி, ரியல் எஸ்டேட், எண்டர்பிரைசஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உயரதிகாரிகளின் மனநிலை தெரிந்து செயல்படத் தொடங்குவீர்கள்.

கலைத்துறையினரே! புகழடைவீர்கள். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பெருமைப்படும்படி நடந்துக் கொள்வீர்கள்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, வண்டுக்கடியிலிருந்து பயிரை காப்பீர்கள். அரசாங்க சலுகைகள் கிடைக்கும். தண்ணீர் வரத்து அதிகரிக்கும். செல்லும் இடமெல்லாம் சிறப்பு பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: அக்டோபர் 18,19,20,28,29,30 மற்றும் நவம்பர் 5,6,7,8,15,16.

சந்திராஷ்டம தினங்கள்; நவம்பர் 9ம் தேதி பிற்பகல் 1.42மணி முதல் 10,11ம் தேதி மாலை 4.46மணி வரை.

பரிகாரம்: வேதாரண்யத்திற்கு அருகேயுள்ள தகட்டூர் காலபைரவரை தரிசித்து வாருங்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு உதவுங்கள்.

மகரம்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத நீங்கள், அநியாயங்களைத் தயங்காமல் தட்டிக் கேட்பீர்கள். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் யோகாதிபதி சுக்கிரன் சென்றுக் கொண்டிருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். கணவன் மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும்.

எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி பணத்தட்டுப்பாடு இருந்ததே! அந்த பற்றாக்குறை குறைந்து பணப்புழக்கமும் அதிகரிக்கும். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், மைக்ரே ஓவனை மாற்றுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கோவில் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். சூரியன், புதன் சாதகமாக இருப்பதால் புதுவேலை கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

பதவிகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். கடந்தகால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள்.

தந்தையின் உடல் நலம் சீராகும். அவருடன் இருந்த மோதல்கள் விலகும். அரசுக் காரியங்கள் சாதகமாக முடியும். ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டிலேயே வலுவாக தொடர்வதால் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிட்டும். தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வேற்றுமதத்தவர்கள் ஆதாயமடைவீர்கள்.

வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. செவ்வாயும் சாதகமாக இருப்பதால் பழைய மனையை விற்று சிலர் புதிதாக வீட்டு மனை வாங்குவார்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். குரு 10ம் வீட்டிலும், ராசிக்குள் கேதுவும், 7ல் ராகுவும் தொடர்வதால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டியது வரும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். சின்னச் சின்ன அவமரியாதை சம்பவங்கள் நிகழக்கூடும்.

அரசியல்வாதிகளே! கட்சி மூத்த தலைவர் உங்களிடம் சில ரகசியங்களை பகிர்ந்து கொள்வார்.

கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். தடைபட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவ மாணவிகளே! விடைகளுக்கான கீஆன்சரை ஒருமுறைக்கு பலமுறை சொல்லிப் பார்ப்பது, எழுதிப் பார்ப்பது நல்லது. கணிதம், அறிவியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பெற்றோர் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.

வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. வானொலி விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரங்களால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்யப் பாருங்கள். கமிஷன், புரோக்கரேஜ், மருந்து, உணவு, ரசாயன வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களால் மறைமுக எதிர்ப்புகள் வந்துபோகும்.

கலைத்துறையினரே! பழைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

விவசாயிகளே! நவீனரக உரங்களால் மகசூல் பெருகும். நிலத்தகராறு தீரும். நெல், கடலை வகைகளால் ஆதாயமடைவீர்கள். எதிர்பார்ப்புகளில் ஒரு சில நிறைவேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: அக்டோபர் 21,22,23,24,30 மற்றும் நவம்பர் 1,2,3,4,8,9,10.

சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 11ம் தேதி மாலை 4.46மணி முதல் 12,13ம் தேதி இரவு 9.26மணி வரை.

பரிகாரம்: திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் ஜீவசமாதிக்குச் சென்று வாருங்கள். கிரிவலப் பாதையில் வசிக்கும் துறவிகளுக்கு இயன்றளவு உதவுங்கள்.

கும்பம்

யாரையும் சார்ந்திருக்காமல் சுதந்திரமான வாழ்வை விரும்பும் நீங்கள், அவ்வப்போது ஆறாவது அறிவுக்கு வேலை தருவீர்கள். ராகு 6ம் வீட்டிலும், குருபகவான் 9ம் இடத்திலும் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

சூரியன் 9ம் வீட்டில் நிற்பதால் தந்தைக்கு வேலைச்சுமை, நெஞ்சு வலி, அவரால் நிம்மதியின்மையெல்லாம் ஏற்படக்கூடும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும். யோகாதிபதியான சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமொழிப் மொழிப் பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். வீடு கட்டுவதற்கு அரசு அனுமதி கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். இந்த மாதம் முழுக்க செவ்வாய் 8ல் மறைந்திருப்பதால் முன்கோபம், வீண் டென்ஷன், காரியத் தடைகளெல்லாம் வரக்கூடும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையக்கூடும். இரத்த அழுத்தமும் அதிகமாகும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருக்கும். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது போன்ற குழப்பங்கள் வரும். எனவே கொஞ்சம் சுற்று வட்டாரத்தைப் புரிந்துக் கொண்டு இடம், பொருள் ஏவல் அறிந்து பேசுவது, பழகுவது நல்லது.

தூக்கமில்லாமல் போகும். பழைய பிரச்னைகள் இப்போது விஸ்வரூபம் எடுத்துவிடுமோ என்ற அச்சம் இருக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துபோகும் .

அரசியல்வாதிகளே! சிலர் உங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள்.

கன்னிப் பெண்களே! காதல் கனியும். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். போலியாகப் பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள்.

மாணவமாணவிகளே! முன்னேற்றம் உண்டு. ஸ்பெஷல் கோச்சிங்க் கிளாசஸ் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் அதிரடிச் சலுகைகளால் லாபமடைவீர்கள். கடையை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். பங்குதாரர்கள் அதிருப்தி அடைவார்கள். வாடிக்கையாளர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

ஏற்றுமதி இறக்குமதி, அழகு சாதன நிலையம், ஸ்பெக்குலேஷன், மர வகைகளால் அதிக லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள், முதலீடுகளை யோசித்து செய்வது நல்லது. உத்யோகஸ்தானாதிபதி செவ்வாய் 8ல் மறைந்திருப்பதால் உத்யோகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். அதிகாரிகள் உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

கலைத்துறையினரே! திரையிடாமல் தடைபட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளிவரும்.

விவசாயிகளே! வற்றிய கிணற்றில் நீர் ஊற செலவு செய்து கொஞ்சம் தூர் வார்வீர்கள். மாற்றுப் பயிரிட்டு வருமானத்தை பெருக்குவீர்கள். புது நிலம் கிரயம் செய்வீர்கள். மன இறுக்கத்தையும், செலவுகளையும் தந்தாலும் வளைந்து கொடுத்துப் போவதால் சாதிக்க வைக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: அக்டோபர் 23,24,25,26 மற்றும் நவம்பர் 1,2,3,4,10,11,12,13& காஞ்சி காமாட்சி.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 18,19ம் தேதி இரவு 8.51மணி வரை மற்றும் நவம்பர் 13ம் தேதி இரவு 9.26மணி முதல் 14,15ம் தேதி வரை.

பரிகாரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.

மீனம்

பெருந்தன்மையும், சகிப்புத் தன்மையும் கொண்ட நீங்கள், இதமான பேச்சால் எல்லோரையும் கவர்ந்திழுப்பவர்கள். சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். ஆறுக்குரிய சூரியன் 8ல் அமர்ந்ததால் மதிப்பு கூடும்.

அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். பலவீனத்தால் நெஞ்சு வலிக்கும். பயந்து விடாதீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.உறவினர்களின் அன்புத்தொல்லைகள் குறையும்.

உங்களுக்கு உதவ வேண்டிய உங்கள் ராசிநாதன் குரு 8ம் இடத்தில் மறைந்துக் கிடப்பதால் எந்த வேலையாக இருந்தாலும் இழுபறியாகி முடியும். நீங்கள் எது பேசினாலும் சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். நீங்களும் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு சில வார்த்தைகளை சொல்லி விடுவீர்கள்.

பிரச்னைகள் வந்துவிடுமோ என்ற பயம் வரக்கூடும். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். ஒரே நாளிலேயே வெகுதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. லாப வீட்டில் கேது தொடர்வதால் ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

வழக்கில் திருப்பம் ஏற்படும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். செவ்வாய் 7ல் நிற்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, சளித் தொந்தரவு, மனைவிக்கு அடிவயிற்றில் வலி, முதுகுத் தண்டில் வலி வந்துபோகும்.

அரசியல்வாதிகளே! மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். பேசாமல் இருந்து வந்த தோழி பேசுவார். உயர்கல்வியை போராடி முடிப்பீர்கள்.

மாணவமாணவிகளே! பழைய நண்பர்களுடன் இனிமையான அனுபவங்களை பகிர்ந்து கொள்வீர்கள். மொழிப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள்.

வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிக்கத்தான் செய்வார்கள்.

வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் விதமாக கடையை விரிவுபடுத்தி நவீன மயமாக்குவீர்கள். இரும்பு, சிமெண்ட், எண்ணெய் வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போங்கள். உத்யோகத்தில் சிலர் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். மற்றவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.

கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

விவசாயிகளே! நிலப் பிரச்சனைகளை பெரிது படுத்தாமல் சுமுகமாக பேசித் தீர்ப்பது நல்லது. எதிர்பார்த்த சலுகைகள் கொஞ்சம் தாமதமாக கிடைக்கும். நாலும் தெரிந்த நல்லவர்களின் வழிகாட்டுதலால் இலக்கை தொடும் மாதமிது.

ராசியான தேதிகள்: அக்டோபர் 18,25,26,27,28 மற்றும் நவம்பர் 3,4,6,8,9,12,13,14.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 19ம் தேதி இரவு 8.51மணி முதல் 20,21ம் தேதி வரை மற்றும் நவம்பர் 16ம் தேதி வரை.

பரிகாரம்: திருத்தணி முருகப் பெருமானை தரிசித்து வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியரை சந்தித்து இயன்றளவு உதவுங்கள்.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்