மார்கழி மாத ராசிபலன்கள்

Report Print Fathima Fathima in ஜோதிடம்
344Shares
344Shares
ibctamil.com
மேஷம்

ராசிநாதன் செவ்வாயின் நிலை உங்கள் சிந்தனையின் தீவிரத்தை அதிகரிக்க செய்யும். எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்களுக்கு முன்பாக யோசித்து விரைவாக செயல்படுவீர்கள். ஜென்ம ராசியின் மீது குரு பகவான் தன் பார்வையை செலுத்துவதால் செய்யும் செயலில் தவறு ஏதும் நிகழாது. அதே நேரத்தில் மனதில் நிம்மதியற்ற சூழல் உருவாகக் கூடும். பேசும் வார்த்தைகளில் எதிர்மறையான கருத்துக்கள் வெளிப்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவி வரும். டிசம்பர் மாதத்தின் இறுதியில் எதிர்பாராத வகையில் தனலாபம் கிட்டும். சேமிப்புகள் உயர்வதற்கான வாய்ப்பு உண்டு.

நெடு நாட்களாக இழுபறியில் இருந்து வரும் சொத்துப் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் வீண் அலைச்சலை தவிர்க்கும் வகையில் பயனுள்ளதாக அமையும். மாணவர்களின் கல்வி நிலை முன்னேற்றம் காணும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு அதற்கான ஏற்பாடுகளில் இறங்குவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். தொலைதூரப் பிரயாணத்தின்போது கௌரவம் மிக்க மனிதர் ஒருவரது தொடர்பு கிட்டும். பிள்ளைகளின் செயல்களில் முன்னோர்களின் சாயலைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள்.

வாழ்க்கைத்துணையின் பணிகளுக்குத் துணைநிற்க வேண்டியிருக்கும். கலைத்துறையினர் நண்பர்களால் கூடுதல் செலவினத்தினை சந்திக்க நேரலாம். தொழில்முறையில் டிசம்பர் மாதத்தின் பிற்பாதியில் அற்புதமான முன்னேற்றத்தினை காண உள்ளீர்கள். வியாபாரிகள் ஜனவரி முதல் நல்ல தனலாபத்தினை காண்பார்கள். அரசுத்துறையைச் சார்ந்தவர்கள், அலுவலகப் பணியாளர்கள் உயரதிகாரிகளின் நன்மதிப்பினைப் பெறுவார்கள். நற்பலனை அனுபவிக்கும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 16, 17, ஜனவரி 12, 13.

பரிகாரம்: ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை சதா உச்சரித்து வாருங்கள்.

ரிஷபம்

இந்த மார்கழி மாதத்தின் துவக்கத்தில் நன்மையையும், பிற்பாதியில் சற்று சிரமத்தினையும் காண உள்ளீர்கள். தற்போது நிலவி வரும் கிரஹ சூழ்நிலையின்படி நிதானித்துச் செயல்பட வேண்டியது அவசியம். மனதில் குழப்ப சிந்தனைகள் அதிகரிக்கும். ஒவ்வொரு செயலையும் அலசி ஆராய்ந்து செய்வது நல்லது. தனாதிபதியின் சாதகமற்ற நிலை ஜனவரி மாதத்தின் துவக்கத்தில் கூடுதல் செலவினங்களை உருவாக்கக்கூடும். தவிர்க்கமுடியாத கௌரவச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி, மாறி இடம்பிடிக்கும். பிரச்சினைக்குரிய நேரத்தில் அதிகம் பேசாது அமைதி காத்து வருவதால் உங்கள் தரப்பு நியாயங்கள் வெளிப்படாமல் போகலாம். நீங்கள் நல்லது என்று நினைத்து செய்யும் காரியங்கள் அடுத்தவர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகும்.

உடன்பிறந்த சகோதரிக்கு உதவி செய்ய நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் பயன் தரும் வகையில் அமையும். அநாவசியமான பிரயாணங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். வண்டி, வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கலாம். மாணவர்களின் கல்வி நிலை முன்னேற்றம் கண்டு வரும். உறவினர்களோடு வீண் விவாதத்தினால் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். பிள்ளைகளால் சற்று கூடுதல் செலவுகளைச் சந்திக்க நேரலாம். கொலஸ்ட்ரால் பிரச்சினையால் அவதிப்படும் வாய்ப்பு உண்டென்பதால் எண்ணெய் பண்டங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

உறவினர்களுக்கு கடன் விவகாரங்களில் துணை நிற்பதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையுடன் இருந்து வரும் கருத்து வேறுபாடுகள் மாதத்தின் இறுதியில் நீங்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போய் கலைத்துறையினர் பணப்பிரச்சினையால் அவதிப்படும் வாய்ப்பு உருவாகலாம். ஆன்மிகப் பிரயாணங்கள், பெரிய மனிதர்களுடனான சந்திப்புகள் மன நிம்மதியைத் தரும். 11ம் தேதி முதல் தொழில்முறையில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரிகள் போட்டியான சூழலைச் சந்திக்க நேர்ந்தாலும் வெற்றி காண்பார்கள். சரிசம பலன்களை அனுபவிக்கும் நேரமிது.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 18, 19, 20.

பரிகாரம்: நாள்தோறும் அதிகாலையில் அபிராமி அந்தாதி படித்து வரவும்.

மிதுனம்

இந்த மாதத்திய கிரஹ அமைப்பின்படி சற்று சிரமத்தினைக் காண்பீர்கள். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க அடுத்தவர்களின் துணையோடு செயல்பட வேண்டியிருக்கும். சரியான மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் உதவியோடு வெற்றி கண்டு வருவீர்கள். பண வரவு ஒருபுறம் இருந்தாலும்

மறுபுறம் செலவுகள் காத்து நிற்கும். டிசம்பர் மாதத்தின் இறுதியில் எதிர்பாராத செலவுகளால் சற்று சிரமப்பட நேரிடலாம். கையிருப்பு கரையும் வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்களினால் ஒரு சில இழப்புகளை சந்திக்க நேரிடும்.

எந்த ஒரு சூழலையும் மிகுதியான மன உறுதியோடு சமாளித்து வருவீர்கள். மாணவர்கள் கூட்டுப்பயிற்சியின் மூலம் தங்கள் கல்வி நிலையில் உயர்வினைக் காண்பார்கள். உறவினர்களின் வருகை குடும்பத்தில் சலசலப்பைத் தோற்றுவிக்கலாம். மாதத்தின் பிற்பாதியில் வண்டி, வாகனங்களால் செலவினங்கள் உண்டாகக்கூடும். பிரயாணத்தின் போது பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உண்டென்பதால் எச்சரிக்கை தேவை. பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. கடன்பிரச்சினைகள் சற்றே தலையெடுக்கும். மறைமுக எதிரிகளால் ஒரு சில தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய் துணை நிற்பார். கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கக்கூடும். கலைத்துறையினர் விருந்து, கேளிக்கை, கொண்டாட்டங்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் பங்கேற்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். உத்யோகஸ்தர்கள் தங்கள் பணியில் நற்பெயர் காண்பார்கள். சுயதொழில் செய்வோர் தொழில்முறையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருவார்கள். சராசரி பலன்களை அனுபவிக்கும் மாதமாக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 21, 22.

பரிகாரம்: நடராஜப்பெருமானை வழிபட்டு வாருங்கள்.

கடகம்

இந்த மாதத்தில் ஆறாம் இடத்தின் வலிமையால் சற்று போராட்டமான சூழலை எதிர்கொள்ளும் நீங்கள், சிறப்பான வெற்றியினையும் காண்பீர்கள். நினைத்த காரியங்களில் நண்பர்களின் துணையோடு வெற்றி காணும் சூழல் உருவாகும். பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான சூழலைச் சந்திக்க நேர்ந்தாலும், தேவைக்கேற்ப பொருள் வரவு தடையில்லாமல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் சலசலப்பான சூழ்நிலை நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் உங்களையும் அறியாமல் அடுத்தவர் மனம் புண்படும்படியான கருத்துக்கள் வெளிப்படலாம். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. எந்த ஒரு காரியத்திற்கும் இடைத்தரகர்களை நம்பாது நேரடியாகச் செயலில் இறங்க வேண்டியது அவசியமாகிறது.

மிகவும் நம்பியிருந்த நபர் ஒருவர் உங்களுக்கு எதிராகச் செயல்படக்கூடும். மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பார்கள். டிசம்பர் மாதத்தின் இறுதியில் தொலைதூரப்பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. உறவினர்களால் ஒரு சில தர்ம சங்கடங்களை சந்திக்க நேரிடும். முக்கியமான பணிகளில் பிள்ளைகளின் ஆலோசனை உங்களுக்குத் துணை நிற்கும். சிந்தனையில் ஒருவித குழப்பமான சூழலை உணர்வீர்கள். அதிகப்படியான டென்ஷனின் காரணமாக உடல்நிலையில் சிரமத்தினை சந்திக்க நேரலாம். அடுத்தவர்கள் பிரச்சினையில் அதிகம் தலையிடாமல் இருக்க வேண்டியது அவசியம்.

வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு துணை நிற்பார். அவரது பெயரில் புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டு. ஜனவரி மாதத்தின் துவக்கத்தில் உண்டாகும் பெரிய மனிதர்களுடனான சந்திப்பு கலைத்துறையினரின் கௌரவத்தினை உயர்த்தும். ஆன்மிக விஷயங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கக் கூடும். தொழில்முறையில் நேர்மையான செயல்பாடுகள் நற்பெயரைப் பெற்றுத் தரும். சுயதொழில் செய்வோர் கூடுதல் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். சராசரியான பலன்களைத் தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 23, 24.

பரிகாரம்: வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் தரிசனம் நன்மை தரும்.

சிம்மம்

இந்த மாதத்திய கிரக நிலை உங்கள் செயல்வேகத்தினை அதிகரிக்கச் செய்கிறது. செய்ய வேண்டிய பணிகளை காலதாமதம் செய்யாமல் உடனடியாக செயல்படுத்தி வரும் நீங்கள் டிசம்பர் மாதத்தின் இறுதியில் ஒரு சில தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் செயல்களில் வேகத்தோடு விவேகமும் இணைய வேண்டியது அவசியம். இக்கட்டான சூழலில் உங்களது விவேகமான செயல்பாடுகள் பிரச்சினையின் தீவிரத்தைக் குறைக்கும். திறமையான பேச்சுக்கள் நற்பெயரைப் பெற்றுத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். பொருளாதார ரீதியான பிரச்சினைகள் தலைதூக்கலாம். உடன்பிறந்தோருக்கு உதவப்போய் ஒரு சில சங்கடங்களை சந்திக்க நேரிடும்.

தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் நேரத்தில் பழுதாகியும், இரவு நேரத்தில் பயன் தரும் வகையிலும் அமையும். இந்த மாதத்தில் அவ்வப்போது சிறு சிறு பிரயாணங்களை எதிர்கொள்ள நேரிடும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் நல்லதொரு முன்னேற்றம் காண்பார்கள். பிள்ளைகளின் வளர்ச்சியை எண்ணி பெருமிதம் கொள்வீர்கள். அவர்களின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். ஜனவரி மாதத்தில் வீண் வம்பு வழக்குகளைச் சந்திக்க நேரலாம். அந்நியப் பெண்களிடம் எச்சரிக்கை அவசியம்.

பொறாமைக்காரர்களால் ஒரு சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அடுத்தவர்களின் பிரச்சினையில் அதிகம் தலையிடாமல் இருப்பது நல்லது. ரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் அதிக அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். கலைத்துறையினருக்கு தொழில்முறையில் இருந்து வரும் போட்டியான சூழல் மாதத்தின் பிற்பாதியில் காணாமல் போகும். கூட்டுத்தொழில் சிறப்பான லாபத்தினைத் தரும். உத்யோகஸ்தர்கள் சுகமான சூழலை உணர்வார்கள். துணிவுடன் செயல்பட்டு நற்பெயர் காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 25, 26, 27.

பரிகாரம்: தினமும் அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சி பாடல்களைக் கொண்டு எம்பெருமானை வழிபட்டு வாருங்கள்.

கன்னி

இந்த மார்கழியின் துவக்கம் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது. தர்மசிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நேர்மையான செயல்பாடுகளின் மூலம் அனைவரின் கவனத்தையும் உங்கள் மீது கொண்டு வரச் செய்வீர்கள். தனிப்பட்ட முறையில் கௌரவம் உயருகின்ற வகையில் உங்கள் செயல்பாடுகள் அமையும். செய்ய வேண்டிய கடமையைத் தவறாது செய்து முடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருவீர்கள். பேசும் வார்த்தைகளில் ஸ்திரத்தன்மை காணப்படும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிக சிரத்தையுடன் செயல்பட்டு வருவீர்கள்.

குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவி வரும். பொருளாதார நிலை டிசம்பர் மாதத்தின் இறுதியில் கணிசமான அளவில் உயரத்துவங்கும். உடன்பிறந்த சகோதரிக்கு உதவி செய்ய நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் போன்றவற்றால் ஆதாயம் காண்பீர்கள். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பான முன்னேற்றம் காணும். உறவினர்களின் வருகையால் மனதில் மகிழ்ச்சி காண்பீர்கள். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு அமையும்.

சிந்தனையில் இருந்து வரும் தெளிவான கருத்துக்கள் அடுத்தவர்களுக்கு ஆலோசனையைக் கூறச் செய்யும். ஓய்வில்லாத உழைப்பு உடல்நிலையில் சிறிது சிரமத்தினை ஏற்படுத்தக்கூடும்.வாழ்க்கைத்துணையின் விருப்பத்தினை நிறைவேற்றி வைப்பதற்கான வாய்ப்புகள் கிட்டும். அநாவசியச் செலவுகள் முற்றிலும் குறையும். தகப்பனார் வழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். தொழில்முறையில் ஏற்றமிகு சூழலைக் கண்டு வருவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்து காத்திருந்த புதிய வாய்ப்பு வந்து சேரும். மனதில் முழுமையான திருப்தியை உருவாக்கும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 28, 29.

பரிகாரம்: நவகிரக குரு பகவானுக்கு வடக்கு முகமாக நெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள்.

துலாம்

ஜென்ம ராசியில் செவ்வாய் மற்றும் குருவின் இணைவோடு மார்கழி மாதத்தில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்கு இந்த மாதத்திய கிரஹ நிலை நற்பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது. ஏழரைச் சனியின் தாக்கத்திலிருந்து விடுபட்டிருக்கும் நீங்கள் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தினைக் காண உள்ளீர்கள். நெடுங்காலமாக இருந்து வந்த குடும்பப் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். பேசும் வார்த்தைகளில் அனுபவத்தின் காரணமாக நிதானம் வெளிப்படும். ஆயினும் சொல்ல வேண்டிய கருத்துக்களை ஆணித்தரமாகத் தெரிவித்து நற்பெயர் காண்பீர்கள்.

ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரம் சுகபோகங்களை அனுபவிப்பதில் துணை நிற்கும். குடும்பத்தினரின் மனமகிழ்ச்சிக்காக கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். புதிய ஃபர்னிச்சர் சாமான்கள் சேரும். டிசம்பர் மாத இறுதியில் உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நேரடியாகச் செயலில் இறங்குவது நல்லது. மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பார்கள். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆகியவற்றில் ஆதாயம் காண்பீர்கள்.

பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய நேரிடும். மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் சம்பவங்களை சந்திப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் அவ்வப்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். அவரது பெயரில் இருந்து வரும் சேமிப்பினை உயர்த்தும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பிதுரார்ஜித சொத்துக்களில் இருந்து வரும் பிரச்சினைகள் அகலும். தொழில்முறையில் தொடர்வெற்றி சாத்தியமாகி வரும். கலைத்துறையினர் பேச்சுத்திறமையால் தங்கள் பணிகளை சாதித்துக் கொள்வார்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்தினைப் பெறுவர். நற்பலன்களை அனுபவிக்கத் துவங்கும் மாதமாக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 30, 31.

பரிகாரம்: செவ்வாய்தோறும் சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில் அன்னதானம் செய்யுங்கள்.

விருச்சிகம்

ஏழரைச் சனியின் பலன்களை அனுபவித்து வரும் நீங்கள் மற்ற கிரஹங்களில் சாதகமான சஞ்சார நிலையினால் இந்த மாதத்தில் நற்பலன்களை காண உள்ளீர்கள். ராசிநாதன் செவ்வாயின் பன்னிரண்டாம் இடத்து சஞ்சாரம் சற்று அலைச்சலைத் தரும். உங்களது உண்மையான உழைப்பின் பயனைப் பெற சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஜென்ம ராசியில் அமர்ந்திருக்கும் புதன் உங்களை நிதானித்துச் செயல்பட வைப்பார். கடன் பிரச்சினைகளை சமாளிக்கின்ற வகையில் பொருள் வரவு சீராக இருந்து வரும். மார்கழி மாதத்தின் முற்பாதியில் அதிக செலவுகளையும், பிற்பாதியில் பணவரவையும் எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பும், சலசலப்பும் மாறி மாறி இருந்து வரும்.

விவேகம் நிறைந்த பேச்சுக்களால் நினைத்த காரியத்தினை சாதித்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாக செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும். புதிய நண்பர்கள் வந்து சேர்வார்கள். ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் எதிர்பாராத பிரயாணத்திற்கு ஆளாக நேரிடும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பிள்ளைகளின் செயல்கள் ஒரு சில நேரத்தில் தர்மசங்கடமான நிலையை உருவாக்கக்கூடும். இனம்புரியாத சிந்தனைகள் மனதில் குழப்பத்தினைத் தோற்றுவிக்கலாம்.

மருத்துவ செலவுகள் உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையுடன் அவ்வப்போது சிறுசிறு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். நேர்மையான உழைப்பினால் உத்யோகஸ்தர்கள் அதிக பணிச்சுமையை எதிர்கொள்ள நேரிடும். வியாபாரிகளுக்கு லாப நஷ்டத்திற்கான விகிதாச்சாரம் சரிசமமாக இருந்துவரும். கலைத்துறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இரவினில் நிம்மதியான உறக்கமின்றி தவிக்க நேரிடும். சராசரியான பலன்களை அனுபவிக்கும் நேரம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 1, 2.

பரிகாரம்: சமயபுரம் மாரியம்மனை வழிபட்டு வாருங்கள்.

தனுசு

ஜென்ம ராசியில் சனி அடியெடுத்து வைக்கும் இந்த மார்கழியில் பிற கிரஹங்களின் சஞ்சார நிலை தனுசு ராசியினருக்குத் துணை நிற்கிறது. நினைத்த காரியத்தை நடத்தி முடிப்பதில் வேகமாக செயல்பட்டு வருவீர்கள். ராசிநாதன் குரு பகவானின் சாதகமான சஞ்சாரம் வாழ்வியல் தரத்தினை வெகுவாக உயர்த்திக்காட்டும். விரும்பிய ஃபர்னிச்சர் சாமான்கள் வீடு வந்து சேரும். வாக்கினில் உறுதியான கருத்துக்கள் வெளிப்படும். பேச்சினில் வெளிப்படும் உறுதியான கருத்துக்கள் ஒரு சில நேரத்தில் வீண் பிரச்சினைகளைத் தரக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். பொருளாதார நிலைமையில் நல்லதொரு முன்னேற்றம் காண்பீர்கள்.

உடன்பிறந்தோருடன் இணைந்து குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வரும் சொத்துப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் சந்தர்ப்பம் வந்து சேரும். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும். பெரிய மனிதர்களுடனான சந்திப்பு உங்கள் அந்தஸ்தை உயர்த்திக் காட்டும். வண்டி, வாகனங்கள் புதிதாக சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. மார்கழி மாதத்தின் பிற்பாதியில் சொத்து சேர்க்கையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.

மாணவர்களின் கல்வித்தரம் உயரும். ஞாபகமறதிப் பிரச்சினை மட்டும் உங்களை சற்றே அலைக்கழித்து வரும். பிள்ளைகளின் வாழ்வியல் தரம் உயரக் காண்பீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் முக்கியமான நேரத்தில் கைகொடுக்கும். ஆன்மிகப் பணிகளுக்காக அதிகம் செலவழிக்க வேண்டி வரும். கலைத்துறையினர் டிசம்பர் மாதத்தின் இறுதியில் தொலைதூரப் பிரயாணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. தொழில்முறையில் போட்டியாளர்களை அநாயாசமாக சமாளித்து வெற்றி கண்டு வருவீர்கள். வியாபாரிகள் குறிப்பிடத்தகுந்த தனலாபம் காண்பார்கள். சுகமான நற்பலன்களைப் பெற்றுத் தரும் மாதமாக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 3, 4.

பரிகாரம்: அமாவாசை நாளில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யுங்கள்.

மகரம்

ஏழரைச் சனியின் காலத்தில் நுழைய உள்ள உங்களுக்கு இந்த மார்கழி மாதத்தின் பிற்பாதி நற்பலன்களைத் தரும் வகையில் இருக்கும். மாதத்தின் துவக்கத்தில் சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் காரியம் வெற்றிகரமாக முடியும். ராசிநாதன் சனி பகவானின் இடமாற்றத்தினால் எல்லா விஷயங்களிலும் உங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழல் உருவாகும். எடுத்த காரியத்தை நடத்தி முடிப்பதில் ஸ்திரத்தன்மையுடன் செயல்பட்டு வருவீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் தத்துவம் நிறைந்த கருத்துக்கள் வெளிப்படும்.

அதே நேரத்தில் தம்மை யாரும் குறை சொல்லி விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையான எண்ணம் உங்கள் வார்த்தைகளில் இருந்து வரும். பொருளாதார நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நேரடியாக செல்ல வேண்டியிருக்கும். தகவல் தொடர்பு சாதனங்களினால் ஒரு சில இழப்புகளை சந்திக்க நேரலாம். வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும் அதே நேரத்தில் பிரயாணங்களின் மூலம் ஆதாயம் காண்பீர்கள். மாணவர்களின் கல்வித்தரம் மேம்படும்.

உறவினர்களால் உண்டாகும் கலகம் நன்மையில் முடியும் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. செலவுகள் அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் காரியங்கள் இனிதே நடைபெறக் காண்பீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் நேரம் இது. வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்குத் துணையாக இருந்து வருவார். தொழில்முறையில் செவ்வாய் மற்றும் குரு பகவானின் அருளால் ஸ்திரத்தன்மை காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பினை அடைவார்கள். கலைத்துறையினர் நஷ்டமடையாமல் தப்பித்துக் கொள்வார்கள். நற்பலன்களை அனுபவிக்கும் மாதமாக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 5, 6.

பரிகாரம்: தினமும் அதிகாலையில் திருப்பாவை பாடல்களை சொல்லி பெருமாளை வழிபட்டு வாருங்கள்.

கும்பம்

இந்த மாதத்தின் ஆரம்பமே அமர்க்களமான முறையில் இருக்கக் காணும் உங்களுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு வழியில் வெற்றிகரமாக நடந்தேறும். சரியான சமயத்தில் எவரேனும் ஒருவர் துணையாக நின்று உங்கள் பணிகளை எளிதாக்குவார். ராசிநாதன் சனி பகவானின் சாதகமான பெயர்ச்சி நிலை உங்களுக்கு மேலும் வலு சேர்க்கிறது. அதே நேரத்தில் டிசம்பர் மாதத்தின் இறுதியில் சற்று நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம். மனதில் தன்னம்பிக்கையும், செயலில் வேகமும் இருப்பதால் காரிய வெற்றி என்பது சாத்தியமாகி வரும். கிரஹ நிலையில் உண்டாகும் மாற்றம் நண்பர்களுக்கிடையே வீண்பிரச்சினைகளைத் தரக்கூடும்.

பிடிவாத குணத்தினை சற்று தளர்த்திக் கொள்வது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் அறிவுசார்ந்த கருத்துக்கள் அதிகமாக வெளிப்படும். உங்களின் புத்திகூர்மையை அடுத்தவர் உணரும் விதமாக பேச்சுக்கள் அமையும். பொருளாதார சூழலில் சீரான முன்னேற்றம் கண்டு வருவீர்கள். உடன்பிறந்தோருடன் இணைந்து செயல்படும் காரியங்களில் வெற்றி உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்களினால் குறிப்பிடத்தகுந்த நன்மை உண்டாகும். மாணவர்களின் கல்வி நிலையில் முன்னேற்றத்தினைக் காணலாம்.

வண்டி, வாகனங்களை வாங்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளின் செயல்கள் உங்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைந்தாலும் அவர்களின் செயல்வேகம் பெருமிதம் கொள்ளத்தக்க வகையில் இருக்கும். வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு கொள்ளும் வாய்ப்பு உண்டு. கூட்டுத்தொழிலில் அதிக கவனம் தேவை. பிதுரார்ஜித சொத்துக்களின் மூலம் ஆதாயம் கிட்டும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியமாகிறது. கலைத்துறையினர் தொழில்முறையில் சாதிக்கத் தொடங்குவர். நற்பலன்களைத் தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 7, 8, 9.

பரிகாரம்: வெள்ளிதோறும் மகாலட்சுமியை வழிபட்டு வாருங்கள்.

மீனம்

இந்த மார்கழி உங்கள் எண்ணங்களைப் பூர்த்தி செய்யும் மாதமாக அமைந்திருக்கிறது. அஷ்டம ஸ்தானத்தில் ராசிநாதன் குரு பகவான் அமர்ந்து சிரமத்தைத் தந்து வந்தாலும் மற்ற கிரஹங்களின் சஞ்சார நிலை உங்களுக்குத் துணை நிற்கிறது. எடுத்த பணியை செய்து முடிப்பதில் மற்றவர்களை விட தாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் பணி செய்து வருவீர்கள். ‘செய்வன திருந்தச் செய்’ என்பதை உறுதியுடன் கடைப்பிடித்து வருவதால் உங்களின் செயல்வெற்றி சாத்தியமாகி வரும். ஜீவன ஸ்தானத்தின் வலிமை இந்த மாதத்தில் உங்களைச் சிறப்பாக செயல்பட வைக்கும். குடும்பப் பெரியவர்கள் நற்செயல்கள் புரிவதில் உங்களுக்கு பக்கபலமாய்த் துணை நிற்பார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். கடன் பிரச்சினைகள் சற்று தலைதூக்கக் கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். பேசும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடன்பிறந்தோரால் செலவுகள் அதிகரிக்கக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது பழுதடைந்து சிரமம் தரக்கூடும். முன்பின் தெரியாத நபர்களிடம் அதிகம் பேசுவதைத் தவிர்ப்பது அவசியம். பிள்ளைகளின் செயல்களில் வேகத்தினை உணர்வீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் பணிகளை அவர்கள் திறம்படச் செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை மனதில் உருவெடுக்கும்.

மருத்துவச் செலவுகள் உண்டாகும் நேரம் என்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. மாணவர்களின் கல்வி நிலை சிறப்பான முன்னேற்றத்தினைக் காணும். உறவினர்களின் வருகை கலகலப்பைத் தரும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் காண்பீர்கள். டிசம்பர் மாதத்தின் இறுதியில் கலைத்துறையினருக்கு எதிர்பாராத பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. தொழில்முறையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவீர்கள். சுயதொழில் செய்வோருக்கு ஏற்றம் உண்டாகும். நன்மை தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 10, 11.

பரிகாரம்: ஆங்கிலப் புத்தாண்டு நாளில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யுங்கள்.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்